பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அதிகாலை சென்னை வந்தார். தியாகராயநகரில் உள்ள மறைந்த சகோதரர் ஜெயராமனின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்தில் தங்கியிருக்கிறார். பாஜக மேலிடத்தின் அழுத்தம் காரணமாக அதிமுக.வில் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்வார்கள், டிடிவி தினகரனின் அமமுக.வுடனும் கூட்டணி அமைக்க முன்வருவார்கள் என எதிர்பார்த்தார் வி.கே.சசிகலா.
இரண்டு கோரிக்கைகள் தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி வரை எதிர்ப்பு காட்டியதால், ச்சீ..சீ..இந்தப் பழம் புளிக்கும் என்று கதையாக, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு, தேர்தல் காலத்தில் அமைதியானார் வி.கே.சசிகலா.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் உச்சத்தில் இருந்தபோதே, குடும்ப விழாவுக்காக தஞ்சாவூர் பயணம் மேற்கொண்டார். ஆன்மிக சுற்றுலாவிலும் பிஸியானார். வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக வி.கே. சசிகலாவுக்கு அரசியல் ஆசை மீண்டும் துளிர் விட்டிருக்கிறது.
தனக்கு மிகமிக நெருக்கமான அதிமுக மற்றும் அமமுக பிரமுகர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று ஆர்வலமாக கேட்டு வருவதாகவும், திமுக.தான் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பான்மையானோர் கூறும் தகவலால் உற்சாகமாகி வருவதாகவும் தகவல் கசியத் தொடங்கியுள்ளது.
வடமாவட்டத்தைச் சேர்ந்த, நமக்கு நெருக்கமான அமமுக வேட்பாளர் ஒருவரிடம் பேசினோம்.
உண்மைதான் நண்பரே..வி.கே. சசிகலா, ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு உற்சாகமாகிவிட்டார். தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, வடமாவட்டங்களில் உள்ள அமமுக வேட்பாளர்களிடமும் தேர்தல் நிலவரம் குறித்து கருத்துகளை கேட்டு வருகிறார். அவருக்கு இந்த விஷயத்தில் டாக்டர் வெங்கடேஷ் மிகவும் உதவிக்கரமாக இருந்து வருகிறார். அமமுக.வின் போட்டியால் தென் மாவட்டங்களில் மட்டும் 50 முதல் 60 தொகுதிகளில் அதிமுக.வின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், முக்கிய அமைச்சர்கள் பலர் தோல்வியை தழுவுவார்கள் என்ற தகவலும் வி.கே.சசிகலாவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுபோல, கோவில்பட்டி, உசிலம்பட்டி ஆகிய 2 தொகுதிகளிலும் அமமுக வெற்றி உறுதி என்றும், மேலும் ஒன்றிரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்ற தகவலும், வி.வே.சசிகலாவை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
அதிமுக.வுக்கு அவமானகரமான தோல்வி கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினர் கூறும்போது, தன்னையறியாமல் அவர் சோகமடைவதாகவும், அவரை சந்திக்கும் ஒன்றிரண்டு அதிமுக பிரபலங்கள் கூறுகிறார்கள். அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
ஆனால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு அவரே வந்துவிட்டதாகதான் தெரிகிறது. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, ஒன்றிரண்டு முன்னணி அதிமுக நிர்வாகிகளை, நம்பிக்கைக்குரிய மூத்த ஊடகவியலாளர்களை அழைத்து அவர் பேசுவார். நாட்டு நடப்புகளையும், அதிமுக.வில் நடக்கும் உட்கட்சி பஞ்சாயத்துகளையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார். அதே வழியை இப்போது வி.கே.சசிகலாவும் பின்பற்ற தொடங்கியிருப்பதாகவும், அவரை சந்திக்கிற ஒன்றிரண்டு அமமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆனால், ஜெயலலிதாவை சந்தித்து மனம் திறந்து பேசிய எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக விசுவாசிகள் பலரைப் போல, இப்போது வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து பேச, எம்.ஜி.ஆர். காலத்து விவவாசிகள் பலர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
டாக்டர் வெங்கடேஷ் மூலம் அழைப்பு போனபோது, சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு பிளவுப்பட்டிருந்த அதிமுக, ஒன்றாகிவிட்டது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இருந்தாலும் இருவரின் தலைமையில் கட்சி கட்டுப்பாட்டுடன்தான் இருக்கிறது. இதே நிலைமை நீடிப்பதுதான் இப்போதைக்கு நல்லது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் கூட பரவாயில்லை.
இரட்டையர் தலைமையில் அதிமுக நீடிப்பதே , எதிர்கால அரசியலுக்கு நல்லது. அரசியலில் இருந்து ஒதுங்கியது ஒதுங்கியவாறே இருந்தால் சசிகலாவுக்கு நல்லது. 2016 ஆம் ஆண்டில் செய்த மாதிரி தில்லுமுல்லுகளை சசிகலா செய்ய தொடங்கினால், அதிமுக பிளவுபடுகிற மாதிரி தோற்றம் கிடைக்குமே தவிர, முழுமையான அதிமுக, சசிகலா பின்னால் அணிவகுக்காது என அறிவுரைகளை கூறி சசிகலாவை சந்திக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இருப்பினும், ஒரு சில ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு வி.கே.சசிகலாவை சந்திக்கும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஒன்றிரண்டு பேர், மே 2 க்குப் பிறகு அதிமுக.வுக்கு நீங்கள் தலைமை ஏற்றால்தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை அதிமுக.வுக்கு கிடைக்கும் என்று தூபம் போட்டு வருவதாக தகவல் உண்டு. இதேபோலதான், எம்.ஜி.ஆர் காலத்திலேயே அதிமுக.வில் உறுப்பினராகி மேடைதோறும் எம்.ஜி.ஆர். புகழைப் பாடி வந்த மூத்த ஊடகவியலாளர்கள் ஓரிருவர், சசிகலாவை வந்து சந்திக்குமாறு டாக்டர் வெங்கடேஷ் மூலம் அழைப்பு வந்தபோது நாகரிகமாக மறுத்துவிட்டார்களாம்.
செல்வி ஜெயலலிதா மறைந்த போது, வி.கே.சசிகலாவை ஆதரித்து பேசியதற்கு காரணம், எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியான அதிமுக பிளவுப்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே நடந்த உரையாடல்களை எல்லாம் தொலைக்காட்சி விவாதங்களின் போது சுட்டிக்காட்டி பேசி சசிகலாவுக்கு துணை நின்றோம்.
ஆனால், இந்த நான்காண்டுகளில் அதிமுக.வை ஒரு கட்டமைப்போடு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வைத்திருக்கின்றனர். இப்போது மீண்டும் அதிமுக.வில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தப் போகிறேன் என்று சசிகலா வந்தால் தேன் கூட்டில் கை வைத்த கதையாகிவிடும். அவரை ஆதரித்துப் பேசினால், மாதந்தோறும் சம்பளம் தருவதாக நீங்கள் கூறும் ஆசை வார்த்தைக்கு எல்லாம் பலியாகிற நபர்கள் நாங்கள் இல்லை.
எம்.ஜி.ஆர்., மீதும் செல்வி ஜெயலலிதா மீதும் நாங்கள் வைத்திருக்கிற பக்தியைப் போல, ஒருநாளும் சசிகலா மீது வைக்க முடியாது. அதனால், அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன் என்று சொன்னதை நிரந்தரமாக்கச் சொல்லுங்கள். அதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும் என்று நேரடியாக கூறிய மூத்த ஊடகவியலாளரைப் பற்றிய பேச்சுதான், அமமுக மூத்த நிர்வாகிகளின் மனசாட்சியையே தட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது.
அதற்கு காரணம், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 99 சதவிகித அமமுக வேட்பாளர்கள், தேர்தல் செலவுகளுக்காக ஒன்றிரண்டு கோடி ரூபாயை இழந்திருக்கிறார்கள். அத்தனையும் அவர்கள் சொந்த பணம்தான். அதற்கு மேலும் கடன்வாங்கி செலவு செய்த அமமுக வேட்பாளர்கள், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு படும் பாட்டை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரே ஒருவரைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். பெரம்பூரில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் லட்சுமி நாராயணன், தேர்தல் செலவுக்காக வாங்கிய கடனை திருப்பி தருவதற்காக, சொத்து பத்திரங்களை அடகு வைக்க, கடந்த சில நாட்களாக படும் சிரமத்தை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இதேபோலதான், மற்ற வேட்பாளர்களும் கஷ்டத்தில் உள்ளனர். நான் பெரிய அளவில் செலவு செய்யவில்லை. அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.
ஆனால், தேர்தலில் சக்திக்கு மீறி செலவு செய்துவிட்ட அமமுக வேட்பாளர்களின் பரிதாபத்தை பார்த்தாவது, தலைமை அழைத்து பணம் கொடுத்து உதவலாம். ஆனால், அவர்களோ, மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக.வை கைப்பற்றவும், அதற்காக விலைபோக தயாராக இருக்கிற அதிமுக முன்னணி நிர்வாகிகளுக்கும் கோடிகளை கொட்டி கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் என்னைப் போன்ற அமமுக விசுவாகிகளை நோகடிக்க செய்கிறது. சந்தையில் எப்போதுமே புதுசுக்குதான் மவுசு இருக்கும் என்பதை மன்னார்குடி குடும்பமும் நிரூபித்துவிட்டது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் அதிமுக.வில் வேலை செய்யுமா? மே 2 வரை காத்திருக்க வேண்டும்.