Sat. Nov 23rd, 2024

டெல்லி உள்பட கொரோனோ தொற்று பாதிப்பு அதிகளவு உள்ள மாநிலங்களில் ஆக்சிஜன் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உள்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பிரம்மாண்டமான சிலிண்டர்கள், ராணுவத்திற்குச் சொந்தமான விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து அதிக திறன் கொண்ட ஆக்சிஜன் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அந்தநாட்டிற்கு சென்றுள்ள ராணுவ விமானங்கள், ஷாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன. அங்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 4 அதிநவீன சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ விமானம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பானாஹராவில் உள்ள விமான இறங்கு தளத்தை நோக்கி புறப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை வந்தடைந்தவுடன், அங்கிருந்து ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

.இதேபோல, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தும் அதிக திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்த அந்த நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இதனையடுத்து, அந்த நாடுகளுக்கும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ராணுவ விமானங்கள் விரைந்துள்ளன.