தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக.வுக்கு அரசியல் வியூகம் வடிவமைத்து தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தேர்தல் நேர வித்தகர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மகத்தான வெற்றிப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வியூகங்களை எல்லாம் தவிடிபொடியாக்குவோம். அதன் மூலம் பாஜக இரட்டை இலக்கத்தில்தான் வெற்றிப் பெறும். அதற்கு மேலாக பாஜக மேற்கு வங்கத்தில் கூடுதலான தொகுதிகளை பெற்றுவிட்டால் தான் தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை துறந்திடுவேன் என உணர்ச்சிவசப்பட்டவராக கடந்த மார்ச் மாதத்திலேயே தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரின் பேட்டியை கிண்டல் செய்த உள்துறை அமைச்சர் அமிஷ்தா மற்றும் மேற்கு வங்க பாஜக தலைவர்கள், மம்தாவை வீழ்த்தி, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமரும் என சபதம் செய்யாத குறையாக பேசி வந்தார்கள்.
இந்திய திருநாட்டின் பிரதமராக இதற்கு முன்பு பதவி வகித்த எந்தவொரு பிரதமரும், ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்காக தெருவோரங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளும் உள்ளூர் அரசியல் தலைவர் அளவுக்கு இறங்கி வந்து, மேற்கு வங்கமே என கதியாக கிடந்தார்.
மேற்கு வங்க தேர்தலில் மோடி கையாண்ட அரசியல் யுக்தியால், பிரதமர் பதவிக்கே இழுக்கு வந்து சேர்ந்தது. அவரைவிட அதிக எண்ணிக்கையிலான பிரசாரக் கூட்டங்களில் பொங்கினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இருவரும் போட்டி போட்டிக் கொண்டு மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டதால், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனோ 2 வது அலை சுனாமி அலை போல, மக்களை மாபெரும் இன்னலுக்கு ஆளாகிவிட்டு விட்டது.

இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான போது, மம்தா பானர்ஜி அமோக 213 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். பிரசாந்த் கிஷோர் கணித்தபடி, பாஜக இரண்டு இலக்க (77) எண்ணிக்கையிலேயே அந்த மாநிலத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் தனது தேர்தல் வியூகத்திற்கு கிடைத்த வெற்றிக் குறித்து, ஆங்கில நாளிதழான த டெலிகிராப்பிற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார். அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கழுவி கழுவி ஊற்றியுள்ளார்.
மம்தாவுக்கு வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. அதுவும் அபரிதமான வெற்றியாக இருக்கும் என்றும் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை எல்லோரும் பார்க்கவில்லையோ அல்லது நம்பவில்லையோ எனக்கு தெரியாது. தேர்தலின் போது பரப்புரை மட்டுமே வெற்றியைப் பெற்று தராது என்பதை பாஜக தலைவர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உணர தவறிவிட்டார். மேலும், அவர்கள் அசுரத்தனமாக நடந்து கொண்டார்கள். அமித்ஷா வானத்திலேயே பறந்து பறந்து பிரசாரம் செய்து கொண்டிருந்தாரே தவிர, களத்தில் உள்ள மக்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே அவர் விரும்பவில்லை. தேர்தலின் தொடக்கத்திலேயே வெற்றிப் பெறும் நிலையை எட்டிவிட்ட மம்தாவுடன் பாஜக தலைவர்கள் மோதினார்கள். அவருக்கு எதிராக வெறும் காட்டு கூச்சலை மட்டுமே வெளிப்படுத்தினார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி மம்தாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துவிட்டது. அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட அவர், மேற்கு வங்கத்தில் உள்ள அடிதட்டு மக்களின் பிரச்னைகளை உண்ணிப்பாக கவனித்து, அதனை தீர்த்து வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் எனது தந்தை மரணமடைந்தார். அந்த துயரத்தில் இருந்து விடுபடுவதற்கு எனக்கு சில காலம் தேவைப்பட்டது. அந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்ட மம்தா, விரைந்து வாருங்கள், நாம் போராட வேண்டிய தரூணம் என்று திரும்ப திரும்ப கூறினார் மம்தா. அவர் போர்க்களத்தை கண்டு பயப்படவில்லை. எதிராளிகளை வீழ்த்துவதற்கான போர்க்குணத்துடன் போராளியாகவே இருந்தார். எப்போதும் மக்களுடன் இருப்பதையே மம்தா விரும்பினார். அமித்ஷா அபார சக்தி படைத்த தேர்தல் வியூக வகுப்பாளராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். அவரளவுக்கு என்னை அர்த்தப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. கவர்ச்சிகரமான தலைவரான பிரதமர் மோடியை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அமித்ஷாவுக்கு இருக்கிறது. வலுவான கட்டமைப்பு கொண்ட கட்சியாக பாஜக இருக்கிறது. மத்திய அரசாங்க எந்திரம் அவரிடம் உள்ளது. தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., எனும் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை போன்ற பல்வேறு சக்திமிக்க அமைப்புகளை தேர்தலுக்காக அமித்ஷா பயன்படுத்திய போதும் அவர் தோல்வியைதான் தழுவினார். அமித்ஷாவுடன் நேருக்கு நேராக நான் மோதுவது இது மூன்றாவது முறை. 2015ல் பீகார் தேர்தல் மூலம் முதல்முறையாக அவருடன் நான் மோதினேன். அடுத்து டெல்லி, அதற்கடுத்து இப்போது மேற்கு வங்கத் தேர்தல். இதேபோல, பஞ்சாப், ஆந்திரா தேர்தலிலும் அமித்ஷாவை தோற்கடித்துள்ளோம். அமித்ஷா ஒரு சிறந்த நிர்வாகியாக இருக்கலாம், ஆனால் அவர் தேர்தல் வித்தகர் இல்லை என்பது எனது எண்ணம். நான் எப்போதும் அவரை சிறந்த அரசியல்வாதியாக ஏற்றுக் கொண்டதில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர், அமித்ஷாவை கிழிகிழி யென கிழித்து தொங்கவிட்டுள்ளார்.