Fri. Apr 19th, 2024

கொரோனோ மிரட்டலால் கடந்த ஓராண்டுக்கு மேலாக, விளிம்பு நிலை மக்களிடம் மட்டுமல்ல மேல்தட்டு மக்களிடமும் கூட மனிதநேயமும், நன்றியுணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி வருகிறது.. அன்பாய், ஆசையாய் உறவுகளை வரவேற்ற காலம் மறைந்து, வீட்டிற்கு உறவினர்களோ, நண்பர்களோ வந்தால், அவர்களை வரவேற்ற கொண்டாட உறவு மனங்கள் கூட தயக்கம் காட்டி வருகின்றன.

கடந்த நவம்பர் மாதத்தில் அப்பாடா ஒழிந்தது கொரோனோ என்று நிம்மதி மூச்சு விட்ட மக்கள், முகக்கவசங்களுக்கு விடுதலை கொடுத்து, உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொஞ்சி குலாவ ஆரம்பித்தனர். ஜனவரி மாதத்தில் கொரோனோ 2 வது அலை மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது. மீண்டும் வீடுகளுக்குள்ளே சிறைப்படுத்திக் கொண்டனர்.

இப்படி நெருக்கடியாக காலத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பெற்றோரின் நினைவு நாள், உடன்பிறந்தவர்களின் நினைவு நாள், உறவுகள், நண்பர்களின் நினைவு நாள்களை நினைவுக்கூர்ந்து, துயரை பகிர்ந்துகொள்வதற்கும் அரூபமாக வாழ்பவர்களின் ஆத்மா குளிர்ந்து போவதற்குமான படையல் வைத்து படைப்பது என்பதும் கூட முக்கியத்துவம் பெறாமல் போனது. வெறும் சடங்கிற்காக நடைபெறும் படையலாக இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.. இப்படிபட்ட வேளையில்,மூன்றாண்டுகளுக்கு முன்பு இறந்த போன கோயில் யானையின் மீதான அன்பை மறக்காமல், அந்த யானை புதைக்கப்பட்ட இடத்தில், மலர்களால் அலங்கரித்து, யானைக்குப் பிடித்த உணவுகளையும், திண்பண்டங்களையும் வைத்து படைத்து நன்றியில் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் சேலம் நகர மக்கள்.

ராஜேஸ்வரியின் நினைவை பகிர்ந்து கொண்ட அன்பர் ஒருவர், சேலம் மாநகரில் பிரசித்த பெற்ற கோயில் சுகவனேஸ்வரர் ஆலயம். இந்த கோயிலுக்கு ஒருமுறை தரிசனத்திற்கு சென்று வருபவர்கள் கூட ஆழ்ந்த அமைதியையும், நிலையான நிம்மதியையும் பெறுவார்கள். ஆலய வளாகத்தை ஒருமுறை சுற்றி வந்து மூலவர் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி கொடிமரத்தை நோக்கி வந்தால், வீட்டுக் குழந்தை போல குதூகலம் காட்டுவாள் ராஜேஸ்வரி. தும்பிக்கையை தூக்கி ஆசிர்வதிப்பதாகவும், உடலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதிலாகட்டும், பிஞ்சு பாதங்களால் இதயத்தை தடவுவதுப் போல பேரின்பம் கிடைக்கும்.. குட்டியானையின் தரிசனமும், பாசமும், ஒருநாள் முழுவதும் உடலிலும், உள்ளத்திலும் உற்சாகத்தை மின்சாரம் போல பரவச் செய்யும். அப்படி பக்தர்களால் பாசத்தை ஊட்டி வளர்க்கப்பட்ட யானை இறந்துவிட்டது என்ற செய்தியே பேரிடியாக இருந்தது.

இதேநாளில்தான், கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜேஸ்வரி விண்ணுலகுக்கு பயணமானாள்.. பாசம் இன்றும் சேலம் காற்றில் கலந்தேதான் இருக்கிறது. ராஜேஸ்வரினின் நினைவுகளை எளிதாக மறக்க முடியவில்லை. அதனால், ஓராண்டு முழுவதும் மனதில் தேங்கி வைத்திருந்த நேசத்தை, படையல் மூலம் காணிக்கையாக்கி கண்ணீர் சிந்திக்கிறோம்.. இதன் மூலம் கிடைக்கும் நிம்மதியை உளப்பூர்வமாக உணர்ந்து பார்ப்பவர்களுக்குதான் புரியும் என்றார் நெகிழ்ச்சியோடு…

அழிவே இல்லாத சொத்து அன்பு மட்டுமே….