Mon. Nov 25th, 2024

சேலம் மாவட்ட நிர்வாக வரலாற்றில் இதற்கு முன்பும் இதற்கு பின்பும் இப்படியொரு ஆட்சியரை சந்தித்திருக்கவோ, சந்திக்கவே முடியாத அளவுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஆட்சியர் ராமன்.

ராமன் ஐஏஎஸ்….

2010 ஆம் ஆண்டில் பணி மூப்பின் அடிப்படையில் ஐஏஎஸ் அந்தஸ்தைப் பெற்ற இவர், அதன் பிறகு பணியாற்றிய இடங்களில் எல்லாம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடாமல், ஆளும்கட்சியினரின் கண் அசைவுக்கு ஏற்ப, பணிபுரிந்திருக்கிறார். ஆளும்கட்சி மீதான அவரின் விசுவாசத்திற்கு பரிசளிக்கும் விதமாக 2019 ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமித்து உத்தரவுப் பிறப்பிக்கிறார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

யாரை மாற்றிவிட்டு இவர் நியமிக்கப்பட்டார் தெரியுமா? வடமாநிலத்தைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி என்ற மனிதநேயமிக்க அதிகாரியை மாற்றிவிட்டுதான், அவர் ஆட்சிப்புரிந்த இருக்கையில் ராமன் ஐஏஎஸ்.ஸை அமர வைத்தார் இ.பி.எஸ்.

சேலம் மாவட்டத்தில் குறுகிய காலமே பணிபுரிந்தாலும் கூட, மக்களின் மனங்களை வென்றவராக மாறிப் போனார் ரோகிணி ஐஏஎஸ். விளிம்பு நிலையில் வாழும் மனிதர் கூட, அன்றைக்கு ஆட்சியரை எளிதாக சந்தித்து, தங்கள் துயரங்களுக்கு விடிவு காண முடிந்தது. அன்றைக்கு சேலத்தை வாட்டி வதைத்த மர்மநோய்க்கு கிராம மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட போது, மாவட்டம் முழுவதும் சுற்றி சுற்றி வந்து அவர்களுக்கு நம்பிக்கையளித்தார். உற்ற உறவைப் போல மக்களின் கண்ணீரைத் துடைத்தார் ரோகிணி ஐஏஎஸ்.

மக்கள் சேவையில் மட்டுமல்ல, ஆட்சிப் பணியிலும் நேர்மையை முழுமையாக கடைப்பிடித்தார். 2019ல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெற்ற போது, தேர்தல் ஆணையத்தின் விதிகளை முழுமையாக கடைப்பிடித்து, ஆளும்கட்சியான அதிமுக.வுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் ரோகிணி ஐஏஎஸ்.

அவரின் அதிரடியால் ஆட்டம் கண்ட சேலம் அதிமுக, ரோகிணி ஆட்சியராக தொடர்ந்து பணிபுரிந்தால், தாங்கள் நினைத்தவாறு கொள்ளையடிக்க முடியாது என்று அலறினார்.அதன் காரணமாகவே ரோகிணியை சேலத்தில் இருந்து தூக்கியடித்தார் அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்.

மக்களின் ஆட்சியராக பணியாற்றிய ரோகிணி ஐஏஎஸ் அமர்ந்த அரியாசனத்தில் வந்து அமர்ந்தார் எஸ்.ஏ. ராமன். தமிழ் மண்ணில் பிறந்த அவருக்கு சொந்த மக்களின் கூக்குரல் கேட்கவே இல்லை. ஆட்சியாளர்களுக்கு சேவையாற்றுவதிலேயே திருப்திபட்டுக் கொண்டார். பிரதான எதிர்க்கட்சியான திமுக நிர்வாகிகளையோ, திமுக எம்.எல்.ஏ, எம்.பி. ஆகிய மக்கள் பிரதிநிதிகளைக் கூட சந்திக்காமல் பல நேரங்களில் புறக்கணித்தவர் ஆட்சியர் ராமன்.

அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வரும்போதெல்லாம் செய்தியாளர்களைச் சந்தித்து தனது ஆட்சியின் சாதனைகளை விவரித்தார். அதேசமயத்தில், எதிர்க்கட்சியினருக்கும் கூட சில நேரங்களில் பதிலளித்தார். ஆனால், தான் பதவியேற்ற 2019 ஜூலை மாதத்தில் இருந்து நேற்று வரை செய்தியாளர்களை சந்திப்பது என்றாலே, ஆட்சியர் ராமனுக்கு வேப்பங்காயாகதான் இருந்தது.

ஆட்சியராக இல்லாமல், அதிமுக வேட்டி கட்டிய மாவட்ட செயலாளராகவே பணிபுரிந்து இ.பி.எஸ்.ஸுக்கு தனது எஜமானன் விசுவாசத்தை காட்டினார். மக்கள் வரிப்பணமான சம்பளத்தைவிட, ஆளும்கட்சியினரான அதிமுக.வினரிடம் இருந்து கிடைத்த ஆதாயத்தையே பெரிதாக விரும்பினார்.

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியரும் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு வாக்குப்பதிவு தொடர்பான நம்பிக்கையை அளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஆனால், சேலம் ஆட்சியர் ராமன் ஒருமுறை கூட செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை.

வாக்குப்பதிவு முடிந்த பிறகும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த ஆட்சியர் ராமன், அவர் சார்ந்த சமுதாயத்தினர் ஏற்பாடு செய்த அனைத்து விழாக்களிலும், ஆட்சியருக்கு உரிய இலக்கணத்தை தூக்கியெறிந்துவிட்டு கலந்துகொண்டு, அவர் சார்ந்த சமுதாய மக்களை மட்டும் குஷிப்படுத்தினார். சேலத்தில் அவர் பணிபுரிந்த காலம் முழுவதும் ஆட்சியருக்குரிய கௌரவத்தையே கேலிப் பொருளாக்கி உள்ளார்.

ஏப்ரல் 6 ல் வாக்குப்பதிவு முடிந்த நாளில் இருந்து தேர்தல் முடிவு வெளியான மே 2 ஆம் தேதி வரை கிட்டதட்ட ஒருமாத காலத்தில் ஆட்சியர் ராமனுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அந்த காலத்தில் கொரோனோ தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. அதைப் பற்றி எந்த சிந்தனையும் இன்றி மௌன சாமியாக அமர்ந்திருந்தார் அவர். கொரோனோ தொற்றுப் பரவல் குறித்து சேலத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் ராமனின் மெத்தனப் போக்கை கண்டித்தது ஒட்டுமொத்த சேலம் மாவட்ட அரசு நிர்வாகத்திற்கே அவமானம் என்று கூறுகிறார்கள் சேலத்தில் உள்ள அரசு அதிகாரிகள் சிலர்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்தோ, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தோ அனைத்து துறை அதிகாரிகளைக் கூட்டி ஒருமுறை கூட ஆலோசனை நடத்தவில்லை ஆட்சியர் ராமன் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், கொரோனோ பரவலில் அவர் காட்டிய அளவுக்கு அதிகமான அலட்சியத்தால்தான் சேலத்தில் இன்றைக்கு திரும்பிய திசையெங்கும் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.

தனக்கு முன்பு ஆட்சிப் புரிந்த ரோகிணி ஐஏஎஸ், மக்கள் நலன் சார்ந்து எடுத்திருந்த அத்தனை திட்டங்களையும் புறக்கணித்துவிட்டு, தனிக்காட்டு ராஜாவாக நடைபோட்டார். மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத ஆட்சியர் ராமன், ஆளும்கட்சியின் பகுதி,வட்டம், மாவட்டம் என அனைத்துதரப்பு நிர்வாகிகளும் சந்தோஷப்படுத்தும் வகையில், அரசு விதிகளுக்கு மாறாக பல காரியங்களை செய்து தந்தவர் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சேலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள்.

ஆளும்கட்சியினரைக் கண்டால் சப்த நாடியும் ஒடுங்கிப் போன ஒரு ஆட்சியரை இதற்கு முன்பு சந்தித்தது இல்லை. வரும் காலத்திலும் சந்திக்கக் கூடிய அவலம் ஏற்பட்டுவிடாது என்று நொந்து கொள்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேலம் மாவட்ட ஆட்சியர் இருக்கைக்கு அவப்பெயர் தேடி தந்த ராமனை, திமுக ஆட்சி தூக்கியடித்திருக்கிறது. அவரின் இடத்திற்கு, சமூக நலத்துறையின் இணைச் செயலாளர் கார்மேகம் ஐஏஎஸ்.ஸை நியமனம் செய்து தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவை கண்டு சேலம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கார்மேகம் ஐஏஎஸ்…

2003 ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக கார்மேகம் பணியாற்றிய போது தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். அதேபோல, அரசு பள்ளியில் குறட்டை விட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் பெருமக்களை எல்லாம் விரட்டி விரட்டி வெளுத்தவர்.

அரசுப் பணியில் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் கார்மேகம் ஐஏஎஸ்., நெருக்கடியான கொரோனோ காலத்தில் சேலம் ஆட்சியராக நியமிக்கப்பட்டிருப்பதால், கொரோனோ தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன், மருத்துவக் கட்டமைப்பு மேம்படுவதுடன், தங்கு தடையின்றி அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை கிடைப்பதும் உறுதிப்படுத்தப்பட்டு விடும் என்று மகிழ்ச்சியான குரலில் கூறுகிறார்கள், அரசியல் சார்ப்பற்ற தன்னார்வலர்கள்.

One thought on “தேர்தலுக்கும் முன்பும் பின்பும் வாயை திறக்காத முன்னாள் சேலம் ஆட்சியர் ராமன் ஐஏஎஸ்…. கொரோனோ தொற்று வேகமெடுத்தபோதும் மக்கள் வரிப்பணத்தில் குளிர்காய்ந்த உண்மையான அரசு அதிகாரி..”

Comments are closed.