வரலாற்று சிறப்புக் கட்டுரை ; பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து
சின்வம்சம்: கி.மு. 220-206: கி.மு. 364-234 வரை 150 ஆண்டுகள் நடந்த போர்களில் 14,80,000 மரணங்கள் நிகழ்ந்தனபக்:108,109). 1,20,000 பணக்காரக் குடும்பங்களுக்கு மேல் வெளியேற்றப் பட்டன(பக்:109). இறுதியில் சின்(Qin) வம்ச அரசு கிமு. 220இல் உருவானது. வணிக முதலாளித்துவம் என்று சொல்லும் அளவு வணிகர்கள் அன்று மிக அதிக செல்வவளம் மிக்கவர்களாக இருந்தனர். சின் வம்சம் 15 ஆண்டுகளே இருந்த போதிலும் அது பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்தது. சுதந்திர உள்ளூர் அரசுகள் அனைத்தும் நீக்கப்பட்டு மத்திய அரசு பலப்படுத்தப்பட்டது. இந்த அரசு எடை, பணம், எழுத்து போன்ற பலவற்றை தரப்படுத்தியது. எல்லையில் படையெடுத்து வருபவர்களைத் தடுக்கப் பெருஞ்சுவர் (6400 கி.மீ. தூரம்) கட்டுவது தொடங்கப்பட்டது.
கி.மு. 213இல் சின் வம்ச அரசன் தனது காலத்திலிருந்தே வரலாறு தொடங்கப்பட வேண்டும் எனக் கருதி பண்டைய நூல்கள் அனைத்தையும் தீயிட்டு அழிக்கச் செய்தான். ஆனால் அவனும் அவனது வம்சமும் 10வருடங்களில் இல்லாது போயின.
கான் வம்சம்(கி.மு.202-கி.பி.220):கி.மு. 202இல் கான்(Han) வம்சம் ஆட்சிக்கு வந்தது. இந்த வம்சத்தில் மொத்தம் 26 அரசர்கள் ஆண்டனர். இந்த வம்சம் சீன வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றது. இதன் தொடக்க கால அரசர்கள் சிறந்த அரசர்களாக இருந்தனர் என்கிறார் சாமிநாத சர்மா. வென் என்ற அரசன் காலம் குறித்து, “அரசுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் சொந்தமான தானியக் களஞ்சியங்கள் நிரம்பியிருந்தன. பொக்கிசங்களும் நிரம்பியிருந்தன…. ஏழைகள் கூட குதிரைகள் வைத்திருந்தனர்……சாதாரண கிராமவாசி நல்ல அரிசியோடும், நிறைய காய்கறிகளோடும் சாப்பிட்டான்.
சுமார் 70 வருடம்(கி.மு. 206-கி.மு. 140) சீன மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்” என சர்மா கூறுகிறார்(3). கி.மு. 140க்குப்பின் வந்த வூடீ, வாங் மாங், குவாங்வூ ஆகிய மன்னர்கள் சிறந்த அரசர்களாக இருந்தனர்.இக்காலத்தில் இரும்பு, உப்பு, மது வகைகள் முதலியனவற்றின் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது. வணிகர்கள் கொள்ளை இலாபம் பெறுவது தடுக்கப்பட்டது. போக்குவரத்து தேசிய மயமாக்கப்பட்டது, மக்களிடையே கல்வி பெருகியது. நூல்கள் அதிகமாக எழுதப்பட்டன. நூல் நிலையம் கட்டப்பட்டது. அரசாங்க அதிகாரிகள் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
வடக்கே மங்கோலியா, மேற்கே துருக்கிசுதானம், தெற்கே அன்னாம் ஆகிய நாடுகள் சீன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன. வெளிநாடுகளோடு வணிகம் பெருகியது. இக்காலத்தில் தமிழகத்தோடு வணிகம் அதிக அளவு நடைபெற்றது. பிற்கால மன்னர்கள் மோசமாக ஆண்டார்கள் என்கிறார் சர்மா. ஆனால், “சின் வம்சம் அதன்பின் வந்த கான் வம்சம் ஆகிய இரண்டும் வணிகர்களைத் திரும்பத் திரும்பத் தாக்கின. பணக்கார வணிகர்களை நசுக்குவதற்காகவும், உப்பு, இரும்பு ஆகியவற்றின் இலாபங்களை பெறுவதற்காகவும், அத்தொழில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
வணிகர்களுக்கு விவசாய இலாபங்கள் மீதான வரியை விட அதிக வரி விதிக்கப்பட்டது. வரியை ஏமாற்ற முயன்ற வணிகர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. பேரரசர் வூடி(கி.மு.141-87) காலத்தில், வணிகர்களின் சொத்துக்கள் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்டன. வணிகமும் தொழில் துறையும் தான் விவசாயத்தை அழித்துக் கொண்டிருப்பதாகவும், நாட்டில் திரும்பத்திரும்ப பஞ்சம் வரவும், கிராமப்புறக் கலவரங்களுக்கும் அவைதான் காரணம் எனவும் அக்கால அரச ஆவணங்கள் புகார் கூறுகின்றன(4). எனினும் வணிகம், கைவினைப் பொருள் உற்பத்தி போன்றவை தொடர்ந்து முன்னேறி வந்தன. இரும்பு உற்பத்தி செய்யப்பட்டது, நீர்ச்சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டன. முன்சக்கர வண்டி பயன்படுத்தப்பட்டது.
தெற்கு சீனா, கொரியா, மத்திய ஆசியா, இந்தோ சீனா ஆகிய பகுதிகளுக்கு பேரரசு விரிவடைந்தது.”(5) என கிரிசு ஆர்மனின் நூல் கூறுகிறது. அதன் மூலம் அவர் வணிகர்கள் ஒரு வர்க்கம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவு விவசாயிகளையும் பாதித்தது எனக் கூறுகிறார். அறுவடைகள் நன்றாக இருந்தபோது விவசாயிகள் தங்களின் அன்றாடத் தேவைக்கு ஏதும் வைத்துக்கொள்ளாதவாறு வரி விதிக்கப்பட்டது. அறுவடை மோசமாகும் போது அவர்கள் பஞ்சத்தில் விடப்பட்டார்கள். ஆதலால் இவ்வம்சத்தின் இறுதிக் காலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கிளர்ச்சிகள் அடிக்கடி நடந்தன. அதனால் கான்வம்சம் தூக்கி எறியப்பட்டது.
இன்றுவரை: கான் வம்ச ஆட்சிக்குப்பின் கி.பி. 618 வரை, 400 வருடம் சீனா முழுவதும் குழப்பம் நிலவியது. ஆனால் இதே காலகட்டத்தில் சீனா முழுவதும் பௌத்தமதம் பரவி வந்தது. இந்த குழப்பத்தின் இறுதியில் தாங் வம்சம் உருவாகி கி.பி. 618-907ஆம் வருடம் வரை ஆண்டது. அதன்பின் சூங் வம்சம் கி.பி. 960-1279 வரை ஆண்டது. அதற்கு முன்னரே வடசீனாவில் 1234 முதல் மங்கோலிய ஆட்சி நடைபெற்றது. 1280ஆம் ஆண்டு முதல் சீனா முழுவதையும் மங்கோலியத் தலைவன் குப்ளேகானின் யுவான் வம்சம் ஆளத்தொடங்கியது. அதன்பின் மிங் வம்சம் கி.பி.1368-1644 வரை ஆண்டது. இதன்பின் இறுதியாக மஞ்சூ வம்சம் கி.பி.1644-1911 வரை ஆண்டது.
1911 முதல் சீனக் குடியரசு சன்யாட்சென் தலைமையில் உருவானது. அதன்பின் ஏற்பட்ட குழப்பங்களுக்குப்பின் சியாங்கே சேக்கின் ஆட்சி முடிவுக்கு வந்து மாவோ தலைமையிலான கம்யூனிசக் கட்சி 1949இல் ஆட்சிக்கு வந்தது. இன்று வரை சீனாவை கம்யூனிசக் கட்சி ஆண்டு வருகிறது.
பார்வை:3.சீனாவின் வரலாறு, வெ. சாமிநாத சர்மா, விடியல் பதிப்பகம், டிசம்பர் 2001, பக்: 59-62.4.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார் பக்: 110, 1115. “ “ “ பக்: 113.சான்றுகள்: 1.சீனாவின் வரலாறு, வெ. சாமிநாத சர்மா, விடியல் பதிப்பகம், டிசம்பர் 2001, பக்: 1-335.2. The World Book Encyclopedia, USA, 1988, vol-3, page: 500-503. 3. Ancient History of Encyclopedia – Ancient China By Joshua J. Mark dt. 2.9.2009.
பண்டைய உலக நாகரிகங்கள் – 15 சீன, யப்பான், கொரிய நாகரிகங்கள் – (அ) சீன நாகரிகம்(கி.மு.2050-கி.பி.1644)
சியாவம்சம்(கி.மு.2050-1600):சீனாவில் தொடக்கத்தில்(கி.மு. 2050க்கு முன்பு) பல மன்னர்கள் ஆண்டார்கள் எனவும் அவர்கள் காலத்தில்தான் நெருப்பு, வேளாண்மை, மீன்பிடித்தல், இசை, வைத்தியம், போன்ற பல கண்டுபிடிக்கப்பட்டன எனவும், குவாங்தீ என்ற அரசன் காலத்தில் பட்டு, வண்டி, படகு, காலண்டர், நாணயம், திசையறியும் கருவி போன்ற பல கண்டுபிடிக்கப்பட்டன எனவும் இறுதியில்தான் ‘யூ’ என்பவன் ஆட்சிக்கு வந்தான் எனவும் சொல்லப்படுகிறது. மிகப்பெரிய வரலாற்றாசிரியனின் ஆவணங்கள் (Records of the Grand Historian (கி.மு. 100) என்ற சீனாவின் பண்டைய நூல் சீன நாகரிகம் என்பது சியா(Xia) வம்சத்திலிருந்து(கி.மு.2050) தொடங்குவதாகக் கூறுகிறது. அதனைத் தொடங்கியவன்தான் இந்த ‘யூ’ மன்னன். அவன் காலம் வரை மன்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். அவனுக்குப்பின் வம்ச பரம்பரை ஆட்சி தொடங்கியது.
அவன் குறித்து நேரு அவன் ஒரு நாட்டாண்மைக்காரன், அரசன் அல்ல எனக் கூறுகிறார்(1). தொல்லியல் ஆய்வுகள் யூ மன்னனுக்கு முந்தைய விடயங்களுக்கு சான்றுகள் இல்லை எனவும், யூ மன்னனின் காலம் பழங்குடிகளின் ஒருங்கிணைப்புக் காலம் எனவும் கூறுகின்றன. வரலாற்றில் உலகம் முழுவதும் தொடக்கத்தில் சிறு நகர அரசுகளே உருவாயின என்பதால், மேலே சொல்லப்பட்ட தரவுகளில் இருந்து யூ என்பவன் ஒரு நகர அரசை உருவாக்கி அதில் வம்ச பரம்பரை ஆட்சியைக் கொண்டுவந்தான் எனவும் அன்றும், அதற்கு முன்பும், அதன் பின்பும் சிறு சிறு நகர அரசுகள் .கி.மு. 1600வரை சீனாவில் இருந்தன எனவும் அக்காலத்தில் நிறைய கண்டுபிடிப்புகள் நடந்தன எனவும் கூறலாம். இந்த யூ வம்சத்தில் கி.மு. 1600 வரை 17 அரசர்கள் ஆண்டனர் என ஆவணம் கூறுகிறது.
சாங் வம்சம்(கி.மு.1600-1050):அதன்பின் சாங்(Shang) வம்சம் ஆட்சிக்கு வந்தது அவ்வம்சத்தில் 28 அரசர்கள் ஆண்டனர். தொல்லியல் சான்றுகள் இந்த சாங் வம்சம் இருந்ததற்கான தரவுகளை வழங்குகின்றன. சாங் வம்சம் குவாங்கி(Huang He) பள்ளத்தாக்குப் பகுதியை ஆண்டது. குவாங்கி(Huang He –மஞ்சள்நதி), யாங்க்சி(Yangtze) ஆகிய சீனாவின் இரு முக்கிய நதிகளுக்கு இடைப்பட்ட டெல்டா பகுதிதான் இந்தப் பள்ளத்தாக்கு ஆகும். ஆனால் அக்காலத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் பல பண்பாடுகள் அருகருகே இருந்ததைக் கூறுகின்றன. சாங் வம்சம் 6 தடவை தனது தலைநகரை மாற்றியதாக ஆவணம் கூறுகிறது.இறுதியாக இன் என்ற நகரம் தலைநகராக இருந்தது.
கி.மு. 2070 முதல் கி.மு. 1050 வரையான காலகட்டம் என்பது சிறு சிறு நகர அரசுகளின் காலகட்டம் என்றுதான் கூற வேண்டும். அதில் சாங் வம்சம் ஒருசில சிறு நகர அரசுகளை ஒன்றிணைத்து விரிவுபடுத்தி ஆண்டதாகக் கொள்ளலாம். அதனருகேயும், சீனா முழுவதும் வேறு பல நகர அரசுகள் ஆண்டு வந்திருக்க வேண்டும். சாங் வம்ச காலத்தில் கி.மு. 1600இல் சீனாவின் தொடக்க கால எழுத்துமுறை கண்டுபிடிக்கப்பட்டது.
சௌ வம்சம்(கி.மு.1050-220): இதன்பின் சௌ(Zhou) வம்சம் ஆட்சிக்கு வந்தது. இந்த வம்சத்தில் 37 அரசர்கள் ஆண்டார்கள். சௌ வம்ச காலத்தில் கி.மு. 770 வாக்கில் பெரும்பகுதியான அதிகாரங்கள் 100 உள்ளூர் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நாளடைவில் அவர்கள் அதிக அதிகாரம் பெற்று சுதந்திரமான ஆட்சியாளர்களாக ஆனார்கள். கி.மு 476-221 வரை அவர்களிடையே இடைவிடாத போர்கள் நடைபெற்றன. சிற்றரசுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி போர்முறையில் முன்னேற்றத்தை கொண்டு வந்தது. தேர்கள், வாள்கள், வில்கள் முதலியன கொண்டு அவர்கள் போரிட்டதோடு, நீர்ப்பாசனத்திலும், இரும்புத் தொழில் துறையிலும் பல முன்னேற்றங்களைக் கண்டனர். இக்காலத்தில் கன்பூசியசு(Confucius), அவரது சீடர் மென்சியசு(Mencius), லாவோசு(Laozi) போன்ற தத்துவ அறிஞர்கள் பலர் தோன்றினர்.
பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சௌ வம்ச காலத்தில் கி.மு. 1000 வாக்கில் ஓரளவு வளர்ச்சியடைந்த எழுத்துமுறை, பின் கி.மு. 700இல் மேலும் வளர்ச்சிபெற்று முழுமையடைந்தது. இம்முறைதான் இன்றும் பின்பற்றப்படுகிறது. ஆகவே இக்காலத்தை(கி.மு.770-220) பொற்காலம் என சீன வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.ஜெகுவசு கெர்நெட் இக்காலம் குறித்து, “சாதாரண நுகர்பொருட்களான(துணி, தானியங்கள், உப்பு) உலோகங்கள், மரம் ஆகியவற்றின் கணிசமான வணிக வளர்ச்சியுடன், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளையும் கொண்ட வரலாற்றில் அறியப்பட்ட மிகச்செழிப்பான காலங்களில் ஒன்றாகும். மிகப்பெரிய வணிகர்கள் வணிகத்தைப் பெரிய தொழில்துறை நிறுவனங்களுடன் ஒன்றிணைத்தனர். கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்களை, வணிக முகவர்களை வேலைக்கு அமர்த்தினர்.
அரசின் செழிப்பிற்கு வணிகத்தொழில் முனைவோர் மிகப்பெரிய பங்களிப்பைச்செய்தனர். முடியரசின் தலைநகரங்கள் பெரும் வணிக மையங்களாகவும், பொருளுற்பத்தி மையங்களாகவும் ஆகின. அன்றைய யுத்தங்களின் நோக்கம் இந்த பெரிய வணிகமையங்களை வெற்றி கொள்வதாகவே இருந்தது” எனக் கூறுகிறார் (2)(பக்:107,108). வளர்ச்சிக்கான காரணம் சிறு சிறு அரசுகளே என்பதை இக்கூற்று உறுதிப்படுத்துகிறது.
பார்வை:1.உலக சரித்திரம், சவகர்லால் நேரு, தமிழாக்கம்-ஒ.வி.அளகேசன், அலைகள் வெளியீட்டகம், 2006, பக்: 73-762.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார் பக்: 107, 108. சான்றுகள்: 1.சீனாவின் வரலாறு, வெ. சாமிநாத சர்மா, விடியல் பதிப்பகம், டிசம்பர் 2001, பக்: 1-335.2. The World Book Encyclopedia, USA, 1988, vol-3, page: 500-503. 3. Ancient History of Encyclopedia – Ancient China By Joshua J. Mark dt. 2.9.2009.
6Balan Natchimuthu மற்றும் 5 பேர்1 பகிர்வுவிரும்புகருத்துத் தெரிவிபகிர்