சுயமரியாதை இல்லாத திமுக அமைச்சர்கள்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அவலங்கள்…
தாரை இளமதி… சிறப்புச் செய்தியாளர்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றிக்காக பகல், இரவு பாராமல் உயிரை கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.
திமுக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழக்க வேண்டும் என்பதுதான் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் ஆசையாகும்.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் என திமுக பிரபலங்கள் பல்லாயிரக்கணக்கானோர், ஈராடு மாநகராட்சிக்குட்பட்ட வீதிகளில் வீடு வீடாக ஏறி வாக்காளர்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக ஜனநாயக மரபுகளை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு, வாக்கு வேட்டையாடி வரும் திமுகவின் அறம் மற்ற செயல்களை பார்த்து, பேரறிஞர் அண்ணா காலத்து திமுக மூத்த நிர்வாகிளே ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பவள விழா கொண்டாட்டத்தை எதிர்நோக்கியிருக்கும் திமுக, ஒரே ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்காக, அரசியல் மாண்புகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, நிர்வாணமாக திமுக நிற்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் சுயமரியாதை போராளிகள்.
சுயமரியாதை, மாநில சுயாட்சி, சமூக நீதி என 73 ஆண்டுகளுக்கு மேலாக கொள்கை முழக்கங்களை உரக்க கூறிக் கொண்டிருக்கும் திமுக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கையாண்டு வரும் யுக்திகளால், இந்திய அளவில் தமிழ்நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி தர்மத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்த திமுக தலைமை, காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதற்கு முன்பாகவே ஜனவரி 22 ஆம் தேதியே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் முனைப்பான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய தேர்தல் பிரசாரம், 36 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளே வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டவில்லை. ஆனால், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும், திமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல்லாயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இயல்பு நிலையை முழுமையாக களவாடிவிட்டார்கள் ஆளும்கட்சி பிரமுகர்கள் என்று மனம் நொந்து கூறுகிறார்கள் நடுநிலை வாக்காளர்கள்.
காங்கிரஸின் வெற்றிக்காக ஒட்டுமொத்த உழைப்பையும் திமுக செலுத்தி இருப்பது ஒருக்கம் என்றால், திராவிட கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றிக்காக இருநூறு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டிருப்பது திமுகவின் அரசியல் வரலாற்றுக்கு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ற தனிமனிதரின் வெற்றிக்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மட்டுமல்ல, அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட இந்தளவுக்கு உழைப்பையும், கோடிக்கணக்கான பணத்தையும் செலவழிக்க துணிந்திருக்காது என்கிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.
இப்படி, திமுக எனும் மாபெரும் இயக்கத்திற்கே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய அளவில் அவப்பெயரை தேடி தந்திருக்கும் நேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டிருப்பதை எப்படி ஜீரணிக்க முடியும் என்று ஆவேசமாக பொங்குகிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.
திமுகவின் முன்னணி அமைச்சர்களை மட்டுமல்ல, திமுகவின் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உதயநிதி ஸ்டாலினையும் உதாசீனப்படுத்தியிருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனை, திமுக நிர்வாகிகள் ஒருவர் கூட மன்னிக்க மாட்டார்கள் என்று குமறுகிறார்கள் தேர்தல் களத்தில் முகாமிட்டிருக்கும் இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள்.
திராவிட சித்தாந்ததத்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் இல்லை என்பதை இடைத்தேர்தல் களத்திலும் வெளிப்படுத்தி வரும் நஞ்சு குணத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என குமறுகிறார்கள் திமுக நிர்வாகிகள். 35 நாட்களுக்கு மேலான வாக்கு சேகரிப்பு பணியை, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அவரவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ஈரோடு திமுக என்ற பெயரில் டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுகடந்த 35 நாட்களுக்கு மேலாக திமுக நிர்வாகிகளின் பிரசார நிகழ்வுகள் பகிரப்பட்டு வருகின்றன.ஆனால், டிவிட்டர் பக்கத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெயரில் உள்ள பக்கத்தில், திமுக அமைச்சர்களின் பிரசார படமோ, எம்பி, எம்எல்ஏ, மேயர், மாவட்டச் செயலாளர் எனஒரு பிரமுகரின் வாக்கு சேகரிப்பு, தேர்தல் பிரசாரம் எனஅன்றாட நிகழ்வுகளைப் பற்றி ஒரு புகைப்படம் கூட பகிரப்படவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் சாதனைகளைப் பற்றியோ, திமுகவினர் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரம் பற்றியே ஒரு செய்தி கூட இடம் பெறவில்லை.ஆனால், அதற்குப் பதிலாக மறைந்த எம்எல்ஏ ஈவேரா திருமகனின் சாதனைகள் பற்றிய பொதுமக்களின் பேட்டிகள் தான் அதிகமாக பகிரப்பட்டிருக்கின்றன.
35 நாட்களுக்கு முன்பு திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி ஆகியோர்காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று தெரியாத போதே, ஜனவரி 22 ஆம் தேதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். அந்த செய்தி அமைச்சர் கே.என்.நேரு டிவிட்டர் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்படவில்லை. அன்றைய தேதியில் இருந்து பிப்ரவரி 25 ஆம் தேதி திமுகவின் பிரசாரங்கள், வாக்கு சேகரிப்பு பற்றி ஒரு செய்தி கூட பகிரப்படவில்லை.
தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு தலைமை ஏற்றிருக்கும் திமுக முன்னணி தலைவர்களின் பிரசாரங்களை, வாக்கு சேகரிப்பை இரட்டடிப்பு செய்திருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன், பிப்ரவரி 19 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வியும் திமுக மாநில மகளிரணி தலைவி கனிமொழி எம்பியின் வாக்கு சேகரிப்பு நிகழ்வை மட்டும் பகிர்ந்து இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஒட்டுமொத்த திமுகவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர், நேர்மையானவர் என்ற பிம்பத்தை சுமந்து கொண்டிருக்கும் கனிமொழி எம்பிக்கு தமது டிவிட்டர் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுகவின் எழுச்சி நாயகன், நாளைய தலைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதல்வருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிப்ரவரி 20 ஆம் தேதியும் 21 ஆம் தேதியும் மேற்கொண்ட வாக்கு சேகரிப்பு பற்றி ஒரு போட்டோ, ஒரு வீடியோ பதிவு ஆகியவற்றை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிரவில்லை ஈவிகேஎஸ் இளங்கோவன் என்பது எந்தளவுக்கு உள்நோக்கம் கொண்டது என்பதை அறிந்து மனம் நொந்து இருக்கிறோம் என்கிறார்கள் ஈரோடு திமுக நிர்வாகிகள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கியிருந்து இரண்டு நாள்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அவரை திட்டமிட்டே உதாசீனப்படுத்தியிருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உண்மையான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எப்படி மனமுவந்து வாக்களிப்பார்கள் என கண்கள் சிவக்க குரல் கொடுக்கிறார்கள்.
தன் வாழ்நாள் முழுவதும் திமுகவின் கொள்கைகளையும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியையும், அவரது குடும்பத்து வாரிசுகளையும் வசைப்பாடிக் கொண்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றிக்காக, தூக்கத்தை எல்லாம் துறந்து, உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் திமுக அமைச்சர்களில் ஒருவருக்கு கூடவா சுயமரியாதை இல்லை….
திமுக கற்றுக் கொடுத்த தன்மானம் எங்கே போயிற்று…
ஈவிகேஎஸ் இளங்கோவனின் வாக்கு சேகரிப்பு படங்களை திமுக அமைச்சர்கள் அனைவரும் அவரவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், திமுகவினரை தீண்டதகாதவர்களாக அடையாளப்படுத்தும் வகையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதை கண்டு, திமுக முன்னணி நிர்வாகிகள் ஒருவருக்கு கூடவா ரத்தம் கொதிக்கவில்லை என்று நெஞ்சு விம்ம குமறுகிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள்.
அடிமட்ட தொண்டர்களின் ஆவேசக் குரல்கள், திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செவிகளை சென்றடையுமா…