Fri. Nov 22nd, 2024

கேரளாவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்து இந்தியன் லூலூ குழும தலைவர் மற்றும் அவரது மனைவி உயிர் தப்பினர்.

திருவனந்தபுரம்,

போர்ப்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்திய தகவலின்படி, 480 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளுடன் ஐக்கிய அரபு அமீரகவாசிகளில் 2வது பெரும் பணக்காரராக யூசுப் அலி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வளைகுடா மற்றும் பல்வேறு நாடுகளில் 200 கிளைகளை கொண்டுள்ள லூலூ சர்வதேச குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குனராக அலி இருந்து வருகிறார். இந்தியன் லூலூ குழும தலைவராகவும் இருந்து வரும் இவரது வருவாய் 740 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.

கேரளாவுக்கு தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் தனது மனைவியுடன் அலி சென்றுள்ளார். அலி உள்பட 7 பேர் அதில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், கொச்சி நகரில் பனங்காடு பகுதியில் தரையிறங்க முயன்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த அலி உள்பட 7 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். முதலில் வெளியேறிய விமானி பின்னர் பயணிகளின் கதவை திறந்து விட்டு அவர்களை காப்பாற்றியுள்ளார். அவர்கள் அனைவரும் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

விபத்து நடந்தபொழுது, அந்த பகுதியில் கடும் காற்று மற்றும் கனமழை சூழல் காணப்பட்டது என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு கேரளாவில் 1,400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஒன்றை கட்டி நன்கொடையாக அலி வழங்கியுள்ளார். இதுதவிர 68 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவியும் வழங்கியுள்ளார்.