அ.திமு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை சட்டமன்றத் தேர்தலோடு முடிந்துவிடும் என்று மன்னார்குடி கும்பல் நினைத்ததைப் போலவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வமும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்தார். இருவரின் எதிர்பார்ப்புககு மாறாக எல்லாம் பொய்துப் போன பிறகும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக மாறியிருப்பதுதான், அவரது எதிர்ப்பாளர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
அரசியல் பயணத்தில் மண்ணைக் கவ்வியிருந்தாலும், ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பலவீனமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அடித்தால், அவரை அடியோடு வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டு எதிர்ப்பாளர்கள் தங்களுக்குள்ளேயே உள்ள குரோதத்தை மறந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க ஒன்று திரண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாதது.
ஆளும்கட்சியாக இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்ததைவிட பலமடங்கு வலிமை அடைந்தவராக இப்போது காட்சியளிக்கிறார் எடப்பாடியார். அவரை இனிமேல் வீழ்த்துவது என்பதெல்லாம் கனவாகதான் போகுமே தவிர, ஒருபோதும் நனவாகாது என்று ஓங்கி அடித்து பேசுகிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசிகள்.
அவரின் ஆதங்கத்தை தொடர்ந்து பேச அனுமதித்தோம்..மனதில் இருப்பதை எல்லாம் மடைதிறந்த வெள்ளம் போல கொட்டினார்கள்…
பத்து,, பதினைந்து நாட்கள் அரசியல் பேச்சின்றி அமைதியான வாழ்வு வாழ்வதற்காகதான் கடந்த வாரம் தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்குச் சென்றார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி. 2017 ஆம் ஆண்டில் இருந்து முதலமைச்சராக இருந்தவரை அவர் பலமுறை எடப்பாடிக்கு சென்றிருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று அவர் ஆய்வு செய்ததில்லை.
கடந்த ஆண்டு கொரோனோ தொற்று தாக்குதல் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும் கூட எடப்பாடி அரசு மருத்துவமனையை இ.பி.எஸ் எட்டிப்பார்த்ததில்லை. ஆனால், கடந்த வாரம் தனது கிராமத்திற்குச் செல்லும் வழியில், எடப்பாடி அரசு மருத்துவமனையை பெயரளவுக்குப் ஆய்வு செய்துவிட்டு, எதிர்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு எதிராக குற்றங்களை அடுக்கிவிட்டு சிலுவம்பாளையத்திற்கு சென்று தங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
அங்கு சென்று அவரை சந்தித்த அதிமுக நிர்வாகிகளைக் கூட கடிந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பத்து நாட்கள் அமைதியாக இருங்கள். கொரோனோ தொற்று குறையட்டும். அதன் பிறகு கட்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கறாராக சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு உடல்ரீதியாக ஏற்பட்டிருக்கிற நலிவுகளை உணர்ந்துகொண்ட அதிமுக நிர்வாகிகள் அமைதியாக தங்கள் ஊர் திரும்பியிருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி, கடந்த ஜனவரியில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததால், அவரின் உடல் மிகவும் நலிவடைந்திருக்கிறது. இதற்கிடையில் குடலிறக்க கோளாறுக்கும் சிகிச்சைப் பெற்றதால், குறைந்தது ஜூன் 15 ஆம் தேதி ஓய்வுப் பெறும் எண்ணத்தோடுதான் தனது கிராமத்திற்கு சென்று தங்கினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், அவரின் ஓய்வெடுக்கும் திட்டத்திற்கு வேட்டு வைத்துவிட்டார் வி.கே.சசிகலா. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்முதலில் வெளியான அவரின் ஆடியோ பேச்சு, எடப்பாடி பழனிசாமியை ஆடிப்போக செய்துவிட்டது. மீண்டும் துளிர்க்கவே மாட்டார் டிடிவி.தினகரன் என்றளவுக்கு தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டதால், நிம்மதியடைந்திருந்த நிலையில், திடீரென்று சசிகலாவின் ஆடியோ வெளியானதால், புதுசா தலைவலி சசிகலாவிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை எடப்பாடி பழனிசாமி.
வி.கே.சசிகலாவின் அரசியல் ஆட்டத்தை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்படும் கே.பி.முனுசாமி மூலம், சசிகலா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்து, அவரை பேட்டியளிக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
ஆனாலும், அதன் பிறகும் நாள்தோறும் சசிகலாவின் ஆடியோ வெளியானதையடுத்து, சென்னையைவிட்டு எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு சசிகலாவுக்கு எதிராக அரசியல் செய்வது ஆபத்தாகிவிடும் என்று கருதியே, தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் சென்னைக்கு புறப்பட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
வி.கே.சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பல்களுக்கு எதிராக கே.பி.முனசாமி உள்ளிட்ட முன்னணி தலைவர்களை பேச விட்டால், எரிகிற கொள்ளியை அடக்க முடியாது. தானே புரட்சியாளராக மாறினால்தான் எதிரணியினரை வீழ்த்த முடியும் என்று வீர முழக்கம் எழுப்பிவிட்டுதான் சென்னைக்கு புறப்பட்டிருக்கிறார்.
வி.கே.சசிகலா உள்ளிட்ட சதிகாரர்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆடியது உண்மையான தர்மயுத்தம் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்ற தன்னையே பலிகொடுக்க தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தற்போது அவர் மேற்கொண்டிருக்கும் தர்மயுத்தம்தான், சசிகலா என்ற தீயசக்திகளை மீண்டும் அதிமுக.வில் தலையெடுக்காமல் ஒட்டுமொத்தமாக புதைகுழியில் அடக்கம் செய்யும் என்று ஆவேசமாக காட்சியளிக்கும் அவர், தான் தொடங்கியுள்ள உண்மையான தர்மயுத்த போராட்டத்தினால் எழும் பேராபத்தை கண்டு அட்ரஸ் இல்லாமல் போகப் போகிறார் சசிகலா என்று கர்ஜிக்க தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார் அவரது சேலத்து விசுவாசி.
சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்தலுக்குப் பின்னர் மீண்டும் அவரே பேசினார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திரும்ப திரும்ப சொல்லி வரும் ஒரே தத்துவம்., அதிமுக.வை பொதுமக்கள் கைகழுவி விடவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை என்ற இந்த மூன்றும் இன்றும் பொதுமக்களிடம் உயிர்ப்புடனேயே இருந்து கொண்டிருக்கிறது. அதனை முழுமையாக அழிக்க இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
அதிமுக.வில் இருக்கும் கட்சி நிர்வாகிகளால் அதிமுக அசூர வளர்ச்சிப் பெறவில்லை. பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையால்தான் அதிமுக இன்றைக்கும் செல்வாக்கோடு இருக்கிறது. அதிமுக எனும் கட்சி மூலம் உயரத்திற்கு வந்த தலைவர்கள், அதிமுக.வுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, இல்லையோ.. வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாகவும், அவர்களின் நன்றிக்குறியவர்களாகவும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிபட்டவர்களாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததால்தான் அதிமுக இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கிறது.
வி.கே.சசிகலா போன்றவர்களால் ஒருபோதும் தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்காது. அதை நாங்கள் எல்லாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் அணிவகுத்து வந்தால், இந்த எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு எந்த உயரத்தில் இருக்கிறாரோ, அதே உயரத்திற்கு வேறு சாதாரண அதிமுக நிர்வாகியால் கூட எதிர்காலத்தில் வந்து விட முடியும்.
ஆனால், மீண்டும் மன்னார்குடி குடும்பத்தின் பிடியில்தான் அதிமுக இருக்க வேண்டும் என்று விரும்பினால், ஆட்சியில் இருக்கும் திமுக., தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுக.வை அழிக்காமல் விடாது.. அதுபோன்ற நிலை அதிமுக.வுக்கு ஏற்படுவதை தான் உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் என்று வீராவேசமாக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.
அவரின் ஆவேசம்தான் எங்களை எல்லாம் அவரின் தலைமையின் கீழ் செயல்பட அணிவகுக்க வைக்கிறது என்று உணர்ச்சிப் பொங்க கூறி முடித்தார் சேலம் அதிமுக முன்னணி நிர்வாகி..
அக்னி நட்சத்திரம் முடிந்திருக்கலாம்.. ஆனால், அதிமுக.விற்குள் இப்போதுதான் அக்னி தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது…