சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து இரண்டு வாரங்கள் கடந்த பிறகும், தேர்தல் தொடர்பாக பஞ்சாயத்துகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆளும்கட்சியான அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் தேர்தல் தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்துகள், இரண்டு கட்சி தலைமைக்கும் கடும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊர், ஊராக வெடிக்கும் பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது மாவட்டத்தில் கொதி நிலையை ஏற்படுத்தியிருக்கும் பஞ்சாயத்துகளை தீர்க்க தயக்கம் காட்டுகிறார் என்று குமறுகிறார்கள் சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள். அவரின் புலம்பல்களுக்கு செவி கொடுத்தோம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலுமே அதிமுக தொடர்பான பஞ்சாயத்துகள் நிறைய இருக்கிறது. அதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றாலே, மே 2 ஆம் தேதி வரை அமைதியாக இருங்கள் என வாய்ப்பூட்டு போடுகிறார். அவரது தொகுதியான எடப்பாடிக்கு பக்கத்தில் உள்ளது வீரபாண்டி தொகுதி. அந்ததொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான மனோன்மணிக்கு, தற்போதைய தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அந்த ஆத்திரத்தில், புதிதாக அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ராஜாவுக்கு எதிராக, கொஞ்சம் கூட பயமின்றி திமுக.வுக்கு நேரடியாக ஆதரவு தந்தார்.
திமுக முன்னாள் அமைச்சர், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வழி பேரன் டாக்டர் தருணுக்கு ஆதரவாக, அதிமுக எம்.எல்.ஏ. மனோன்மணி வாக்கு சேகரித்தார். வீராபண்டி தொகுதியில் உள்ள அனைவருக்குமே இது தெரியும். அதைவிட கொடுமையாக, அதிமுக வேட்பாளர் ராஜா, சிட்டிங் எம்.எல்.ஏ என்ற முறையில் மனோன்மணியின் வீடு தேடிச் சென்று மரியாதை செலுத்த முயன்ற போதும், ஆதரவு கேட்க முயன்ற போதும், வாசல் கதவை மூடிக்கொண்டு வீட்டிற்குள் நின்றுக் கொண்டு ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதைக்கேட்டு ராஜா துடித்துப் போனதை கூட இருந்த எங்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும், வீரபாண்டி தொகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களையும் திமுக.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வற்புறுத்தினார் அதிமுக எம்.எல்.ஏ. மனோன்மணி. திமுக.வின் பிரசாரத்தை முறியடிப்பதைவிட, மனோன்மணியின் உள்ளடி வேலைகளை சமாளிப்பதுதான் அதிமுக வேட்பாளர் ராஜாவுக்கு, வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை பெரும் போராட்டமாக அமைந்தது. அதிமுக.வுக்கு எந்தளவுக்கு துரோகம் செய்தார் சிட்டிங் எம்.எல்.ஏ. மனோன்மணி என்பதை ஆதராப்பூர்வமாக புகாராக எழுதி முதல்வர் இ.பி.எஸ்.ஸிடம் கொடுத்தோம். ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை என்று அந்த மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் புகார் வாசித்தவுடன், ஆளும்கட்சி எம்.எல்.ஏ. என்று கூட பார்க்காமல் சத்யாவையும், அவரது கணவர் பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீங்கினார் இ.பி.எஸ். எம்.சி.சம்பத் புகாரின் மீது அவ்வளவு வேகம் காட்டிய முதல்வர் இ.பி.எஸ்., தனது சொந்த மாவட்டத்தில் அதிமுக.வுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டும் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டினார்கள்.
அதிமுக.வில் இந்த பஞ்சாயத்து என்றால், திமுக.வில் சொந்த குடும்பத்திற்குள்ளேயே நடந்த பஞ்சாயத்து, திமுக தலைமை வரை புகாராக சென்றுவிட்டது என்கிறார்கள் வீரபாண்டி ஆறுமுகத்தின் விசுவாசிகள்..அவர்களின் சோகத்தையும்தான் கேட்போமே..
சேலத்தின் சிங்கமாக இருந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தில் உள்ள அத்தனை வாரிசுகளும், உறவுகளும் வீரபாண்டி தொகுதியை கேட்டு அண்ணா அறிவாலயத்தை முட்டின.ஆனால், அவர்களில் ஒரே ஒருவருக்குதான் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. அந்த வகையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் மறைந்த செழியனின் மருமகன் டாக்டர் தருணை, வீரபாண்டி தொகுதி வேட்பாளராக அறிவித்தது திமுக தலைமை. அவர், ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி காசி விஸ்வநாதனின் புதல்வரும் கூட. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு தினங்களில், வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி ரங்கநாயகியின் நினைவுத்தினம்.
அன்றைய தினம், அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது பேத்தியும், தனது மனைவியுமான டாக்டர் சூர்யாவை அழைத்துச் கொண்டு வீரபாண்டியில் உள்ள ரங்கநாயகியின் நினைவிடத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த வீரபாண்டியாரின் மூத்த மகள் மகேஸ்வரியும் (இவரும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்) அவரின் புதல்வரும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாவின் மகள் டாக்டர் மலர்விழியும் ( அவரின் தந்தையான ராஜாவும் சீட் கேட்டிருந்தார்) தங்கள் குடும்பத்திற்கு சீட் கிடைக்காமல் டாக்டர் தருண் சதி செய்துவிட்டார் என்ற ஆத்திரத்தில், தகாத வார்த்தைகளால் டாக்டர் தருணையும், அவரது மனைவியும் டாக்டர் சூர்யா ( மலர்விழியின் அக்கா முறை) திட்டியுள்ளார்கள்.
உறவுகள் முன்னிலையில் தங்கள் இருவரையும் அவமானப்படுத்தியதால் கூனி குறுகிப்போன டாக்டர் தருணும், அவரது மனைவி டாக்டர் சூர்யாவும், நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்தாமல் திரும்பி விட்டார்களாம். அன்று பட்ட வேதனையைவிட, தேர்தலில் ஒத்துழைப்பு தருவதாக கூறி பிரசாரத்திற்கு வந்த ஆ.ராஜா, மறைமுகமாக டாக்டர் தருண் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்று செய்த உள்குத்து அரசியலை எல்லாம் விலாவாரியாக எழுதி அண்ணா அறிவாலயத்திற்கு புகாராக அனுப்பி விட்டார்களாம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அரசியல் செய்த பழைய பங்காளிகள்.
தனக்கும், தங்களது குடும்பத்திற்கு எதிராகவும் அண்ணா அறிவாலயத்திற்கு புகார் கடிதங்களை அனுப்பி வைத்த புல்லுருவிகள் யார் என்பதை கண்டறிய வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ஆ.ராஜா அமைத்திருக்கும் துப்பறியும் படையின் விசாரணை படலத்தைக் கண்டு, எதிரணி திமுக உடன்பிறப்புகள் கலங்கி போயிருக்கிறார்களாம்.
இவ்வளவு களேபரங்கள் சேலத்தில் நடந்து கொண்டிருந்தாலும் தன்னை மையப்படுத்தி பின்னப்படும் குடும்ப அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாமல், டாக்டர் அருண் வழக்கம் போல தனது மருத்துவமனைக்குக் சென்று மருத்துவச் சேவை புரிந்து கொண்டிருக்கிறாராம்..
சேலம் மாவட்டத்திலும் தேர்தல் பஞ்சாயத்துகளுக்கு பஞ்சமில்லைப் போல…