கோவை அரசு மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் கொரோனோ தொற்றாளர்களுக்கு பல்வேறு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் தரப்பில் செய்து தரப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்கும் விதமாக குளிர்சாதன வசதி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், கோடை வெய்யிலில் தொற்றாளர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, ஈ.எஸ். ஐ (தொழிலாளர் காப்பீடு ) மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மின்விசிறி வாங்கி தருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை பார்த்த இளம் தம்பதிகள், கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, 100 மின்விசிறிகள் வாங்கி நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அதனை கேட்டு ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் அதிர்ச்சி கலந்த ஆனந்தம் அடைந்துள்ளனர். அவர்களைப் பற்றி விசாரித்த போது, இளம்தம்பதிகள் தங்களைப் பற்றி எந்த விவரத்தையும் வெளியிட்டு விளம்பரம் தேட விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
மருத்துவமனைக்கு மின்விசிறி வேண்டும் என்ற அறிவிப்பை பார்த்தவுடனேயே, தங்களிடம் கையிருப்பாக பணம் இல்லாத போதும், தங்களிடம் இருந்த தங்க நகைகளை அடகு வைத்து, 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவழித்து 100 மின்விசிறிகளை விலைக்கு வாங்கி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.
நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இளம் தம்பதிகளின் தன்னலமற்ற சேவையை கேள்விபட்ட நல்உள்ளங்கள் பலர், அவர்களை மனம் திறந்து பாராட்டும் அதே நேரத்தில், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வேறு உதவிகள் தேவையா என அன்போடு விசாரித்து வருவதை அறிந்து மருத்துவமனை நிர்வாகிகள் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.