அதிமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வில், யார், யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற விவாதம், தைலாபுரம் தோட்டத்திலேயே சூடான விவாதத்தை கிளப்பியுள்ளதாம். ஒற்றை இலக்கமா, இரட்டை இலக்கமா? என்று தைரியமாக ஒருவர் கூட பேசாததைக் கண்டு பெரியவர் ஆடிப் போயிருக்கிறாராம்.
பாமக இடம் பெறும் கூட்டணிதான், வெற்றிக் கூட்டணி என்று முழங்குவோமே, இந்த முறை, அந்த முழக்கத்திற்கே பங்கம் வந்துவிடும் போல என்று 23 தொகுதிகளிலும் இருந்து வரும் தகவல்களைக் கேட்டு தைலாபுரம் தோட்டம் ஆடிப் போயிருக்கிறதாம்.
அதுவும், பாமக தலைவர் ஜிகே.மணி போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில், கடந்த முறை இளையவருக்கு கொடுத்த அல்வாவைப் போலவே, இந்த மூன்று எழுத்து தலைவருக்கும் பரிசாக கொடுக்க ஒட்டுமொத்த வன்னியர்களும் திரண்டுவிட்டார்கள் என்ற தகவல்தான், பெரியவர், இளையவர், மூன்றெழுத்து தலைவர் ஆகியோரை பீதியடைய வைத்துவிட்டதாம்.
உண்மையிலேயே மாவீரன் குருவின் ஆவி, பாமக.வை பழிவாங்குகிறதோ என்ற பயமும் ஆட்டிப்படைகிறதாம் மூவர் கூட்டணியை. அவர்கள் சமாதானம் அடையும் அளவிற்குகூட ஆறுதலான வார்த்தைகளை கூறுவதற்காக, ஒருத்தர் கூட தோட்டம் பக்கமே வருவதில்லையாம்.
பாமக தலைவர் ஜிகே.மணியை தோளில் சுமந்து கொண்டாடிய பென்னாகரம் தொகுதி பாமக நிர்வாகிகள், 20 ஆண்டுகளுக்குப் பிறகும் விரத்தியுடனேயே பேசுகிறார்கள். 1996 மற்றும் 2001 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அவரின் வெற்றிக்காக கைகாசைப் போட்டு செலவு செய்து கடுமையாக உழைத்தோம்.
இரண்டு முறை இதே தொகுதியில் இருந்து வெற்றிப் பெற்ற போதும், தொகுதியின் வளர்ச்சிக்காக ஒரு நல்ல காரியமும் செய்யவில்லை. ஆனால், அவர் மட்டும் திமுக தலைவர் கலைஞரோடும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோடும் நெருக்கமாகி, தனது குடும்பம் பலதலைமுறைக்கு கவலையில்லாமல் வாழும் அளவிற்கு வசதிகளை பெருக்கிக் கொண்டார்.
ஆனால், வானம் பார்த்த பூமியான பென்னாகரத்தில் நாள்தோறும் கஷ்டப்படும் வன்னியர்களில் ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்குக் கூட அரசு வேலை வாங்கி தர, ஜிகே.மணிக்கு மனசே வரவில்லை. நூறு, இருநூறு பேர் வேலை பார்க்கிற அளவுக்கு சின்ன, சின்ன தொழிற்சாலைகளைக் கூட கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தக்காளி விளைச்சல் இந்த பக்கம் அதிகம். அதனை பாதுகாப்பாக இருப்பு வைத்து, நல்ல விலை வரும் போது விற்கும் வகையில் ஒரு குளிர்சாதன வசதி கொண்ட கிடங்கை கூட ஏற்படுத்தி தரவில்லை ஜிகே.மணி.
பாமக சாதனையாக பெருசா சொல்கிறார்கள் 10.5. சதவிகித இடஒதுக்கீட்டை. மேல்படிப்பு படிப்பதற்கே பொருளாதார வசதியில்லாத வன்னியர்கள் அதிகமாக வாழும் இந்த தொகுதியில் எந்த இடஒதுக்கீட்டை வைத்து மேல்படிப்பு படிக்கிறது. அதற்குப் பிறகு அரசு வேலைக்குப் போறது என்ற ஆதங்கக் குரல்கள் அதிகமாகவே கேட்கின்றன பென்னாகரம் பாமக நிர்வாகிகளிடம்.
காசு, பணம் கூட இரண்டாம் பட்சமய்யா. ஒரு நல்லது, கெட்டது பற்றி தகவல் கிடைச்சா, தொகுதியில இருக்கிற மக்களை வந்து பார்க்கற குணம் வேண்டாமா.. ஜெயிச்ச கையோடு சென்னைக்கும், தைலாபுரத்திற்கு மட்டுமே பயணம் செய்தால் போதுமா.. போன முறை திமுக.வுல நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ.வாக இருக்கற பி.என்.பி. இன்பசேகரன்தான், இப்பவும் போட்டியிடுகிறார். மனுஷன் பத்தி சொல்லனும்மனா, தொகுதி பூராவும் அவ்வளவு நல்ல பேரு.
குக்கிராமத்தில் ஒரு நல்ல காரியம்முனு பத்திரிகை வச்சா, மனுஷன் எந்த ஊரில் இருந்தாலும் வந்து வாழ்த்திட்டு போவாரு..அதவிட முக்கியம், துக்க காரியம்னு தகவல் தெரிஞ்சா போதும், நேரத்தில வந்து, காரியம் முடியற வரைக்கும் பொறுமையாக உட்கார்ந்திருந்து, ஆறுதலா இருப்பாரு இன்பசேகரன். தாழ்த்தப்பட்ட மக்களா இருந்தாலும் ஓடி ஓடி உதவுவாரூ. நல்லதோ, கெட்டதோ, எங்க கூடவே இருக்கற மனுஷன்தான் எங்களுக்கு வேணும். அதனால, கட்சி பார்க்காம, உதயசூரியனுக்கே ஓட்டை போட்டுட்டோம்.
வெறும் சாதி உணர்ச்சியை மட்டும் தூண்டிவிட்டுட்ட ஆதாயம் அடையலாம்னு தைலாபுரம் நினைச்சா, அது இனிமே நடக்காது. பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் நிற்கிறாராரு..அவரு பாமக.வை விட்டு போயி தனிக் கட்சி நடத்துறாராரு. அங்க போயி நின்னுகிட்டு, அவன் பொறுக்கி, ரவுடின்னு இளையவரு பேசராரு..இதெல்லாம் நியாயமா சொல்லுங்க.. வாட்ஸ் அப்.பில் வந்த அவரு பேச்சைக் கேட்டு எங்களுக்கே ஆத்திரம் வருது. வேல்முருகன் ஆதரவுக்கூட்டம் எப்படி எடுத்துக்கும்.
கட்சியை விட்டு ஒருத்தர் போயிட்டா, அவரப் பத்தி பேசக் கூடாது. அதுவும் பெரிய இடத்தில இருக்கிறவங்க ஒரு வார்த்த சொல்லக் கூடாது. இவரு இப்படி பேசும்போது, குரு பெஞ்சாதியும், மகனும், மகளும் பேசறதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்க தோணுமா இல்லையா.. என்ன நியாயம் சொல்லுங்க..
இப்படியெல்லாம் தேர்தல் முடிஞ்ச பிறகும் விரக்தியான பேச்சு, பென்னாகரத்தில் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார் அந்த தொகுதிக்குட்பட்ட ஊரில் வசிக்கும் அரசு அதிகாரி ஒருவர். அதே சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றாலும் கூட முழுசா மனசாட்சியை விற்றுவிட முடியுமா என்று கேட்கிறார் அந்த அதிகாரி…
எங்க புலம்பல் எல்லாம் தலைவரு காதுல விழுந்துச்சா என்னவோ, தேர்தல் முடிஞ்சப் பிறகு சில நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்வுல அஞ்சலி செலுத்துவதுக்காக தொகுதிக்கு வந்துட்டு போறாரு..இத முன்பே செஞ்சிருக்கலாம்.இப்ப காலம் கடந்து போச்சுன்னு அங்கலாய்கிறாரு அந்த அரசு அதிகாரி…
என்னத்த சொல்ல….