Sun. Apr 20th, 2025

மருத்துவர் ராமானுஜம் Ramanujam Govindan மருத்துவ அறிவுரை இதோ…..

கொரோனா தொற்று பலருக்கு தொண்டை, மூக்கிலேயே இருந்துவிட்டுச் சென்றுவிடுகிறது. சிலருக்கு நுரையீரலுக்குச் சென்று நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தி விடுகிறது. நுரையீரல் செல்களை அழிப்பது மட்டுமின்றி ரத்தக்குழாய்களில் ரத்த உறைவையும் ஏற்படுத்துகிறது. அதுதான் மரணத்திற்கு முக்கிய காரணம்.

நுரையீரல் பாதிப்பு யாருக்கு ஏற்படுகிறது?

எப்போது ஏற்படுகிறது என்பதைக் கணிப்பது மிகக் கடினமானது.

கடந்தாண்டு கொரோனோ பரவலின் போது 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு வந்த நுரையீரல் பாதிப்புகள் இப்போது 30 – 40 வயதினருக்கே, அதுவும் இணை நோய்கள் இல்லாதவர்களுக்கும் வருகிறது. பொதுவாக காய்ச்சல் மற்றும் தொண்டைவலி ஆரம்பித்த ஐந்து நாட்கள் அல்லது ஒருவாரத்திற்குள் நுரையீரலில் பாதிப்புகள் வந்து விடுகின்றன.

நுரையீரலில் 20-40% பாதிப்புகள் வரை இருந்தால் காப்பாற்றலாம். அதற்குமேல் கூடுதல் ஆக கடினமாகிக்கொண்டே போகும்.இந்த நுரையீரல் பாதிப்பு லேசாக இருக்கும்போதே முக்கிய சிகிச்சைகள் கொடுத்தால்தான் பலன் உண்டு.

அவை

1. ரெம்டெஸ்விர்- காலம் கடந்தால் இதனால் பலன் இல்லைஇல்லை

2. ஆக்ஸிஜன் – இதுவும் காலம் கடந்தால் பலன் இல்லை.]

3. ஸ்ட்டீராய்டு

4. ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகள்.- (Heparin, Aspirin, Clopidogrel) இவை நுரையீரலில் கொரோனாவால் ஏற்படும் ரத்த உறைவுகளைத் தடுக்கின்றன.

லேசாகக் காய்ச்சல் உடல்வலி ஆரம்பித்த உடனேயே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். ஆக்சிஜன் அளவைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர், CRP, Ddimer போன்ற ரத்தப் பரிசோதனைகளை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

காய்ச்சல் வந்த 5-7 ஆவது நாள் சி.டி ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பித்தால் அதற்கு முன்பே எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.

பலரும் காய்ச்சல் ,உடல்வலி இருக்கும்போது கொரோனாவாக இருக்காது ,சாதாரண காய்ச்சல் என விட்டுவிடுகின்றனர் .( கொரோனாவும் பலருக்கு சாதாரண காய்ச்சல்தான்). பின் ஒரு வாரம் பத்து நாள் கழித்து மூச்சுத் திணறல் என வரும்போது நுரையீரல் பாதிப்பு சரிப்படுத்த முடியாத நிலைமைக்குப் போய்விடுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நுரையீரல் பாதிப்பு வருவது குறைவாகவே உள்ளது.ஆக லேசான காய்ச்சல் உடல்வலி என்றாலும் அலட்சியப் படுத்த வேண்டாம். பீதி அடைய வேண்டாம். ஆனால் கவனமாகப் பரிசோதனைகளை எல்லாம் மருத்துவர்கள் மூலம் செய்து கொள்ளுங்கள்!! காலம்கடந்து வந்தால் ரெம்டெஸ்வீர், ஆக்ஸிஜன் எல்லாம் எந்த பலனும் அளிக்காது.-