முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு எதிர்க்கட்சித்தலைரவாக இருக்கிறார் என்றால், அதற்கு கைகொடுத்தது கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள்தான்.
கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரையிலான மாவட்டங்களில்தான் அதிமுக அமோக வெற்றிப் பெற்றது.
கொங்கு மண்டலத்தில் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் வெற்றிப் பெற்றதால்தான், எதிர்க்கட்சித்தலைவர் பதவியை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு விட்டுகொடுக்காமல் கடைசி வரை விடாபிடியாக இருந்து கைப்பற்றிக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக அமைச்சர்களில், ராசிபுரம் டாக்டர் சரோஜாவை தவிர்த்து அனைத்து முன்னாள் அமைச்சர்களும் வெற்றி வாகை சூடியவர்கள்.
அதிமுக.வின் கோட்டையாக திகழ்ந்த கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில்தான் கொரோனோ தொற்று இன்று உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
ஆளும்கட்சிக்கு எந்தளவுக்கு பொறுப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்க்கட்சியான அதிமுக.வுக்கும் கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் அதீத கவனம் செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது.
ஆனால், எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமி, கொரோனோ தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது ஆளும்கட்சியான திமுக.வின் தலையெழுத்து என்று கூறிவிட்டு, அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்திற்கு சென்று பதுங்கிக் கொண்டார்.
கடந்தாண்டு கொரோனோ பாதிக்கப்பட்டபோது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை மாதந்தோறும் வழங்கி தொகுதி மக்களை அசத்தினார்கள்.
அதுவும், பவானி தொகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், உணவுப் பொருட்களுடன், சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் உள்ள தனது தோட்டத்தில் விளைந்த முட்டைகோஸ்களை பறித்து சிறிய ரக வாகனங்களில் ஏற்றி, தொகுதி மக்களுக்கு வீடு வீடாக வழங்கி, பவானி தொகுதி வாக்காளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நவீன வள்ளலாக கடந்த ஆண்டு கருப்பண்ணன் அவதாரம் எடுத்திருந்தாலும், அவரின் கட்டுப்பாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் இருந்த சுற்றுச்சூழல் துறை, ஊழல்களால் நாறிப்போனது..
சுற்றுச்சூழல் துறையில் எந்தளவுக்கு லஞ்சம் பணம் விளையாடியது என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல, கடந்தாண்டு பல்வேறு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளே உதாரணமாக இருக்கின்றன.
வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் 3.25 கோடி பணம், 3 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் தன்ராஜ் வீட்டில் 63 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.
பொறியாளர்கள் வீடுகளிலேயே கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது என்று சொன்னால், அந்த துறைக்கே அமைச்சராக இருந்தவர் எந்தளவுக்கு லஞ்சப் பணத்தில் மஞ்சள் குளித்திருப்பார்.
மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறி போனதால் விரக்தியடைந்து விட்டார் கருப்பண்ணன். தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை கருப்பண்ணன்.
கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள், நலத்திட்ட உதவிகள் என எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் கருப்பண்ணன்.
கடந்தாண்டைப் போல உணவுப் பொருட்கள் வழங்கலாமே என்று அதிமுக நிர்வாகிகள் வீடு தேடி போய் கேட்டதற்கு எரிந்து விழுந்திருக்கிறார் கருப்பண்ணன்.
அப்போதும் அடங்காத ஒன்றிய நிர்வாகிகள், கடந்தாண்டைப் போல தாளவாடி தோட்டத்தில் விளைந்திருக்கும் முட்டைகோஸையாவது வண்டியில் ஏற்றி தொகுதி மக்களுக்கு கொடுக்கலாமா என்றும் மனிதநேய உணர்வோடு கேட்டிருக்கிறார்கள்.
அதைக்கேட்டு மேலும் ஆத்திரமடைந்த கருப்பண்ணன், தோட்டத்திலேயே முட்டைகோஸ் அழுகிப் போனாலும் பரவாயில்லை. காசு செலவு செய்து அவற்றை பறித்து வந்து தொகுதி மக்களுக்கு கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
ஐந்து வருஷம் கழிச்சி எலெக்ஷன் வரும். அப்போது போய் மக்களை பார்த்தால் போதும் என்று கூறி பவானி தொகுதி அதிமுக நிர்வாகிகளை விரட்டியடித்துவிட்டார் கருப்பண்ணன்.
தேர்தல் பிரசாரத்தின் போது வீடு வீடாக வந்து வாக்கு கேட்டு கெஞ்சிய கருப்பண்ணன், தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, கொஞ்சமாவது மனசாட்சியிருந்தால், நன்றி சொல்ல வந்திருக்க வேண்டும்.
கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் உயிரிழப்புகள் நடந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் கூட ஆறுதல் சொல்ல வராத அளவுக்கு கருப்பண்ணனின் இதயம் கல்லாகி போய்விட்டதே… தொகுதி மக்களின் துயரத்தில் பங்கெடுத்து, முட்டைகோஸ் போன்ற சிறிய உதவிகள் செய்ய கூட அவருக்கு மனம் இல்லாமல் போய்விட்டதே..
அழுகிய முட்டைகோஸை வாங்கி சமைத்து சாப்பிடும் அளவுக்கு நாங்கள் இன்னும் மானம் மரியாதையை இழக்கவில்லை.
வாக்குப் போட்டது அவருக்காக அல்ல. மறைந்த எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் மீது தாங்கள் வைத்துள்ள உண்மையான பக்திக்கும், விசுவாசத்திற்காகவும்தான் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டோம்.
கருப்பண்ணன் வேண்டுமானால் சுயநலத்துடன் நடந்து கொள்ளட்டும். நாங்கள் இரட்டை இலை மீது கொண்டுள்ள விசுவாசம் என்றைக்குமே குறையாது என்று கண்ணீர் ததும்ப பேசிக் கொண்டிருக்கிறார்கள் பவானி தொகுதி வாக்காளர்கள்.