Fri. May 3rd, 2024

ஏப்ரல் 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடையும் நாள். அன்று காலை தமிழ், ஆங்கிலம் என எல்லா நாளிதழ்களிலும் முதல் 4 பக்கம் வெளியாகியிருந்த செய்திகள், திமுக.வையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அவை. நடப்புச் செய்தி போல வெளியாகியிருந்துதான், திமுக.வின் உச்சகட்ட கோபத்திற்குக் காரணம்.

திமுக வன்முறை கட்சி என்று சித்தரிக்கப்படும் வகையில், முந்தைய திமுக. ஆட்சியின் நிகழ்வுகளை, பத்தாண்டுகளுக்கு முன்பு செய்தியாக வந்ததையெல்லாம் அப்படியே மறுபிரசுரிப்பு செய்வதைப் போல மிக,மிக நேர்த்தியாக செய்திருந்தனர். இது விளம்பரமா, செய்தியா என்பதைக் கூட உடனடியாக யூகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு, அந்த 4 பக்க விளம்பரமும் திமுக.வை கொதி நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. அதைப் பற்றி, அன்றைய தேர்தல் பிரசாரத்தின் போதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அவரின் பேச்சினூடாக, அவரது ஆழ்மனதில் இருந்த கோபமும் வெளிப்பட்டது.

அன்றைய பிரசாரத்தின் போதுகூட, அந்த 4 பக்க விளம்பரத்திற்கு அதிமுக அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டி பேசினார். நேரிடையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தாக்கினார். ஆனால், அந்த 4 பக்க விளம்பரமும் அதிமுக கொடுக்கவில்லை. பாஜக மேலிடத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாகதான் அனைத்து நாளிதழ்களிலும் அந்த விளம்பரம் பிரசுரமானது என்ற தகவல் கிடைக்க, அதிர்ச்சியில் இருந்து விலக முடியாமல் போனது.

அதுவும் 4 ம் தேதி இரவு வழக்கமாக நாளிதழ்கள் அச்சுக்குப் போகும் நேரத்திற்கு சிறிது முன்பாகதான் அந்த நான்கு பக்க விளம்பரமும் வந்ததாக, பிரபல அச்சு ஊடகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

முதல் 4 பக்கம் எங்களுக்கு வேண்டும். அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை சொல்லுங்கள் என கேட்கப்பட்டு நான்கு பக்கத்திற்கான விளம்பர கட்டணத்தை முழுமையாக செலுத்தியிருக்கிறார்கள். விளம்பரத்தில் என்ன இடம் பெறும் என்பதைக் கூட, விளம்பரம் கொடுத்தவர்களின் தரப்பில் இருந்து சொல்லப்படவில்லை. பிரசுரிக்க மாட்டோம் என்று சொன்னபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான அதிகாரியிடம் இருந்து மிரட்டலாக போன் வந்திருக்கிறது. அதேபோல, டெல்லியில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கில நாளிதழ்களான த ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு நாளிதழ்களும் கடைசி நிமிடம் வரை பிடிவாதமாக இருக்க, டெல்லி மேலிடத்தின் அழுத்தத்தை தாங்க முடியாமல்தான், வேண்டா வெறுப்பாக 4 பக்க விளம்பரங்களை பிரசுரிக்க ஒப்புக் கொண்டதாக, அந்த இரு நிறுவனங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

திமுக.வை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட அந்த விளம்பரத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர், அரவங்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ் என்பதும், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து ஒப்படைத்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை நேரடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பவர் என்று கூறும் டெல்லி அரசியல் தலைவர் ஒருவர், இருவருக்கும் இடையே நடந்த கருத்து பரிமாற்றத்தின் காரணமாகதான், இந்த 4 பக்க விளம்பரம் வெளியாக, அவர்கள் எதிர்பார்த்தற்கு மேலாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாகவும், அதனால், பிரதமர் மோடியின் மனதில் அண்ணாமலை பெயரும் ஆழமாக பதிந்துவிட்டது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இதே யுக்தியை, அசாம் தேர்தலிலும் பயன்படுத்தியுள்ளது, டெல்லி பாஜக மேலிடம். அப்படியென்றால், இந்த 4 பக்க விளம்பத்தின் மூளை அதிமுக.வுக்கு சொந்தமானது அல்ல என்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறினார்.

அண்ணாமலையின் முக்கியத்துவம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாக இருக்கிறது மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக நட்சத்திர பேச்சாளராக அவர் அழைக்கப்பட்டிருப்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்…

இந்த இரண்டு அம்சங்களை கோடிட்டு காட்டும் டெல்லி அரசியல் தலைவர், அண்ணாமலையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான், திமுக.வுக்கு எதிரான நாளிதழ் விளம்பர ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று மு.கஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகிய மூவரும் சந்தேகிப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற விளம்பரம் வெளியாகப் போகிறது என்ற தகவலே கடைசி நிமிடம் வரை முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட யாருக்குமே தெரியாது என்பதுதான்.

திமுக.வுக்கு எதிரான நான்கு பக்க விளம்பரங்களை பிரசுரிக்க மாட்டோம் என்பதில் கடைசி வரை உறுதியாக நின்ற ஒரே ஒரு நாளிதழ், டைம்ஸ் ஆப் இண்டியா (times of india) மட்டுமே..

கடந்த 6 மாத காலமாக கடுமையான தேர்தல் பிரசாரத்தை கையில் எடுத்து, கொரோனோ அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல், மு.க.ஸ்டாலின் ஊர், ஊராக பிரசாரம் செய்ததையெல்லாம் தூள் தூளாக்கும் வகையில் மிக,மிக ரகசியமாக 4 பக்க விளம்பரம் உருவாக்கப்பட்டதும், அதன் கருத்தாக்கமும், நாளிதழ் அச்சுக்குப் போகும் வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற யுக்தியும், திமுக.மீது பரம வைரியாக இருக்கும் ஊடகவியலளர்கள் உதவியின்றி நடக்க வாய்ப்பே இல்லை என்று திமுக.வின் உயர் இடத்தில் உள்ள மூவர் அணி சந்தேகிக்கிறது.

இதுதொடர்பாக அவர்கள் ரகசியமாக விசாரிக்கவும் தொடங்கியுள்ளனர். அதில் முதற்பெயராக மாரிதாஸும், இரண்டாவது பெயராக ரங்கராஜ் பாண்டே மீதும் திமுக மேலிடத்தின் சந்தேகப் பார்வை அழுத்தமாக விழுந்திருக்கிறது.

மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியானப் பிறகு திமுக மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்து, இந்த 4 பக்க விளம்பரத்தின் முக்கிய மூளை யார் என்பது வெட்ட வெளிச்சமாக வாய்ப்பிருக்கிறது. நான் கூறிய அனைத்து தகவல்களுமே மேல் மட்ட அளவில் அரசல் புரசலாக பேசப்படுவைதான். அதை நினைவில் கொள்ளுங்கள் என்று பிடி கொடுக்காமலேயே பேசி முடித்தார்.

பெரிய இடத்து வம்புதான் போல….