Mon. Nov 25th, 2024

கொரோனோ பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக், 24 மணிநேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார். 48 மணிநேரத்தில் உயிரிழக்கிறார்.. அவரின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? என்று நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் கொளுத்திப் போட்டது ஒரு பக்கம் சூடான விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது..

இப்படிபட்ட நெருக்கடியான சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கொரோனோ தொற்று பாதிப்பபால் ஏற்பட்டுள்ள அவசர நிலை குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா ? என்ற அச்சமும் பொதுமக்களிடம் எழுந்துள்ள நிலையில், கொரோனோ தொற்று பரவலை காரணம் காட்டி மீண்டும் ஊரடங்கை தமிழகத்தில் அறிவித்தால் தொழில் துறை மிகவும் நசிந்து போகும் என்று இந்திய தொழில் வர்த்தகை கூட்டமைப்பும் எச்சரித்துள்ளது.

இப்படிபட்ட அசாதாரண சூழ்நிலையில், உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்விகள், சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று பரவல் தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய போது, அவரது கைகளை டெல்லி மேலிடம் கட்டிப் போட்டுவிட்டதாக தகவல் ஒன்று தலைமைச் செயலகத்தில் கசிந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது முதல்வருக்கு உத்தரவு போடும் அதிகாரம் கிடையாது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படிதான் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் செயல்பட வேண்டும். ஆலோசனைகளை வேண்டுமானால் கூறுங்கள். அதுவும் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்ற பிறகுதான் ஆலோசனைக் கூட்டத்தையே கூட்ட வேண்டும். மற்றபடி உத்தரவுகள் போடும் அதிகாரம் எல்லாம் உங்களுக்கு இல்லை என்று அழுத்தமாக டெல்லி மேலிடம் கூறியதாக தகவல் கசிகிறது.

டெல்லி அறிவுரையை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் தமிழக அரசின் உயரதிகாரிகள், கடந்த முறை முதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதே, உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஏனோ தானோ என்றுதான் அந்த ஆலோசனைக் கூட்டமே நடந்ததாகவும் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கொரோனோ தடுப்பு தொடர்பாக உத்தரவு மாதிரி சில அம்சங்களை முதலவர் சுட்டிக் காட்டியபோதும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைப்படி உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நேரடியாக சுட்டிக்காட்டப்பதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து, எனது அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது, அம்மா அரசு இந்த திட்டங்களை எல்லாம் அறிவித்திருக்கிறது என்று அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்று தடா போட்டதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இன்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஒரு செய்தி அறிக்கை கூட வெளியிடுவதற்கு அனுமதியில்லாத போது, முதல்வர் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.