Sun. Apr 20th, 2025

கட்டுரையாளர்: ராமகிருஷ்ணன் தியாகராஜன் (the hindu special correspondent )முகநூல் பதிவு…

கோவிஷீல்டு மற்றும் கோவிக்சின் தடுப்பூசிகளுக்கு சீரான விலைகளை நிர்ணயிக்காமல், மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக நிர்ணயக்கப்பட்டதில் எந்தவிதமான தர்க்கம் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விலைகளை மிக அதிகமாக நிர்ணயித்திருப்பது, நிர்ணயிக்க அனுமதிப்பிருப்பது மூலம், வியாதியின் தாக்கம் எவ்வாறு கடுமையாக இருந்தாலும் லாபநோக்குடன் செயல்படுவதுதான் மிக முக்கியமானது என்ற செய்தி கிடைக்கிறது.

இந்நாட்டின் சரித்திரத்தை மிக கூர்மையாக அறிந்தவர்களுக்கு இம்மாதிரியான போக்கு ஆச்சரியத்தை அளிக்காது. ஆனால், வேதனை அளிக்கின்ற விடயம், சரித்திரத்திலிருந்து எந்த படிப்பினையையும் நமது சமூகம் கற்றுகொள்ளாமலிருப்பதுதான்.
லாபநோக்குடன் செயல்படுவதை விமர்சிப்பவர்களுக்கு கொடுக்கின்ற பதில்: எந்த வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்கமால் இருக்கிறார்கள்? லாபம் சம்பாதித்தால்தானே உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிப்பார்கள். அதற்கான முதலீடு செய்வார்கள்.மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விட குறைவாக (அ) அதற்கு சமமான அளவில் லாபம் கிடைப்பதை விமர்சிப்பது “சோசலிஸ சித்தாந்த மனநிலையை” காண்பிக்கிறது.

“சோசலிஸ சித்தாந்த மனநிலையை” பற்றி அதிகமாக கவலைப்படுபவர்கள் எதை மறந்துவிடுகிறார்கள் என்றால், இந்தியாவில் தற்பொழுது கிடைக்கும் மருந்துகள் இரண்டுதான். இவற்றைவிட, உலகளவில், இன்னமும் 12 தடுப்பூசிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு நாடாவது ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மெக்கில் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தெரிவுகளுக்கு, விருப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் தளத்தை சுருக்கிவிட்டப்பிறகுதான், இந்த விலை நிர்ணயங்கள் நடைபெற்றுள்ளன. இதுவும் அந்த “சோசலிஸ சித்தாந்த மனநிலை”யின் வெளிப்பாடுதான். தெரிவுகளை அதிகமாக வழங்குவதுதான் திறந்த பொருளாதாரத்தின் ஒர் அடிப்படை குணம். குறைந்தபட்சம் இன்னமும் இரண்டு அல்லது மூன்று தடூப்பூசிகள் கிடைக்கின்ற பட்சத்தில். அதாவது மொத்தமாக இந்தியாவில் நான்கு (அ) ஐந்து தடூப்பூசிகள் இருக்கின்ற பட்சத்தில், விலை நிர்ணயங்கள் நடைபெற்றிருந்தால், அதில் மக்களின் நலன் பாதுகாக்கபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்.

இந்தியாவில் இருக்கும் தேவையை விட வெளிநாடுகளில் இம்மருந்துகளுக்கான தேவை அதிகமாக இருக்கமுடியாது. இல்லை. அதனால்தான், வெளிநாடுகளுக்கு அதிகமான விலையில் விற்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

லாபம் இல்லாமல் வணிகம் செய்யமுடியாது. ஆனால், அதிலும் தொழில்தர்மம் என்று உள்ளது. அதையும் மறந்துவிடக்கூடாது.