இஸ்லாமியர்கள் வாக்குகள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு மக்களிடம் பிரசாரம் செய்யும் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக பாஜக குற்றம் சாட்டியது. மேலும், அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு வழங்கியது. இந்த புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், பாஜக.வின் புகாருக்கு பதிலளிக்குமாறு மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு மம்தா அனுப்பி வைத்த பதில் மனுவை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.
மம்தா அளித்துள்ள பதில் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு புறம்பானது எனக் கூறியதுடன், மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்வதற்கு 24 மணிநேரம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அதன்படி இன்றிரவு முதல் நாளை இரவு 8 மணி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையே மம்தா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அப்போது அவர், தேர்தல் ஆணையம்,இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி தந்துள்ள சட்டப்பிரிவுகளின்படி நடக்காமல், மோடி நன்னடத்தை விதிகள் படி நடந்து கொள்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் ஆணையம் பாஜக.வுக்கு சாதமாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பதாக மம்தா சாடியிருந்தார்.