Sun. Apr 20th, 2025

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100 வது நாளில், காவல்துறையினர் கண்மூடித்தனமாக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மே 22 ஆம் தேதி நடைபெற்ற கொடூர நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று தூத்துக்குடி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி, தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கலந்துகொண்டு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வு தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள கனிமொழி எம்.பி., அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காவல்துறையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மதுரையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் வாரிசுகள் மற்றும் கொடுங்காயமடைந்தவர்களின் வாரிசுகள் என மொத்தம் 17 பேருக்கு அரசு பணிக்கான நியமனங்களை வழங்கினார் என்பது நினைவுக்கூறத்தக்கது.