எங்கள் ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் டெல்லியில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காததால் உயிரிழந்தனர். டெல்லியில் இயக்கப்பட்டு வரும் 9 ஆம்புலன்ஸில் இரண்டு வாகனங்கள் மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. புதிய ஓட்டுநர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. கொரோனோ காலத்தில் தங்களுடைய உயிரைப் பற்றி கவலைக் கொள்ளாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் ஓட்டுநர்கள் பார்த்த பணியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நல்ல மனிதர்களை நாங்கள் இழந்துவிட்டோம். இரவு பகலாக ஆம்புலன்ஸ் வாகனங்களை இயங்கினார்கள். அவர்களைப் போன்ற மனிதநேயமிக்க ஓட்டுநர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
இப்படி கண்ணீர் மல்க கூறியிருப்பவர், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சத் பவான அவசர ஊர்தி அமைப்பின் நிறுவனர் அனில் சிங்.
டெல்லியில் கொரோனோ 2 வது அலை வேகமெடுக்க ஆரம்பித்த நாள்களில் இருந்து, சத் பவான அவசர ஊர்திகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சேவை அடிப்படையில் இயக்கப்படும் இந்த வாகனங்களின் ஓட்டுநர்கள், கொரோனோ தொற்றாளர்களையும், சிகிச்சைப் பலனின்றி இறந்தவர்களையும் உறவினர்கள் போல பாவித்து, வாகனங்களை இயங்கி கொண்டிருக்கிறார்கள்.
இடைவிடாது மக்களுக்காக உழைத்த ஓட்டுநர்களும் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியதுதன் பெரிய சோகம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, எந்தவொரு மருத்துவமனையிலும் இடம் இல்லை. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட ஓட்டுநர்களுக்கு பிராண வாயு எனப்படும் ஆக்சிஜனும் கிடைக்கவில்லை. உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சைக் கிடைக்காததால், 3 ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரசியல்வாதிகளைப் போல, அவரவர் வீடுகளிலேயே ஓட்டுநர்கள் முடங்கியிருந்தால், ஒருவர் கூட மரணமடைந்திருக்க மாட்டார்கள். பேரிடர் காலத்தில் மனமுவந்து சேவையாற்ற வந்தவர்களில் இன்று மூன்று பேர் உயிரோடு இல்லை. அவர்களை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் துயரம் மிகக் கொடியது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், கொரோனோ ஏற்படுத்திய வடு, ஒவ்வொரு குடும்பத்தின் அடையாளமாக மாறி நிற்கிறது. குடும்பத்தில் ஒருவரை இழந்திருக்க கூடும். இல்லையெனில் உறவுகளில் ஒருவரை இழந்திருக்க கூடும்.அல்லது நண்பர்களை இழந்திருக்க கூடும்.
டெல்லியில் பேரலையாக தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனோவின் 2 வது அலையால், பாதிக்கப்படாதவர்கள், கண்ணீர் சிந்தாதவாகள் ஒருவர் கூட இல்லை என்று சொல்லும் அளவிற்கு, டெல்லி மாநகரை சோகம் போர்வையாக போர்த்தி வைத்திருக்கிறது.