Sat. Jun 3rd, 2023

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாயைத் திறந்து எதை பேசினாலும், அது சர்ச்சையாகி கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் கிண்டலும் கேலிக்கு உள்ளானதை தமிழகமே பார்த்தது.

போர்க்களத்தில் முதற்படையாக அணிவகுத்து சென்றவர்களைதான் முதலியார்கள் என்று சாதியின் பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்று புதிய வரலாற்றை எழுதினார் சீமான்.

இளம்வயதில் இருந்தே அரசியல் களத்தில் முழங்கிக் கொண்டிருக்கும் சீமான், மிகுந்த பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

சமரசங்ளுக்கு ஆட்படாமல் உறுதியான மனநிலையோடு சீமான் முன்வைத்து வரும் தமிழ் தேசியம் பற்றிய புரிதல் இன்றைக்கு அனைத்து தரப்பினரிடமும் குறிப்பாக இளம்தலைமுறையினரிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுதான் திராவிட சிந்தாந்தவாதிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்தான் நடுநிலையான வாக்காளர்களிடம் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை ஆற்றிய போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியரை வந்தேறிகள் என்று கூறியது, அரசியல் களத்திலும், பொதுதளங்களிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது.

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் அருந்ததியர் சமுதாயத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்று சீமான் முழங்கியதை அடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிந்து மிரட்டியிருக்கிறது. சீமானை எதிர்த்து அருந்ததியர் சமுதாயத்திற்காக பாடுபட்டு வரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

சீமானின் தமிழ் தேசியம், யார் தமிழர் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் அழுத்தம் திருத்தமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. யார் யாரெல்லாம் தாய்மொழியாக தமிழை கொண்டிருக்கிறார்களோ., அவர்கள் அனைவரும் தமிழர்களே என்பதுதான் நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் வாதமாக இருந்து வருகிறது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய் மொழியாக கொண்டிருப்பவர்கள், பல தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தாலும்கூட அவர்களை தமிழர்களாக அங்கீகரிக்க முடியாது என்று உரக்கவே முழங்குகிறார்கள்
தமிழ் தேசியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் சீமானின் போர்படைத்தளபதிகள். .

அருந்ததியர் குறித்து ஈரோட்டில் சீமான் முழங்கியது, வரலாற்று ரீதியான உண்மை என்றாலும் கூட அவரை தவிர வேறு எந்தவொரு அரசியல்வாதியும் வெளிப்படையாக கூறவே தயங்குகிறார்கள் என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்துகிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.

நீலகிரி முதல் கிருஷ்ணகிரி வரை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எட்டு மாவட்டங்களில் அருந்ததியர்கள் பல தலைமுறைகளாக பரவலாகவே வசித்து வருகிறார்கள். பெரும்பாலும் அருந்ததியர்கள் விவசாய கூலிகளாகவே வாழ்ந்து வரும் நேரத்தில், பண்ணையார்களாக கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான், மேற்கு மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தொழில் ரீதியாக அருந்ததியர் சமுதாயத்திற்கும் கொங்கு கவுண்டர் சமுதாயத்திற்கும் இடையே விவசாயத் தொழில் இணைப்பு பாலமாக இருந்தாலும் கூட, சின்ன சின்ன பிரச்னைகளில் கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள் அருந்ததியர் சமுதாயத்தினர் என்ற கோபம்,கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக கொங்கு சமுதாய மக்களின் குமறலாக இருந்து கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல், அதிகாரப் பகிர்வுக்கான குரல்கள் அதிகரிக்க தொடங்கிவிட்ட நேரத்திலும், நாடக காதல் என்ற ஒரு விவகாரம் மேற்கு மண்டலத்தில் பூகம்பத்தையே கிளப்பிவிட்டிருக்கிறது.கொங்கு கவுண்டர்களுக்கு அடுத்து பெரிய சமுதாயமாக இருந்து வரும் செங்குந்த முதலியார்களும் கூடவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம் துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று கூறுவோரும் இருக்கிறார்கள்.

பெரும்பான்மையானரான கொங்கு கவுண்டர்கள், செங்குந்த முதலியார்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியபோது, பிற சாதிகளான வன்னியர், நாடார், வேட்டுவக் கவுண்டர் என தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை தவிர்த்த அனைத்து சாதியினரும் ஒரே நோக்கத்தோடு ஓரணில் கை கோர்த்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக பிற சமுதாயத்தினர் ஓரணியில் திரண்டு நிற்கும் நேரத்தில்தான் ஆணவக் கொலைகள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஆணவக் கொலைக்கு எதிராக பொதுவுடைமை சிந்தாந்தவாதிகள் ஓங்கி குரல் கொடுத்து வந்தாலும் கூட, மேற்கு மாவட்டங்களில் வாழும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கண்டு அச்சமடைந்திருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கவசமாக பயன்படுத்துகிறார்கள் அருந்ததியர் சமுதாயத்தினர் என்று தொடர்ந்து குரல் எழுப்பும் மேற்கு மாவட்ட மக்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் அதே அளவுக்கு, ஒட்டுமொத்த அருந்ததியர் சமுதாய மக்கள் மீதும் அதேஅளவுக்கு காட்டி கொண்டிருக்கிறார்கள்.

வன்கொடுமைத டுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த அரசியல் கட்சி ஆதரவாக நிற்கிறதோ, அந்த அரசியல் கட்சியை கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்போம் என்பதுதான் கொங்கு இளைஞர்கள் பேரவையின் பிரதான முழக்கமாக இருந்து வருகிறது.

அதே எண்ணவோட்டத்துடன் செங்குந்த முதலியார்கள், நாடார்கள், வன்னியர்கள் உள்ளிட்ட பிற சாதி மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

மேற்கு மண்டலங்களில் பெரும்பான்மையினராக இருக்கும் கொங்கு கவுண்டர்கள், பரவலாகவும் அடர்த்தியாகவும் இருந்து வரும் செங்குந்த முதலியார்களின் வாக்குகள், தேர்தல் வெற்றிக்கு முக்கியம் என்பதால், ஆளும்கட்சி மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியும் கூட அருந்ததியர் சமுதாயத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

வாக்குக்கு பணம் கொடுத்தால், கும்பல் கும்பலாக வாக்களித்துவிடுவார்கள் என்று அருந்ததியர் சமுதாயத்தை பற்றிய மதிப்பீடுதான் தேர்தலில் ஆதாயம் அடைந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இருந்து வருகிறது. மனதை உறுத்தும் உண்மையை வெளிப்படையாக சொல்வதற்கு தயங்கும் ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் வரிசையில் இடம் பெறும் எண்ணம் சீமானுக்கு எப்போதுமே இருந்ததில்லை.

எப்போதுமே துணிச்சலாக பேசி வரும் சீமான்கூட , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் யுக்தியாக அருந்ததியர் விவகாரத்தை கையாண்டிருக்கிறாரோ என்று சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது என்று வியப்பு காட்டுகிறார்கள் தமிழ்தேசியத்தில் மாறுபட்ட சிந்தனைக் கொண்டவர்கள்.

அருந்ததியர் சமுதாயத்திற்கு எதிராக பேசினால், ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக வாழும் கொங்கு கவுண்டர்கள், செங்குந்த முதலியார்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஒட்டுமொத்த வாக்களித்து விடுவார்கள் என்ற ராஜதந்திரமாகதான் வந்தேறிகள் என்ற வாதத்தை முன் வைத்திருக்கிறார் சீமான் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர்களை வந்தேறிகள் என்று கூறிய சீமானுக்கு எதிராக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போராடுகிறார்களே தவிர, தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நாயுடுகள், செட்டியார்கள் உள்ளிட்ட சமுதாயத்தினர், சீமானுக்கு எதிராக களத்திற்கு வரவில்லை என்பதை உற்று கவனியுங்கள் என்கிறார்கள் சீமானின் போர்படை தளபதிகள்.

தெலுங்கர்கள் இல்லை என்றால் சென்னை நகரமே இருக்காது.. தமிழ்நாடே உருவாகியிருக்காது என்று இன்றைக்கும் கூட நரம்பு புடைக்க முழங்கும் காமாட்சி நாயுடு, அருந்ததியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது ஏன்..?

தமிழர் என்று சொல்லி கொள்வதை விட தெலுங்கர் என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறேன் என்று அடிக்கடி கூறும் நடிகர் ராதாரவி, அருந்ததியருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வராதது ஏன்.?.

சக நடிகரான சீமானை எதிர்க்கும் துணிவு ராதாரவிக்கு இல்லையா..?

ஆளும்கட்சியான திமுகவில் தெலுங்கு பேசும் அமைச்சர்கள், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தெலுங்கு பேசும் முன்னாள் அமைச்சர்கள் என செல்வாக்கு மிகுந்த ஒருவர் கூட அருந்ததியர்களை வந்தேறிகள் என்று கூறிய சீமானுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தாமல், மௌனமாக இருப்பது ஏன்…?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கும் சீமான் தம்பிகளே, அனைத்து கேள்விகளுக்குமான பதில்களையும் வெளிப்படையாக போட்டு உடைப்பதுதான் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது.

ஆளும்கட்சியோ, எதிர்க்கட்சியோ, அருந்ததியர்களை பகைத்துக் கொண்டால், அரசியல் ஆதாயம் பெற முடியாது என்று பயப்படுகிறார்கள்.

ஆனால், அரசியல் ஆதாயக் கணக்கை எப்போதுமே போடாத சீமான், தமிழ் தேசியம் என்ற உயர்த்த லட்சியத்தை அடைவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு அம்சமாக இருந்தாலும், அசைக்க முடியாத அதிகாரம் பெற்றவர்களாக இருந்தாலும் துளியும் கவலைப்பட மாட்டார்.

தேர்தல் களமோ, பொது தளங்களோ, நாம் தமிழர் கட்சிக்கு ஒரே ஒரு சிந்தனைதான்.

தமிழ் தேசியத்தை கட்டமைப்பதற்கு இடையூறாக இருக்கும் எந்தவொரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதை உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தொண்டர்களை சரியாக வழிநடத்தி செல்லும் வல்லமை பெற்றவராக, துணிச்சல் மிகுந்தவராகவே சீமான் வீறு நடை போடுவதால்தான், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும்கட்சியான திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருந்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சியும், தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.

சீமானின் ராஜதந்திரத்திற்கு வெற்றி கிடைக்குமா..

வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 2 ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்…