வேலூர் மாவட்டம் லத்தேரியில் உள்ள பட்டாசுக் கடையில் நேரிடட தீ விபத்தி பேரக் குழந்தைகளை மீட்கச் சென்ற தாத்தா உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அழகான இரண்டு ஆண் குழந்தைகள் உயிரிழந்த சோகத்தில் இருந்து மீள முடியாத அவர்களது தாயும், இன்று அதிகாலை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட துயர நிகழ்வு, வேலூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. .
இரண்டு குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.காட்பாடி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 2 மகன்களை இழந்த தாய் வித்யலட்சுமி மனமுடைந்து லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காட்பாடி அருகே லத்தேரியில் கடந்த 18ம் தேதி பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டது.
கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற வெடி விபத்து குறித்து, லத்தேரி மக்கள் சோகம் விலகாமல் கூறுகின்றனர்.
லத்தேரியைச் சேர்ந்த 60 வயதான மோகன்ரெட்டி (வயது 60) என்வர், அங்குள்ள பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். அவரின் மகளான திவ்யா பெயரில் உரிமம் பெற்று 1992 ல் இருந்து அங்கு வணிகம் செய்து வந்தார்.
வழக்கம் போல 18 ஆம் தேதியன்றும் கடையை திறந்தார் மோகன்ரெட்டி. அவரது மகள் வழி பேரக்குழந்தைகளான 8 வயதான தனுஷ், 6 வயதான தேஜஸ் ஆகியோரும் சிறிது நேரத்தில் வந்துள்ளனர். பகல் 12 மணியளவில் கடைக்கு வந்த சிலர், பட்டாசுகளை வாங்கிவிட்டு, புதிய ரக பட்டாசுகளை எப்படி பற்ற வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஆர்வமிகுதியில் மோகன்ரெட்டி, புதிய ரக பட்டாசுகளை வெடித்து காட்டுவதற்காக கடைக்கு வெளியே வந்து பட்டாசுகளுக்கு தீ வைத்துள்ளார். அப்போது வெடித்த பட்டாசில் இருந்த சிறிய தீப்பொறி பறந்து சென்று கடையில் இருந்த பட்டாசு மீது விழுந்துள்ளது. நொடிப்பொழுதில் அனைத்துப் பட்டாசுகளும் அதிபங்கர சத்தத்துடன் ஒட்டுமொத்தமாக வெடிக்க, அதைப் பார்த்து பயந்து போன தனுஷும், தேஜஸும் பதற்றமடைந்து கடைக்கு வெளியே வருவதற்குப் பதிலாக, பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஓடி விட்டனர்.
அதைப் பார்த்து குலை நடுங்கிப்போன மோகன்ரெட்டி, பேரக்குழந்தைகள் காப்பாற்றுவதற்காக வெடித்து சிதறிக் கொண்டிருந்த பட்டாசுகளுக்கு இடையே புகுந்து பேரக்குழந்தைகள் இருந்த அறைக்குச் சென்றார். அதற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடிப்பதை போல பயங்கர தீயுடன் அந்த இடம் காட்சியளித்தது.
அதனால் அச்சமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் கூட அதன் அருகே சென்று தீயை அணைக்க முடியவில்லை. மேலும், லத்தேரியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் மற்றும் காட்பாடி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்த மக்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க கடுமையாக போராடினார்.
சிறிதுநேரத்தில் தீ கட்டுக்குள் வந்த பிறகு, பட்டாசு வெடியால் பற்றிய தீயில் மோகன்ரெட்டியும் அவரது பேரக்குழந்தைகள் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். கரிக்கட்டைகளைப் போல கிடந்த ஆசை மகன்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியில் பித்து பிடித்தவர் போல ஆகிவிட்டார், வித்யாலட்சுமி. கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளின் நினைவாகவே இருந்த அவர், பிரிவுத்துயரில் இருந்து மீள முடியாமல் தவித்திருக்கிறார். இன்று அதிகாலை, லத்தேரியில் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம், லத்தேரி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது.