Sun. Apr 20th, 2025

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை ஒதுங்கியதைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றன. கொரோனோ தொற்றுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள், கங்கையில் வீசிச் செல்வது, இருமாநில அரசு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இரு மாநிலங்களிலும் கொரோனோவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மயானங்களிலும் இடநெருக்கடி ஏற்பட்டிருப்பதால், உடல்களை அடக்கம் செய்வதற்கு வேறு வழியின்றி, உடல்களை கங்கை நதியில் வீசப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.

கங்கையில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படும் துயரமான நிலை ஏற்பட்டிருப்பதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், கொரோனோ தொற்று பரவலைக் கட்டுப்படுத்துடன், நோய் தாக்குதலுக்கு உள்ளானவவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நமாமி கங்கா எனும் பெயரில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் கங்கையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கங்கை நதியில் இறந்தவர்களின் பிணங்கள்தான் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.