Fri. Nov 22nd, 2024

மேற்கு வங்காளத்தில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு விறு விறுப்புடன் தொடங்கியது
மேற்கு வங்காளத்தில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு விறு விறுப்புடன் தொடங்கியது

மேற்கு வங்காளத்தில் இன்று (சனிக்கிழமை) 4-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மட்டும் இன்னும் களத்தின் சூடு தணியவில்லை.

அங்கு 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. அங்கு 4-வது கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ஹவுரா (9 தொகுதிகள்), தெற்கு 24 பர்கானாக்கள் (11), அலிபுர்துவார் (5), கூச்பெகர் (9), ஹூக்ளி (10) ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 44 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை சேர்ந்த 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலத்தை 1 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்காளர்கள் இன்று நிர்ணயிக்கிறார்கள்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 15,940 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூத்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மாநில போலீசாருடன் இணைந்து 789 கம்பெனி துணை ராணுவத்தினரும் 44 தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இன்று நடைபெறும் தேர்தலில் பல்வேறு முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக டோலிகஞ்ச் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ முக்கிய வேட்பாளராக கருதப்படுகிறார்.

இதைப்போல பா.ஜனதா எம்.பி.க்கள் லாக்கட் சட்டர்ஜி, நிதிஷ் பிரமாணிக் போட்டியிடும் முறையே சுச்சுரு, தின்கட்டா தொகுதிகளும் முக்கியமான தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன.

மாநில சட்டசபை தேர்தலில் மத்திய மந்திரி, எம்.பி.க்களை களமிறக்கி இருக்கும் பா.ஜனதாவின் செயல் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தது. பா.ஜனதாவுக்கு உள்ளூர் முகங்கள் இல்லாததால், இப்படி எம்.பி.க்களை களமிறக்குவதாக அந்த கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால் மத்திய மந்திரி மற்றும் எம்.பி.க்களை களமிறக்கி இருப்பதன் மூலம் இந்த தேர்தலை பா.ஜனதா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என பா.ஜனதா கூறியிருந்தது.

இவர்களை தவிர திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ரஜிப் பானர்ஜி உள்ளிட்டோரும் இன்றைய தேர்தலில் பிரபலங்களாக கருதப்படுகின்றனர்.

மிகுந்த அனல் பறக்கும் மேற்கு வங்காள தேர்தல் களத்தில் இவர்கள் வெற்றி வாகை சூடுவார்களா? என்பது மே 2-ந் தேதி தெரிந்து விடும்.