Tue. May 7th, 2024

வீதிகளில் திரியும் ஆதரவற்றவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முடிவெட்டி சமூக சேவை செய்யும் நெல்லை தொழிலதிபர்.

நெல்லை சாந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கூலிங் டைல்ஸ் ஏஜென்சிஸ் வணிகம் செய்து வருகிறார். சமூக சேவைகளில் ஆர்வமுடையவர். JCI என்ற அமைப்பில் பாளையங்கோட்டை கிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் வீதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டால் அவர்களுக்கு உணவு மற்றும் உடை அளிப்பதோடு அவர்களுடைய முடியையும் வெட்டிவிடும் சமூகப் பணியை செய்து வருகிறார். நீண்ட காலம் குளிக்காமல் இருப்பவர்களுடைய முடியை வெட்டுவது என்பது எளிதான செயல் அல்ல. அவை துர்நாற்றம் அடிப்பதோடு, கடினமாகவும் இருக்கும். முடி வெட்டும் தொழிலில் இருப்பவர்கள் கூட செய்ய தயங்கும் விஷயத்தை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். அதையும் ஆர்வமாக, தொழில்முறை சிகை அலங்கார கலைஞர்கள் போல நேர்த்தியாக செய்கிறார்.

தொழிலதிபர் செல்வராஜ்

நெல்லை டவுணில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொரானா காலகட்டத்தில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சேவை அமைப்புகளின் மூலம் மீட்டு நெல்லை மாநகராட்சி அவர்களுக்கு உணவு வழங்கி பராமரித்து வருகிறது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கடி செல்லும் செல்வராஜ் தகுந்த உடைகளை அணிந்துக்கொண்டு முடிதிருத்தும் கருவிகளோடு களத்தில் இறங்கி அங்குள்ள மனநலம் குன்றியோர் மற்றும் ஆதரவற்றோருடைய முடியை வெட்டி அவர்களை குளிப்பாட்டியும் அழகு படுத்துகிறார். தாய்மைப் போன்ற குணங்கள் இதுபோன்ற நிகழ்வுகளின் போதுதான் வெளிப்படுகிறது.

மனிதநேயமிக்க இந்த சேவையில் எப்படி ஆர்வம் என்று செல்வராஜி டம் கேட்டபோது,
“என்னால் முடிந்த வகையில் சமூகப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் வருகிறேன். தொழில் நிமித்தமாக நான் காரில் செல்லும் பொழுது சாலையோரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், ஆதரவற்றோர்களும் பரிதாபமாக அமர்ந்து இருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.

கடந்த சில வருடங்களாக அவர்களுக்கு புத்தாடைகளை வழங்குவதோடு அவர்களுக்கு முடியையும் வெட்டி விடுகிறேன். அவர்களில் பெரும்பாலோனோர் சரியான முறையில் குளிப்பதில்லை. இதனால் தலையில் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்து தூசி, அழுக்கு நிரம்பி அவர்கள் நோய்வாய்ப்பட அது காரணமாக அமைகிறது. எனவே அவர்களுக்கு என்னால் முடிந்த வரையில் தலைமுடியை வெட்டி விடு வேன்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது மனதிற்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது” என்று சொன்னார்.

சாலைகளில் திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவரை பார்த்துவிட்டு கடந்து செல்லும் ஏராளமான மனிதர்கள் மத்தியில் தன்னால் முடிந்த உதவியைச் செய்யும் செல்வராஜ் அவர்களை மனதார பாராட்டுவோம்.

சிறப்புக் கட்டுரை டி. ஜவஹர்.,
மூத்த ஊடகவியலாளர், திருநெல்வேலி…