சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், புதுச்சேரி ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு, சிறப்பாக சேவையாற்றி வரும் செவிலியர்களுக்கு கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஆளுநர், இன்றைக்கு கொரோனோ தொற்று தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களில் பெரும்பான்மையானோர் இளைஞர்களாகதான் இருக்கிறார்கள். இளம்தலைமுறையினர் கொரோனோ தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுவது கவலையளிக்கிறது. அதேநேரத்தில், இளம்தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொரோனோ தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, எப்போதும் முகக்கவசத்தை தவறாமல் அணிய வேண்டும்.
முகக்கவசம்தான், கொரோனோ தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் முதல் கவசம். இரண்டாவதாக தனிமனித இடைவெளி முக்கியம். அவசியம் இன்றி கூட்டமாக இருக்கும் இடத்திற்குச் செல்லக் கூடாது. தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல நேரிடும் போது தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இதற்கடுத்து, அனைத்து தரப்பினரும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிவதை முழுமையாக கடைப்பிடிக்காமல் இருந்தால், கொரோனோவை நம்மால் வெல்ல முடியாது.
கொரோனோ பரவலை கட்டுப்படுத்தவும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை வழங்கவும் புதுச்சேரி அரசு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.