Fri. Nov 22nd, 2024

பண்டைய உலக நாகரிகங்கள் – 11

சிறப்புக்கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து…

மைசீனியன் நாகரிகம் வீழ்ச்சியடைந்த பிறகு கி.மு. 1200லிருந்து கிரேக்கம் இருண்ட காலத்தில் மூழ்கியது. அதற்கு முன்பும் பின்பும் அங்கு அக்கீயர், ஐயோனியர் போன்ற பலர் குடியேறினர். கி.மு. 1100அளவில் அங்கு டோரியர்கள் படையெடுத்து வந்து குடியேறினார்கள். அவர்கள் மீதியிருந்த அனைத்தையும் அழித்தார்கள். அதன்பின் 300 வருட காலம் மக்கள் அநாகரிக நிலையில் வாழ்ந்தார்கள். இருண்ட காலம் குறித்து, “மைசீனியாவின் கடந்த காலம் முற்றிலுமாக மறக்கப்பட்டிருந்தது…. கிராமங்கள் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டிருந்தன…..

மக்கள் படிப்புறிவில்லாதவர்களாக இருந்தார்கள். கைவினைத் தேர்ச்சி முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை…. வாழ்க்கை கடுமையானதாகவும், பஞ்சங்கள் மிகுந்ததாகவும் இருந்தது”(1)(பக்:119) என்ற எடுத்துக்காட்டைத் தருகிறார் கிரிசு ஆர்மன்.கி.மு. 800க்கு முன்பு ஓமர் இலியட், ஒடிசி ஆகிய இரு புகழ் பெற்ற காவியங்களைப் பாடினார். கி.மு. 800 அளவில் கிரேக்கத்தில் வளர்ச்சி ஏற்பட்டு சிறு சிறு நகர அரசுகள் உருவாகின. நாளடைவில் கிரேக்கத்தில் இருந்த அனைத்து வகை மக்களும் ஒன்றுகலந்து தங்களை மொழியின் அடிப்படையில் கிரேக்கர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

கிரேக்க நகர அரசுகள்(கி.மு.800-335): கி.மு. 776இல் முதல்முதலாக ஒலிம்பிய(Olimpiad) விழாவை கிரேக்கர்கள் ஒன்றுசேர்ந்து கொண்டாடினர். கிரேக்க நகரங்களின் வளர்ச்சி இக்காலத்திலிருந்து மிக வேகமாகியது. வளர்ச்சி ஏற்பட ஏற்பட நிலம், மூலப்பொருட்கள், வணிகம் போன்றவற்றிற்காக நகர அரசுகளிடையே இடைவிடாத போர்கள் நடந்து வந்தன. கி.மு. 700க்குப்பின் கிரேக்கர்கள் மத்தியதரைக்கடல் முழுவதும் சென்று குடியேறி காலனிகளை அமைத்தனர். நகர அரசுகளில் தொடக்கத்தில் பிரபுக்கள் ஆட்சியும், சர்வதிகார ஆட்சியும் நடைபெற்றன. நாளடைவில் அவைகளில் சனநாயக ஆட்சிகள் உருவாகின.

ஆனால் கிரேக்க நகர அரசுகளின் சனநாயகம் என்பது அனைத்து மக்களுக்குமான சனநாயகமாக இருக்கவில்லை. மேலும் “பணக்கார நில உடமையாளர்கள் சனநாயகத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி, பலநேரங்களில் வெற்றிகண்ட ஒன்றாகத்தான் பல கிரேக்க நகர அரசுகளின் வரலாறு இருந்தது. ஆனால் இதற்குப் பாதியளவு விதிவிலக்காக ஏதென்சு இருந்தது. அங்கு சனநாயகம் 200 ஆண்டுகள் நீடித்திருந்தது.”(2).நகர அரசுகளில் குடிமக்களாக இருந்தவர்கள் 30 முதல் 40 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே இருந்தனர். ஆனால் அடிமைகள் 60 முதல் 70 விழுக்காடு வரை இருந்தனர்.

ஏதென்சு(Athens), சுபார்ட்டா(Sparta), தீப்சு(Thebes), கொரிந்த்(Corinth) ஆகிய நகரங்கள் பண்டைய கிரேக்கத்தின் மிக முக்கிய நகரங்களாக இருந்தன. கி.மு. 600லிருந்து ஏதென்சு ஒரு குடியரசாக ஆகியது. சுபார்ட்டா இராணுவ சனநாயகமாக இருந்தது. சுபார்ட்டா கி.மு. 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளைப் பிடித்து அதன் மக்களை அடிமைகளாக்கியது. அதன் காரணமாக மக்கள் தொகையில் பத்துக்கு ஒன்பது பேர் அடிமைகளாக இருந்தனர். சுபார்ட்டாவில் 32000 பேர் குடிமக்களாகவும், மத்தியதர மக்கள் 1,20,000 பேரும், அடிமைகள் 2,24000 பேரும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக, ”செவ்வியல் கிரேக்க எழுத்தாளர்களும், தத்துவவாதிகளும், அடிமைகளை உடமையாக வைத்திருப்பது நாகரிக வாழ்க்கைக்கு இன்றியமையாதது எனப் பார்த்தனர்”(3) (பக்:123). எனக்கூறும் நிலைமைதான் இருந்தது. அடிமைகளின் புரட்சிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும் சுபார்ட்டா தன்னை கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து முழுமையாக இராணுவ மயமாக்கிக் கொண்டது. குடிமக்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே இராணுவப் பயிற்சி பெற்றார்கள். இதற்கு மாறாக ஏதென்சு ஒரு சனநாயக நாடாக இருந்தது.

பார்வை: 1.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார்” பக்: 119.2. “ “ “ பக்: 127.3. “ “ “ பக்: 123.சான்றுகள்: 1. The World Book Encyclopedia, USA, 1988, vol-8, page : 390-4022.கிரீசு வாழ்ந்த வரலாறு, வெ. சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், 2003, சென்னை-83. பக்: 1 – 432.3.Ancient History of Encyclopedia – Ancient Greece by Joshua J. Mark dt. 13.11.2013.

கிரீட், கிரேக்க, உரோம நாகரிகங்கள் –

(இ) கிரேக்க நாகரிகம்(கி.மு.800-146)பாரசீகப் போர்:

பண்டைய உலக நாகரிகங்கள் – 12

கி.மு. 550இல் சுபார்ட்டா பெலப்பொனேசியன்(Peloponnesian) கூட்டமைப்பை உருவாக்கியது. பல காரணங்களால் ஏதென்சும், சுபார்ட்டாவும் எதிரெதிர் நிலையில் இருந்தன. இந்த நிலையில் பாரசீகப் பேரரசு பெரும் பேரரசாக வளர்ந்து வந்தது. அது கி.மு. 547இல் சின்ன ஆசியாவிலுள்ள கிரேக்க நகர அரசுகளைத் தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தது. அவர்கள் கி.மு. 500அளவில் பாரசீகத்திடமிருந்து விடுதலை அடைய விரும்பினர். அவர்கள் ஏதென்சின் உதவியை நாட, அது அவர்களுக்கு உதவியது.ஆனால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. எனினும் அதனால் கோபமடைந்த பாரசீகப் பேரரசு ஏதென்சு முதலான கிரேக்க நகர அரசுகளை அடிமைப்படுத்த கி.மு. 491இல் பெரும்போர் தொடுத்தது.

கிரேக்க நகர அரசுகள் ஒன்றிணைந்து பாரசீகத்தை எதிர்த்தன. இறுதியாக கி.மு. 490இல் மாரத்தானில்(MARATHON) நடைபெற்ற பெரும்போரில் பாரசீகப் படைகளை கிரேக்கர்கள் வென்று கிரேக்கத்திலிருந்து துரத்தியடித்தனர். இதன்பின் கி.மு. 481இல் மீண்டும் பாரசீகம் கிரேக்கர்கள் மீது படையெடுத்தது. 1200 போர்க்கப்பல்களும், 25 இலட்சத்துக்கு மேற்பட்ட வீரர்களும் கொண்டதாக அப்படை இருந்தது என கெரடோட்டசு கூறுகிறார். இதனை மிகைப்படுத்தப்பட்ட கூற்று எனலாம். கிரேக்கத்தில் இருந்த 31 நகர அரசுகள் ஒன்றுகூடி இப்படையை எதிர்த்தன. இப்போரில் முதலில் ஏதென்சு எரிக்கப்பட்டது. ஆனால் சாலமிசு(Salamis) கடற்போரில் கிரேக்கர்கள் பெருவெற்றி பெற்றார்கள். பின் தரைப்படைப் போரிலும் வெற்றி பெற்று சின்ன ஆசியாவின் கிரேக்க அரசுகளுக்கு விடுதலை வாங்கித் தந்தார்கள்.

இப்போருக்குத் தலைமை தாங்கியதும், உறுதியாக நின்று போராடியதும் ஏதென்சு மக்களே ஆவர். சுபார்ட்டாவின் பங்கு இருந்த போதும் ஏதென்சின் பங்கு மிக அதிகம் எனலாம்.இறுதிக்காலம்: இதன்பின் ஏதென்சு வலிமையடைந்து ஒரு பெரும் அரசாக உருவானது. இதே காலத்தில் சுபார்ட்டாவும் தன்னை வலிமைப் படுத்திக் கொண்டது. கி.மு. 446இல் இரு நாடுகளுக்குமிடையே 30 வருட சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் கிமு. 431இல் இரு நாடுகளும் பெலப்பொனேசியப் போரில் இறங்கின. கி.மு. 430இல் ஏதென்சில் ஏற்பட்ட பிளேக் நோய் அதன் மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பலிவாங்கியது. அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் நடந்து வந்த பெலப்பொனேசியப் போரில், கி.மு. 404இல் ஏதென்சு தோல்வியடைந்தது.

ஆனால் அதன்பின் தீப்சு வலிமை பெற்று கி.மு. 371இல் சுபார்ட்டாவை வென்றது.இதன்பின் கி.மு. 335இல் மாசிடோனியாவின் அலெக்சாந்தர் கிரேக்க நகர அரசுகளை வென்றதோடு, பாரசீகத்தின் மீது படையெடுத்து அதனை கி.மு. 330இல் வென்றான். அவன் இந்தியாவரை வந்து பல இடங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான். அவன் எகிப்தையும் வென்றான். அதன்பின் கி.மு. 146இல் கிரேக்கம் உரோமின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. கி.பி. 395இல் உரோம் அரசு இரண்டாகப் பிரிந்தது. கிழக்கு உரோம் பேரரசின் கீழ் கிரேக்கம் வந்தது. கிழக்கு உரோம் பேரரசு கிரேக்க மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தது. இப்பேரரசு பைசாண்டியப் பேரரசு என அழைக்கப்பட்டது.

பங்களிப்பு: கடந்த 2000 வருடங்களாக, ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக கிரேக்கச் சிந்தனை இருந்து வருகிறது. கிரேக்கம் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம், அரசியல், பொருளாதாரம், கல்வி, போன்ற பலவற்றிலும் தலை சிறந்து விளங்கியதோடு அத்துறைகளில் மிகச்சிறந்த மனிதர்களை உருவாக்கியது. அலெக்சாண்டர் எகிப்தில் உருவாக்கிய அலெக்சாண்ட்ரியா நகரத்தில் உலகத்தின் தலைசிறந்த நூலகம் உருவாக்கப்பட்டது. அந்நூலகம் கிரேக்கத்தின் அறிவுக் கருவூலங்களை பேணிப் பாதுகாத்து வந்தது.

கிரேக்க மொழி ஒரு பண்டைய மொழியாகவும், ஒரு செவ்வியல் மொழியாகவும் உருவானது. அரசியல் அறிஞன் சோலோன்(Solon), கணித மேதை பித்தகோரசு(Pythagoras), தத்துவ மேதைகள் சாக்ரடிசும்(Socrates), பிளட்டோவும், அரசியல் மேதை பெரிக்ளிசு(pericles), வரலாற்று ஆசிரியர்கள் கெரடோட்டசும் துசிடிடிசும்(Thucydides), பல்துறை அறிஞன் அரிசுடாட்டில்(Aristotle) போன்ற பலர் இக்காலத்தில் கிரேக்கத்திலும், அதன் குடியேற்ற அரசுகளிலும் வாழ்ந்தனர்.கிரேக்க அறிவியல் குறித்து, “கி.மு. 300அளவில் வாழ்ந்த இயூக்ளிட் ஜியோமிதியின் அடிப்படைத் தேற்றங்களை வகுத்தார். இரட்டோதெனிசு பூமியின் விட்டத்தை 24000 மைல்கள் எனக் கணக்கிட்டார்.

கி.மு. 150 வாக்கில் தூரங்களைக் கணக்கிடும் முக்கோணக் கணித வடிவங்களை கண்டுபிடிக்கத் தொடங்கினார் கைபார்கசு. அவர் பூமியிலிருந்து நிலவின் தூரத்தை ஓரளவு துல்லியமாகக் கண்டறிந்தார்”(4)(பக்:130). இவை உலக அறிவியலின் வளர்ச்சிக்கு உதவின. ஆகவே கிரேக்கம் உலக மக்களுக்கு நிறைய விடயங்களை வழங்கியுள்ளது என்பது உண்மை.

பார்வை:4. உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார்” பக்: 130.சான்றுகள்:1. The World Book Encyclopedia, USA, 1988, vol-8, page : 390-4022.கிரீசு வாழ்ந்த வரலாறு, வெ. சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், 2003, சென்னை-83. பக்: 1 – 432.3.Ancient History of Encyclopedia – Ancient Greece by Joshua J. Mark dt. 13.11.2013.