Thu. May 9th, 2024

அ.திமு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ. டிவியில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கோலாகலமாக துவங்கப்பட்ட நியூஸ் ஜெ., டிவி நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில், அப்போதைய அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் ஆதிக்கம் இருந்தது. அமைச்சர்கள் மூவரின் சார்பில் அவரவர் உறவினர்கள், தினசரி நிர்வாப் பணிகளை கவனித்து வந்தனர்.

எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகிய இருவரும் ஒருமித்த சிந்தனையில் இருந்ததால், பி.தங்மணியின் மருமகன் தினேஷ், நியூஸ் ஜெ. டிவி.யின் வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டினார். அவரின் நாகரிகமான செயல்பாடுகளால், செய்தி உள்ளிட்ட அனைத்து ஒளிப்பரப்பும் பார்வையாளர்களிடம் அபரிதமான ஆதரவைப் பெற தொடங்கியது.

அதிமுக.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக நியூஸ் ஜெ.டிவி இருந்தாலும் கூட, கட்சி கண்ணோட்டத்தை நியூஸ் ஜெ டிவி தாங்கி நிற்பதை விரும்பாமல், மற்ற பொதுவான தொலைக்காட்சிகள் போல, அன்றாட நிகழ்வுகள் அமைய வேண்டும் என திட்டமிட்டு, அதற்கு ஏற்ப பணியாளர்களை தேர்வு செய்தார்.

ஊடகத்துறையில் நீண்ட அனுபவமிக்கவர்கள், செய்திப்பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் நியமித்ததால், குறுகிய காலத்தில் பொது தளத்தில் நியூஸ் ஜெ., டிவியின் ஒளிப்பரப்புகள், புதிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஓராண்டை கடந்த நிலையில், லாபம் ஈட்டும் அளவுக்கு நியூஸ் ஜெ, டிவி வளர்ந்திருந்த நிலையில், ஆமை புகுந்த வீடு போல, அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணார் சி.வி.ராதாகிருஷ்ணன், நிர்வாகத்தில் தலையிட்டு ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்.

செய்திப்பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனது விசுவாசிகளை அதிக சம்பளத்தில் பணியமர்த்தினார். தகுதியற்றவர்களின் பணிநியமனத்தால் செய்திப்பிரிவில் குழப்பம் ஏற்படத் தொடங்கியது. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகளுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டாம் என்று செய்திப்பிரிவு ஊழியர்களை மிரட்டினார்.

மேலும், நியூஸ் ஜெ., டிவி அலுவலகத்திற்கே, விழுப்புரம் அதிமுக கட்சிக்காரர்களை வரவழைத்து கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்ய தொடங்கினார் சி.வி.ராதாகிருஷ்ணன். நியூஸ் ஜெ., டிவி நிர்வாகத்தை முழுமையாக சி.வி.ராதாகிருஷ்ணன் கைப்பற்றியதால், அந்த அலுவலகத்திற்கே செல்வதையே 2019 ஆம் ஆண்டிலேயே நிறுத்திக் கொண்டார் பி.தங்கமணியின் மருமகன் தினேஷ்.

சி.வி.ராதாகிருஷ்ணனுடன் தினேஷ் (வண்ண சட்டையில் இருப்பவர்)

2019- 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தான்தோன்றித்தனமாக சி.வி.ராதாகிருஷ்ணன் செயல்பட்டதால், நியூஸ் ஜெ., டிவி.யின் வருவாய் பெருமளவில் குறைந்து பல கோடி ரூபாய் அளவுக்கு நட்டத்தை சந்திக்க தொடங்கியது. இதனால், மனம் வெறுத்துப் போன அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்ட அதிமுக.வை கொத்து பரோட்டோ மாதிரி சின்னாபின்னாமாக்கியதைப் போல, நியூஸ் ஜெ. டி.வி.யையும் மாற்றிக் கொண்டிருக்கும் சி.வி.ராதாகிருஷ்ணனின் அடாவடிதனத்திற்கு முட்டுக்கட்டை போட துவங்கினார்.

ஆட்சியிலும், கட்சியிலும் விழுப்புரம் சகோதரர்களின் அடாவடித்தனம் அதிகமானபோதும், அவற்றை பொறுத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, குறுகிய காலத்திலேயே நியூஸ் ஜெ., டிவி,யை இழத்து மூடும் அளவுக்கு நிலைமை படுவேகமாக செல்வதை கண்டு மனம் நொந்து போனார். அதிமுக.வுக்கு என்று தனியாக ஒரு தொலைக்காட்சியை உருவாக்க, நூற்றுக்கணக்கான அதிமுக முன்னணி நிர்வாகிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்து கொடுத்தவர், எடப்பாடி பழனிசாமிதான்.

கடந்த ஆண்டிலும், நடப்பாண்டிலும் நியூஸ் ஜெ., டிவி நஷ்டத்தை தொடர்ந்து சந்தித்து வந்ததால், தலை தப்பினால் போதும் என்ற நிலைக்கு போய்விட்டார், சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன். நியூஸ் ஜெ, டிவி நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தவும் திணறினார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டதால், பண உதவி செய்ய சி.வி.சண்முகமும் மறுத்துவிட்டார். இதனால், தன்னிடம் உள்ள சொத்துகளை விற்பனை செய்தால்தான் நியூஸ் டிவி நிர்வாகத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலை உருவானதால், விழி பிதுங்கிப் போனார் சி.வி.ராதாகிருஷ்ணன்.

நியூஸ் டிவி நிர்வாகத்தில் குளறுபடிகள் தலைதூக்கிய நேரத்தில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மானத்தை காப்பாற்றிய கொங்கு மண்டல அதிமுக தலைவர்கள், படுபாதாளத்தினை நோக்கி போய் கொண்டிருந்த நியூஸ் ஜெ., டிவி.யையும் காப்பாற்ற, ஏற்கெனவே தொலைக்காட்சி நிர்வாகத்தில் நல்ல அனுபவம் பெற்றுள்ள பி.தங்கமணியின் மருமகன் தினேஷை மீண்டும் நிர்வாகப் பொறுப்பில் நியமித்தார் எடப்பாடி பழனிசாமி.

நியூஸ் ஜெ., தொலைக்காட்சி நிர்வாகத்தை தினேஷ் மீண்டும் கையில் எடுத்தவுடன், சத்தமில்லாமல் வெளியேறிவிட்டார் சி.வி.ராதாகிருஷ்ணன். அவரது காலத்தில் பணியமர்த்தப்பட்ட தகுதியற்ற ஊழியர்களை முதல்கட்டமாக வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளாராம் தினேஷ். வெறும் கிராபிக்ஸ் அனுபவம் மட்டுமே கொண்டிருந்த பணியாளரும் அதில் ஒருவர் என்கிறார்கள். செய்தி ஆசிரியரை விட அதிகமாக, அதாவது 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கடந்த மூன்றாண்டுகளாக சம்பளம் பெற்று வந்துள்ளார் அந்த பணியாளர்.

நியூஸ் ஜெ டிவியில் அவரது வேலை என்னவென்றால், சி.வி.ராதாகிருஷ்ணனுக்கு சொம்பு தூக்குவதுதான் முக்கிய வேலையாம். செய்தி தயாரிப்பு, ஒளிப்பரப்பு உள்ளிட்ட எந்தவொரு வேலையிலும் அனுபவம் இல்லாதவருக்கு உச்சபட்ச சம்பளம் கொடுக்க பரிந்துரைத்தவரே சி.வி.ராதாகிருஷ்ணன்தானாம். இப்படி பல ஊழியர்களை, அவரவர் தகுதிக்கு மீறிய சம்பளம் வழங்கப்பட்டு வந்ததையெல்லாம் குறைக்க சொல்லி இருக்கிறாராம் தினேஷ்.

அதிமுக கட்சி நாளிதழான நமது அம்மா.வின் நிர்வாகம் எஸ்.பி.வேலுமணி வசம்தான் இருந்து வருகிறது. இப்போது நியூஸ் ஜெ. தொலைக்காட்சியும் கொங்கு மண்டல அதிமுக தலைவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. விரைவில் அதிமுக கட்சியும் முழுமையாக கொங்கு மண்டல அதிமுக தலைவர்களிடம் வந்து விடும். எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு வியூகமும் தொடர்ந்து வெற்றி பெறுவதை பார்க்கும் போது, அதிமுக.வின் ஒரே தலைவராக எடப்பாடி பழனிசாமி, விஸ்வரூபம் எடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று மகிழ்ச்சிப் பொங்க கூறுகிறார்கள் கொங்கு மண்டல அதிமுக முன்னணி நிர்வாகிகள்.