Thu. Apr 25th, 2024


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தாறுமாறு….


திமுக தோற்க வேண்டும்.. வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும்…

இப்படி குரலை உயர்த்தி சொல்பவர்கள் யார் என்று பார்த்தால் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்படும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இடைத்தேர்தல் தொகுதி நிலவரம் தாறுமாறாக இருக்கிறது என்று அனுபவமிக்க தேர்தல் கள ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆளும்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கே, வாக்குப்பதிவுக்குகான நாள் நெருங்க, நெருங்க பயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்கிறார்கள் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள்.

காங்கிரஸ் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளில், தன்னுடை மகன் திருமகன் ஈவேரா மறைவால் ஏற்பட்ட அனுதாபமும், திமுக அமைச்சர்களின் களப் பணியாலும் எளிதாக வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

ஆனால், முப்பதுக்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள், தேர்தல் பிரசாரத்தில் குதித்துவிட்ட பிறகுதான், இளங்கோவன் கண்களில் தோல்வி பயம் தெரிய ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக வேட்பாளர் தென்னரசு உறுதி செய்தவுடன், போட்டி கடுயைமாக மாறி வருகிறது என்பதை உணர்ந்தவராகதான் இன்றைய தேதியில் இருந்து வருகிறார் இளங்கோவன் என்கிறார்கள் ஈரோடு காங்கிரஸ் பிரமுகர்கள்.

ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு கொடுத்தால் போதும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தது.

ஆனால், திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோரின் வித்தியாசமான வாக்கு சேகரிக்கும் பணியால், ஆளும்கட்சி மீதான அதிருப்தி நடுநிலை வாக்காளர்களிடம் அதிகமாகிவிட்டது என்று தொகுதி முழுவதும் பரவலாக பேசப்படுவதை கேட்டு பயந்து போய் இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஆளும்கட்சியைச் சேர்ந்த திமுக அமைச்சர்கள் படை படையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும்
தன் மீதான அனுதாபம் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், தனக்கு இதுதான் கடைசி தேர்தல் என்று உருக்கமாக பேசி, திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ள வாக்காளர்களின் மனங்களை கரைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்கிறார்கள் ஈரோடு திமுக நிர்வாகிகள்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி முக்கியமல்ல, குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆளும்கட்சி தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

தலைமையின் எண்ணத்தை நிறைவேற்றவே, மூத்த அமைச்சர்களை மிஞ்சிய வேகம் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் காணப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்று புதிய பார்மூலாவை அறிமுகப்படுத்தி, அதிமுக தலைவர்களை கதற விட்டுக் கொண்டிருக்கிறார், அமைச்சர் செந்தில் பாலாஜி.

விளிம்பு நிலையில் உள்ள வாக்காளர்களை, குடும்பம், குடும்பமாக ஒரே இடத்திற்கு வரவழைத்து மூன்று நேர உணவு, திரைப்படம், கரகாட்டம் என பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து குஷிபடுத்தி வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

ஒருநாள் வேலைக்கு சென்றால் எவ்வளவு கூலி கிடைக்குமோ, அந்த தொகையை கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு ஆளும்கட்சியான திமுக தரப்பில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொங்குகிறார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 70 க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்பிக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட திமுக எம்எல்ஏக்கள்
என ஒட்டுமொத்த திமுகவும் ஈரோடு கிழக்கில் தான் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

வாக்காளர்களே அதிர்ச்சியடையும் வகையில் பணத்தை ஆளும்தரப்பில் இறைத்துக் கொண்டிருந்தாலும் கூட
காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் நிற்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு
இன்றைய தேதியில் கூட பயம் போகவில்லை என்கிறார்கள் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்.

ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வாக்காளரை கூட விட்டுவிடாமல்
வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் அதே நேரத்தில்,
கன்னியாகுமரி முதல் ஓசூர் வரை ஒட்டுமொத்த தமிழகத்திலும், திமுக தொண்டர்களிடம் ஒருமித்த குரல் ஒன்று எழுந்து கொண்டிருக்கிறது

ஈரோட்டில் திமுக தோற்க வேண்டும்.

இப்படி அழுத்தம் திருத்தமாக கூறுபவர்கள் திமுக தொண்டர்களாகவே இருக்கிறார்கள்.

திமுக தொண்டர்களைப் போலவே, அரசு பணியாளர்களும் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்களும், போக்குவரத்து பணியாளர்களும்
ஆளும்கட்சியான திமுகவுக்கு ஈரோடு வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று சாபம் விடாத குறையாக கொந்தளிக்கிறார்கள்.

ஆளும்கட்சியாக வந்துவிட்ட பிறகு திமுக தலைமையிடம் ஏற்பட்டுள்ள மாற்றம், அப்பாவி தொண்டர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அடிமட்ட தொண்டர்களின் நலனில் துளியும் அக்கறை இல்லாத ஆட்சி தலைமைக்கு சரியான பாடம் புகட்ட இடைத்தேர்தல் அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று திமுக நிர்வாகிகளே வெளிப்படையாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக தலைமைக்கு எதிராக உட்கட்சிலேயே கொந்தளிப்பான மனநிலை இருந்து வரும் இந்தநேரத்தில்,
ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலரும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோற்க வேண்டும் என்ற சிந்தனையிலதான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள்.
,
முதல்வர் குடும்பத்தில் உள்ள அனைவரின் நட்பையும் குறுகிய காலத்திலேயே பெற்று இருக்கும் வி.செந்தில்பாலாஜி,
மூத்த திமுக அமைச்சர்களுக்கு கூட கட்டுப்படுவதில்லை என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிய பார்மூலாவை அறிமுகப்படுத்தி அசுரவேகத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வரும் வி.செந்தில் பாலாஜி, ஈவிகேஎஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, திமுக தலைமையின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுவிட வேண்டும் என்ற திட்டத்தோடு இருக்கிறார் என்கிறார்கள் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகள்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டால் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தங்களுக்கு உரிய செல்வாக்கு குறைந்து விடும் என்று கவலைப்படும் மூத்த அமைச்சர்கள்,
அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவில் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்வதை துளி கூட விரும்பவில்லை என்கிறார்கள்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் தோல்வி திமுக அடிமட்ட தொண்டர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் அதே நேரத்தில், திமுக மூத்த அமைச்சர்களுக்கும் மகிழ்ச்சியை தான் ஏற்படுத்தும் என்கிறார்கள் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்.
இடைத்தேர்தல் தோல்வி திமுக தலைமைக்கு பாடம் புகட்டுவதைப் போலவே, அமைச்சர் செந்தில்பாலாஜியின் அசுர வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போட்டு விடும் என்ற எண்ணவோட்டம் திமுக மூத்த அமைச்சர்களிடம் நிலவி வருவதாக கூறுகிறார்கள்.


ஆளும்கட்சியான திமுகவிற்குள்ளேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் தோற்க வேண்டும் என்ற எண்ணவோட்டம் பரவலாக இருந்து வரும் நிலையில்,
இரட்டை இலைச் சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் உற்சாகமாகியிருக்கும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு நாளுக்கு நாள் வாக்காளர்களிடம் அதிகரித்து வரும் செல்வாக்கை பார்த்து, உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியிடம் காணப்படும் போராட்ட குணம், அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம், குறிப்பாக கொங்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் தோன்றினால், வீழ்த்த முடியாதவர் அல்ல ஈவிகேஎஸ் இளங்கேவான் என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிரூபித்து காட்டும் என்கிறார்கள் அதிமுக விசுவாசிகள்.