Tue. Nov 26th, 2024

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் ஆளும்கட்சி மற்றும் பாஜக.வினர் இடையே வன்முறை மூண்டதையடுத்து, பாதுகாப்பு படையினர் சுட்டதில் 4 பேர் பலியாகினர். இந்த நிகழ்வுக்கு பொறுப்பு ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹவுரா, ஹூக்லி, அலிபூர்தார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் ஹவுராவிலும், 11 தெற்கு 24 பர்கானாக்களிலும், ஐந்து அலிபுர்துவாரிலும், ஒன்பது கூச் பெஹாரிலும், பத்து ஹூக்ளியிலும் உள்ளன. 

நான்காம் கட்ட தேர்தலில் பிரபல வேட்பாளர்களாக பாபுல் சுப்ரியோ, அருப் பிஸ்வாஸ்,  பார்த்தா சாட்டர்ஜி, திரைப்பட நடிகர் ஸ்ரபந்தி சாட்டர்ஜி, ராஜீப் பானர்ஜி உள்ளிட்டோர் உள்ளனர். 
மாலை 4 மணி நிலவரப்படி 44 தொகுதிகளிலும் சராசரியாக 66.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 
இதனிடையே, கூச்பெஹார் மாவட்டத்தில் உள்ள மாதாபங்கா எனும் ஊரில் வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈடுபட்டவர்களை கலைக்க மத்திய பாதுகாப்புப் படையினர், தடியடி நடத்தினர். அப்போதும் இருதரப்பினரும் கலையாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து,  வன்முறையில் ஈடுப்பட்டவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, அப்பாவி மக்களை மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்கு பொறுப்பு ஏற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், துப்பாக்கிச் சூடு நிகழ்வு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.