சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வாரமாக தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் நாள்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் குறைகளையும் கேட்டு, உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார். மேலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வரும் அவர், கொரோனோ தடுப்பூசி முகாம்களையும் அமைத்து தொகுதி மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் அவர்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தினார்.
இதனிடையே, சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிறப்புச் சிகிச்சை மையத்தைத் பிரத்யேகமாக அமைக்கும் பணியை தொடங்கினார். கடந்த பல நாட்களாக இடைவிடாமல் நடைபெற்ற பணி, முழுமையடைந்து, திறப்பு விழாவுக்கு தயாரானது.
சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாள்கள் ஆய்வு மேற்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அந்த சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்.பி.தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த மையத்தில் ஆக்சிஜன் வசதி, வெண்டிலேட்டர் வசதி மற்றும் 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் கண்காணிப்பில் கொரோனோ தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக மையத்தின் நிர்வாகி தெரிவித்தார்.
