தும்மளஹள்ளி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கொரோனோ பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த முகாமை சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால், முகாமைச் சேர்ந்த யாரும் வெளியேற முடியாததால், உணவுப் பொருள்கள் இன்றி தவித்தனர். இதுதொடர்பாக, முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாங்கள் அனுபவித்து வரும் துயரத்தை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்தார். அதனைப் பார்த்த தருமபுரி திமுக எம்.பி மருத்துவர் செந்தில்குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இன்று நண்பகலுக்கு முன்பாகவே முகாமைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உணவுப்பொருள்களையும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் வாங்கி, அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இத்தனைக்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக கட்சிகள்தான் வெற்றிப் பெற்றுள்ளன. முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் வெற்றிப் பெற்ற பாலக்கோடு தொகுதியும், இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி வெற்றிப் பெற்ற தொகுதியும் இதே மாவட்டத்தில்தான் இருக்கிறது.
இப்படி அதிமுக, பாமக.வைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள், ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வராத போது, திமுக எம்.பி. மருத்துவர் செந்தில்குமார் எடுத்துள்ள மனிதநேய நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.