சிறப்பு வரலாற்றுக் கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து……
உரோம் நகரம்: கி.மு. 753 இல் இத்தாலியில், உரோம் நகரம் இனக்குழு கால ஒரு சிறுகுடிச் சமூகத்தின் கிராமமாக உருவாகியது. கி.மு. 600அளவில் மத்திய இத்தாலியில் இருந்த எட்ருசுகன்(Etruscan) என்ற இன மக்கள் உரோமைக் கைப்பற்றி ஆண்டனர். அவர்கள் ஆட்சிக்காலத்தில் உரோம் ஒரு நகராக உருவாகியது. கி.மு. 509இல் உரோம் மக்கள் எட்ருசுகன்களை துரத்திவிட்டு உரோம் நகர அரசை ஒரு தொடக்ககாலக் குடியரசாக உருவாக்கினர். அதன்பின் தொடர்ந்து தங்களைச் சுற்றியுள்ள பல மக்களோடும், நகரங்களோடும் கடுமையாகப் போராடி வந்தனர்.
கி.மு. 387இல் உரோமை பகைவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். ஆனால் இறுதியில் உரோம், கி.மு. 275 வாக்கில் இத்தாலி முழுவதையும் வென்று தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு. அன்று உரோமில் மூன்றுவகை மக்கள் இருந்தனர். குடிமக்கள், பிலபியன்கள்(Plebeians) எனப்படும் பிற மக்கள், அடிமைகள். குடி மக்களில் பாட்ரிசியன்கள்(Patricians) எனப்படும் உயர்குல மக்கள் இருந்தனர். பிலபியன்கள் மிக நீண்ட காலம் போராடி கி.மு. 287 வாக்கில் சமத்துவமும் உரிமையும் உடைய குடிமக்களாக ஆனார்கள். இதன்பின் உரோம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. அதன் காரணமாக உரோம், வட ஆப்ரிக்கக் கரையில் இருந்த கார்த்தேஜ் நகரை எதிர்த்துப் போரிட்டது. .
கார்த்தேஜ்: கி.மு. 800அளவில் கார்த்தேஜ் உருவானதாக கருதப்படுகிறது. இது பொனீசியன்கள் உருவாக்கிய நகராகும். கி.மு. 600க்குப்பின் இது சுந்திர நகராக ஆகியது. கூடிய விரைவில் இது மத்தியதரைக்கடலின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு பெரும் அரசாக ஆகியது. ஆனால் கி.மு. 500க்குப்பின் இதன் வலிமை குன்றத்தொடங்கியது. இது மத்திய இத்தாலியில் இருந்த எட்ருசுகன்களோடு இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால் எட்ருசுகன்கள் கி.மு. 500க்குப்பின் வலிமை இழந்தார்கள். மேலும் கிழக்கு பொனீசியன்களின் ஆதரவும் இல்லாது போயிற்று. ஆதலால் கிரேக்க அரசுகளோடும் அதன் காலனிகளோடும் இது தனித்து போராட வேண்டியதிருந்தது. கி.மு. 480இல் கிரேக்கர்கள் சிசிலியில் இதனை தோற்கடித்தார்கள். ஆனால் கி.மு. 410இல் மீண்டும் சிசிலியை கார்த்தேஜ் கைப்பற்றிக்கொண்டது. அதன்பின் கி.மு. 300க்குப்பின்னர் இவர்கள் உரோம் உடன் போரிட வேண்டியிருந்தது.
உரோமுக்கும், கார்த்தேஜுக்கும் இடையே நடைபெற்ற போர்கள் பியூனிக் போர்கள் எனப்படுகிறது. மூன்று போர்கள் நடைபெற்றது. முதல் போர் கி.மு. 264 முதல் கி.மு. 241வரை நடைபெற்றது. இரண்டாவது போர் கி.மு. 218 முதல் கி.மு. 201 வரை நடைபெற்றது. இப்போரில் அனிபால் என்ற கார்த்தேஜ் தளபதி உரோமை தோற்கடிக்கும் நிலைக்குக் கொண்டுசென்றார். ஆனால் கி.மு. 149-146இல் நடந்த மூன்றாவது போரில் கார்த்தேஜ் தோல்வியுற்று அடியோடு அழிக்கப்பட்டது. அதன்பின் கார்த்தேஜ் உரோம் அரசின் வணிக நகராக இருந்து வந்தது. வண்டல்கள்(Vandals) என்ற செர்மானிய அநாகரிக மக்கள் அதனை கி.பி. 430இல் கைப்பற்றினர். இறுதியாக கி.பி. 698இல் அரேபியர்களால் அது அழிக்கப்பட்டது. இவர்கள் பொனிசியன் மொழியிலிருந்து உருவான பியுனிக்(Punic) மொழியை பேசினர்.
உரோம் குடியரசு(கி.மு.509-27): இரண்டாம் பியூனிக் போருக்குப்பின் உரோம் கிழக்குப்பகுதியில் தனது அரசை விரிவு படுத்தியது. கிரேக்க நகர அரசுகளை மாசிடோனியா கி.மு. 338இல் கைப்பற்றியிருந்தது. ஆதலால் உரோம் கிரேக்க நகர அரசுகளை விடுவிப்பவராக அங்கு சென்று போரிட்டு இறுதியில் கி.மு. 140க்குள் கிரேக்கம், மாசிடோனியா ஆகிய இரண்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
இதற்கிடையே உள்நாட்டில் ஏழை பணக்காரன் வேறுபாடும் அடிமைகள் நிலையும் சிறிது சிறிதாக அதிகரித்துச் சகித்துக்கொள்ள முடியாத நிலையை அடைந்தது. அதனால் கி.மு. 138-132, 123, 104-101, 73-71 போன்ற பல வருடங்களில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால் தொடர்ந்து உரோம் விரிவாகிக்கொண்டே வந்தது. இருப்பினும் கிழக்குப்பகுதியில் உருவான பார்த்தியப் பேரரசு இதன் விரிவாக்கத்தை மத்திய கிழக்குப் பகுதியில் தடுத்து நிறுத்தியது. ஆனால் எகிப்து, இன்றைய பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகள் உரோமின் கீழ் வந்தன.
இறுதியாக 73-71இல் நடைபெற்ற அடிமை எதிர்ப்புப் போர் சுபாட்டகசு(Spartacus) என்பவனின் தலைமையில் நடைபெற்ற போராகும். அது உரோம் அரசை அச்சத்தில் ஆழ்த்தியது. அதன் காரணமாக ஒரு பேரரசரின் தேவை உணரப்பட்டு, கி.மு. 27இல் குடியரசு என்ற நிலையில் இருந்து முடியாட்சியாக உரோம் மாற்றமடைந்தது. உரோம் முடியரசு(கி.மு.27-கி.பி.476): கி.மு. 27க்குப்பின், 200 வருடங்கள் ஒரு நிலையான அரசு அங்கு உருவானது. அமைதியும், வளமும், செல்வமும், வலிமையும் பல மடங்கு அதிகரித்தது. இக்காலகட்டத்தில் உரோம் தமிழகத்தோடு மிகப்பெரிய அளவில் வணிகம் புரிந்து வந்தது. ஆனால். கி.பி. 235 முதல் கி.பி. 284 வரை உரோம் பேரரசு மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சிக்கு உள்ளானது(1).
அக்காலகட்டத்தில் உரோமுடனான தமிழக வணிகம் நின்று போனது. உரோம் கி.பி. 395இல் இரு அரசாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று மேற்கு உரோமன் பேரரசு, இரண்டாவது கிழக்கு உரோமன் பேரரசு. மேற்கு உரோமன் பேரரசை, வண்டல்கள், விசிகோத்கள் போன்ற பல செர்மன் இனக்குழுக்கள் தொடர்ந்து தாக்கி வந்தனர். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் 6,50,000 கூலிப்படைகளை வைத்து உரோமின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டியிருந்தது(2). ஆனாலும் கி.பி. 410இல் அலாரிக்(Alaric) உரோம் நகரைச் சூறையாடினான். அதன்பின் கி.பி. 476இல் மேற்கு உரோமன் பேரரசு இல்லாது போனது.
கிழக்கு உரோமன் பேரரசு(பைசாண்டியம் பேரரசு) நீண்டகாலம் இருந்து கி.பி. 1453இல் இல்லாது போனது. கிழக்கில் கிரேக்க மொழியும், மேற்கில் இலத்தீன் மொழியும் ஆட்சி மொழிகளாக இருந்தன.
பார்வை: 1.மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன் பாலன், தமிழினி, 2018, பக்: 42.2.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார் பக்: 154
பண்டைய உலக நாகரிகங்கள் – 14
கிரீட், கிரேக்க, உரோம நாகரிகங்கள் -( ஊ )
பண்டைய உரோம் பேரரசு(கி.மு.509-கி.பி. 476)
உரோமின் சமூகநிலை:உரோமப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலை எழுதிய எட்வர்ட் கிப்பன், “உலக வரலாற்றில், மனித இனத்தின் நிலைமை மிகவும் மகிழ்ச்சியாகவும், வளமையுடனும் இருந்த ஒரு காலகட்டத்தை குறிப்பிடுமாறு ஒருவர் கேட்டுக்கொண்டால், கி.பி. 98 முதல் கி.பி 180 வரையான உரோம் காலகட்டத்தைத்தான் அவர் தயங்காமல் குறிப்பிடுவார்’” எனக் கூறுகிறார்(3). சில வரலாற்று அறிஞர்கள் சீசருக்குப்பின் மார்க்கசு அரேலியசின் காலம்(கி.மு.31-கி.பி.180) வரையான காலகட்டம் உரோம் அரசின் பொற்காலம் எனக் கூறுகின்றனர்.ஆனால் அப்யூலீயசு என்பவர் எழுதிய ‘தங்கக் கழுதை’ என்ற 2ஆம் நூற்றாண்டின் எள்ளல் புதினத்தில் வழங்கப்பட்டுள்ள பேரரசில் வாழ்க்கை பற்றிய சித்திரம் மிகவும் மாறுபட்டுள்ளது.
“ஒரு இரொட்டித் தயாரிப்பாளரிடம் வேலை செய்த அடிமைகளின் நிலை குறித்து, ‘அவர்களுடைய தோல் உடலெங்கும் கசையடியின் கரும்பழுப்புத் தழும்புகளால் உறிந்து போயிருந்தது. அவர்களுடைய முதுகுத்தோலை ஒட்டுப்போட்ட கந்தல்கள் மறைத்ததைவிட காய்த்துத் தடித்துச் சிவந்திருந்த தழும்புகளே போர்த்தியிருந்தன: சிலருக்கு முன்புறம் மறைக்க ஒரு துண்டுத் துணி தவிர வேறு எதுவும் இல்லை. சட்டைகளோ உடல் தெரியும் அளவு பொத்தல்களோடு இருந்தன.
அவர்களுடைய நெற்றிகளில் முத்திரைகள் இருந்தன. அவர்களுடைய தலைகள் பாதி மழிக்கப்பட்டிருந்தன. அவர்களுடைய பாதங்களை இரும்புச் சங்கிலிகள் சுற்றியிருந்தன. அவர்களுடைய முகங்கள் வெளுத்துப்போய் அருவருப்பாக இருந்தது’ எனவும், “செல்வம் படைத்த சக்திவாய்ந்த…. நிலப்பிரபு, ஏழையின் கால்நடைகளைக் கொல்வது, எருதுகளைத் திருடுவது, சோளப்பயிரை அழிப்பது, அவருடைய நிலத்திலிருந்து அவரைத் தூக்கியெறிய குண்டர்களைக் கூலிக்கு அமர்த்துவது ஆகிய குற்றங்களுக்காக ஒருபோதும் சட்டத்தின் முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்டதில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்
(4). “உரோம் உலகம் வளமும் மகிழ்ச்சியும் நிரம்பிய ஒன்றல்ல. மாறாக பாதுகாப்பின்மை, அநீதி, சித்திரவதை, வழிப்பறி கொலை ஆகியவற்றின் உலகமாக இருந்தது. உரோமின் பெரிய அரங்குகளில் அங்கு நடந்த விளையாட்டுகளில், வாள்கொண்டு போரிடுபவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றார்கள், சிறையாளிகள் விலங்குகளால் கிழித்துக் குதறி எறியப்பட்டார்கள்” எனக் கூறுகிறார் கிரிசு ஆர்மன்(5).பொருளாதாரம்: “ஆளும் வர்க்கமும் அதன் நாகரிகமும் நகரங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், உரோமின் பொருளாதாரம் பெருமளவு கிராமம் சார்ந்ததாகவே இருந்தது….. வர்த்தகமும் தொழில் துறையும் அளித்த வருவாயை விட வேளாண்மை உற்பத்தி 20 மடங்கு வருவாய் தந்தது. …..
பெரும்பாலான நகரங்கள் வர்த்தகமோ, தொழில்துறையோ இல்லாத நிர்வாகம், ஆளும்வர்க்க நுகர்வுக்கான மையமாகவே இருந்தன….. நகரங்கள் கிராமப் பொருளாதாரத்தின் ஒட்டுண்ணிகளாக இருந்தன”(6).“உடல் உழைப்பைக் குறைக்கும் கண்டுபிடிப்புகள் மிகவும் மெதுவாகவே பயன்பாட்டுக்கு வந்தன”(7). இதற்கு உரோமில் அடிமைகள் மிக அதிக அளவில் இருந்ததே காரணம். “உரோமில் கி.மு. முதலாவது நூற்றாண்டில் சுதந்திரமான மக்கள் தொகை 3.25 மில்லியனாக இருந்த பொழுது அடிமைகள் 2 மில்லியன் இருந்தனர்”(8). ஒவ்வொரு யுத்தமும் நிறைய அடிமைகளைக் கொண்டுவந்தது. சான்றாக “மாசிடோனிய யுத்தத்திற்குப் பிறகு 1,50,000 சிறையாளிகள் அடிமைகளாக விற்கப்பட்டனர்”(9).
அடிமைகள் அதிகமாவது சுதந்திர உழைப்பாளிகளை, நகர ஏழைகளை, ஏழை விவசாயிகளை அதிக அளவில் பாதித்தது. “நகர ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமைகள் கொடுமையாக இருந்தன. அவர்களது வாழ்வாதாரங்கள் பாதுகாப்பற்றவையாக இருந்தன…. நவீன மேற்கத்திய நகரங்களில் உள்ள ஏழைக் குடியிருப்புகளைவிட 7 அல்லது 8 மடங்கு அடர்த்தியுடன் நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தார்கள்….. பலர் பருவ காலங்களிலோ, கோடைக் காலத்திலோ, துறைமுகங்களில் கிடைத்த வேலைகளைச் செய்தனர். குளிர்காலத்தில் ஏறத்தாழப் பட்டினி கிடந்தனர்”(10) ஆகவே உரோம் பேரரசில் அடிமைகள், ஏழை விவசாயிகள், நகர ஏழைகள் ஆகிய அனைவரின் நிலையும் மிக மோசமாகவே இருந்தது.
பங்களிப்பு: உரோமப் பேரரசின் நாகரிகம் மனித இனம் தனது வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ளும் திறனுக்கோ, நமது அறிவியல் அறிவு அல்லது பண்பாட்டுப் பெருமுயற்சிகளின் சேகரிப்பிற்கோ போதிய அளவு எதையும் விட்டுச் செல்லவில்லை. தொடக்ககால மெசபடோமியாவிலும், எகிப்திலும், செவ்வியல் கிரீசிலும், கி.பி.க்கு 500 ஆண்டுகள் முந்தைய இந்தியாவிலும், சீனாவிலும் தோன்றிய கண்டு பிடிப்புகளைப்போல் எதையும் உரோம் தரவில்லை. உரிமையியல் சட்டக் கோட்பாடு ஒன்றை வகுத்ததிலும், ஒரு மாபெரும் பேரரசை ஒன்றிணைத்து வைக்கத் தேவையான தகுதி வாய்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் ஆகிய இரண்டில் மட்டுமே தங்களது கிரேக்க முன்னோர்களைவிட உரோம் விஞ்சியிருந்தது(11).
பலவற்றில் அது கிரேக்கச் சிந்தனைகளை, அதன் வழிமுறைகளையே பின்பற்றி வந்தது.பார்வை: 3, 4, 5. உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார் பக்: 149, 150. 6, 7. “ “ “ பக்: 151,1528, 9. “ “ “ பக்: 138, 137.10, 11. “ “ “ பக்: 142, 132. சான்றுகள்: 1 The World Book Encyclopedia, USA, 1988, vol-16, page: 440-453.2. Ancient Civilisation, From beginning to end By Stephan Weaver @2015. 3.Ancient History of Encyclopedia – Ancient Rome By Joshua J. Mark dt. 2.9.2009. 4. 4.Ancient Cities By Charles Gates 2nd edition, page: 200-202.