பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தின் அரியணையில் அமர்ந்திடுவோம் என்று உறுதியான நம்பிக்கையோடு இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவே, கொரோனோ நெருக்கடிக்கு இடையே அமைதியாக நிறைவு பெற்றிடும் என்று ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார். தொண்டர்களின் எழுச்சி பிரவாகத்திற்கு இடையே முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது, ஒட்டுமொத்த திமுக.வினருக்கும் ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வராக பதவியேற்ற நாள் முதலாக கொரோனோ பெருந்தொற்று, திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாகதான் இருந்து கொண்டிருக்கிறது. உயிர்க்கொல்லி நோயான கொரோனோவை எதிர்கொள்ள, தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முழுவீச்சில இறங்கினாலும்கூட, கிராம அளவில் உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த சூழலிலும்கூட, கொஞ்சம் கூட பயமின்றி பொதுமக்கள் அலட்சியமாக சுற்றித் திரிவது சுகாதாரத்துறைக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் கொரோனோவுக்கு எதிராக தீர்க்கத்துடன் அரசு துறைகள் ஒருங்கிணைந்து போராடி வரும் சூழலில் கட்டுப்பாடற்ற மக்களினால் தொற்று பரவலைத் துண்டித்து முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவது என்பது அரசு நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாகதான் அமைந்திருக்கிறது.
கொரோனோ தொற்று பாதிப்பை காரணமாக கூறி அடுத்தடுத்து, ஊரடங்கை அறிவித்து மேலும் மேலும் ஏழை எளிய மக்களை துன்புறுத்துவது நியாயமாக இருக்காது என்ற உணர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துவிட்டார் என்பதை, இன்று காலை முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோ வழியிலான செய்தி தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது.
ஜூன் இரண்டாவது வாரம் தொடங்கும் தருவாயில் பொது முடக்கத்தினை திரும்ப பெற்றுவிட்டு, தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துவது என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துவிட்டது என்பதுதான் முதல்வரின் செய்தியில் மறைந்திருக்கும் உண்மை என்கிறார்கள், அரசு செயல்பாடுகளோடு நேரடி தொடர்பில் உள்ள தொழிலதிபர்கள்.
ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கான திட்டங்களோடு தயாராகிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் அரசு துறையில் நீண்ட அனுபவம் உள்ள அதிகாரிகள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அறிவித்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கியத்தும் கொடுப்பார். ஜூலை முதல் வாரத்தில் தமிழக சட்டமன்றத்தை கூட்டி 2021 -2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான பணிகளில் கவனம் செலுத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், உயரதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத துவக்கதில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்பதும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முக்கிய அஜெண்டா என்கிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.
முந்தைய அதிமுக ஆட்சியில், கிராம அளவிலான ஊராட்சிகளுக்கு, அதாவது 50 சதவிகித அளவுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்துவிட்டு, உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக மீண்டும் நடத்தி முடித்து விடலாமா ?அல்லது எஞ்சியுள்ள அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தி முடிக்கலாமா? என்பதும் முதல்வரின் யோசனையாக இருக்கிறதாம்.
மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான நடைமுறையை மாற்றியமைக்கும் யோசனையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருந்து வருவதாகவும், கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து மேயரை தேர்வு செய்வதற்குப் பதிலாக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நேரடியாக மேயரை தேர்ந்தெடுத்ததைப் போல, வரும் தேர்தலிலும் நடைமுறைப்படுத்த உள்ளாட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யலாமா ? என்பது குறித்தும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், திமுக வெற்றிக்காக உயிரைக் கொடுத்து தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் என கிராமங்களில் இருந்து மாநகரங்கள் வரை நேர்மையாகவும், மிகவும் விசுவாசத்தோடும் இருக்கும் திமுக நிர்வாகிகளை தேர்வு செய்து வேட்பாளராக அறிவிக்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். பதவிக்கோ, புகழுக்கோ, பணத்திற்கோ ஆசைப்படாத திமுக நிர்வாகிகளை தேர்வு செய்து திமுக தலைமைக்கு வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைக்கும் பணியில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மூத்த நிர்வாகிகளை நியமிக்கும் திட்டமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ளதாம்.
சிங்காரச் சென்னையை உருவாக்க வேண்டும் என்பதுதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட கால கனவு. முந்தைய மாநகராட்சி தேர்தலின் போது வைத்த பிரதான வாக்குறுதியும் கூட. சென்னை மேயராக அவர் இரண்டு முறை பதவியில் இருந்த காலத்தில் அந்த திட்டம் முழுமை பெறாததால், தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூலம் அதை நிறைவேற்ற முடிவெடுத்திருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.
ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் மாநகராட்சித் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை நிறுத்தி வெற்றிப் பெற வைத்து சென்னை மாநகராட்சி மேயராக்கி, தனது கனவான சிங்காரச் சென்னை திட்டத்தை நிறைவேற்றி காட்டுவார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் அண்ணா அறிவாலய முன்னணி நிர்வாகிகள். அதற்கு ஏற்பதான் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளும் இருக்கின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணவோட்டத்தை புரிந்துகொண்டுதான், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதிக்குட்பட்ட மயானங்கள், குடிசைவாழ் பகுதிகள் ஆகியவற்றில் தூய்மைப் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார். அதேபோல, மற்ற தொகுதிகளிலும் துப்புரவுப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகளை விரட்டிக் கொண்டிருக்கிறார்.
குடிசைப் பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களை ஆய்வு செய்வதாகட்டும், குடிநீர் இணைப்புகள் மூலம் விநியோகிகப்படும் தண்ணீர், சுகாதாரமான முறையில் இருக்கிறதா ? என்று சுவைத்துப் பார்ப்பதில் இருக்கும் அக்கறையாகட்டும், சென்னை மாநகராட்சிக்கு உதயநிதி ஸ்டாலினை விட வேறு ஒரு தகுதியான மேயர் வேட்பாளர் கிடைத்து விடுவாரா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
காலையில் வீட்டை விட்டு புறப்பட்டால் இருட்டும் நேரத்தில்தான் மீண்டும் வீடு திரும்புகிறார். சுட்டெரிக்கும் அக்னி வெயிலைப் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சுற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., வின் வேகத்திற்கு, திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல, சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் கூட ஈடுகொடுக்க முடியவில்லை.
சென்னை மாநகராட்சி மேயராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றால், சிங்காரச் சென்னை என்பதை இந்த தலைமுறை மக்களாலேயே ஆசை தீர பார்த்துவிட முடியும் என்று சென்னை மாநகர மக்களே ஆர்வமாக பேச தொடங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் கொரோனோ தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட திமுக தலைமை தயாராகி வருகிறது. அதற்கு ஏற்பட தேர்தல் நடவடிக்கைகளிலும் இப்போதிருந்தே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அலுவலக அதிகாரிகளும் பணிகளை துரிதப்படுத்த துவங்கிவிட்டார்கள் என்கிறார்கள் உதயநிதி ஸ்டாலிக்கு மிக நெருக்கமான திமுக இளைஞரணி நிர்வாகிகள்…