இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனோ பாதிப்பும், சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும், உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன் வந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், கொரோனோ தொற்று பாதிப்பால் இந்தியா மோசமடைந்து வருவதை பார்க்க முடிகிறது. கொரோனோ தாக்குதலில் இருந்து இந்தியா மீண்டு வர கூகுள் நிறுவனமும் அதன் ஊழியர்களின் பங்களிப்பாக 135 கோடி ரூபாய் நிதியுதவியை இந்தியா மற்றும் யுனிசெப்புக்கு வழங்க முன்வந்துள்ளது.
கொரோனோவில் இருந்து இந்தியா மீள, தேவையான மருத்துவ சாதனங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்குவதற்கு இந்த நிதி பயன்படும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதேபோல, மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாதெல்லாவும், இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.