Sun. Nov 24th, 2024

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு விநோதமான நோய் ஒன்று பற்றி இருக்கிறது.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் கேள்விப்பட்டிராத அநியாயம், பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு முதல்முறையாக தலைமை ஏற்றிருக்கிற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அரங்கேற்றப்பட்டு வருவதுதான் கல்வியாளர்களையும், ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் சமூக ஆர்வலர்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களான ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆளுமைகளாக கொண்டாடப்படுபவர்களை எல்லாம் தேடித் தேடி முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் ஆட்சி என்று ஆவேசமாக குரல் எழுப்புகிறார்கள் கல்வித்துறையில் அனுபவம் மிகுந்த ஆன்றோர்கள்.

ஆன்றோர்களின் அறச்சீற்றத்தை புறம்தள்ளிவிட்டு சென்று விட முடியாது என்பதற்கு அண்மைக்கால நிகழ்வு ஒன்றை நல்லரசுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார் பிரபல கல்வியாளர் ஒருவர்.

ஜனநாயகத்தின் மீதும், எதிர்கால மன்னர்களான இளம்தலைமுறையினரின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டிருப்பதும், ஜனநாயகத்திற்கு விரோதமான எந்தவொரு நிகழ்வோடும் சமரசம் செய்து கொள்ளாத நல்லரசு இணையதளம், கல்வியாளர்களின் அறச்சீற்றத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவதை கடமையாகவே கருதுகிறது.

சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் அண்மைக்காலமாக தவிர்க்க முடியாத பிரமுகராக மாறியிருக்கிறார் யூ டர்ன் செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன்.

பிரபல ஊடகவியலாளராக இன்றைய தேதியில் உருமாறியிருக்கும் ஐயன் கார்த்திகேயன், திமுக அரசையும், திராவிட சித்தாந்தங்களையும் ஆதரித்து ஆவேசமாக முழங்கி வருகிறார். இவரைப் போல நடுநிலையான ஊடகவியலாளர்கள் எண்ணற்றவர்கள் பாஜகவுக்கு எதிரான சிந்தனைப் போக்கு கொண்டிருந்தாலும் கூட, பொதுதளங்களில் ஊடகவியலாளர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு திமுக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால், ஐயன் கார்த்திகேயனின் திமுக ஆதரவு நிலைப்பாட்டை அங்கீகரிக்கும வகையில் அண்மைக்காலமாக திராவிட மாடல் ஆட்சியாளர்கள், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனதை குளிர வைக்கும் வகையில், கல்வித்துறையில் ஐயன் கார்த்திகேயனின் நீண்ட கால அனுபவ அறிவுரைகள், பள்ளி மாணவர்களை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களைப் போல உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் ஆற்றல் மிக்கது என்ற நம்பிக்கையோடு, கார்த்திகேயனை கொண்டாட ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கு நேர்ந்துவிட்ட சாபமாகும் என்கிறார்கள் பிரபல கல்வியாளர்கள்.

கடந்த 16 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக ஐயன் கார்த்திகேயன் பங்கேற்றுள்ளார்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்ட ஐயன் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை என்.எஸ்.எஸ்.ஸில் அதிகமாக சேர்ப்பதற்கான வழிமுறைகளை குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இந்த தகவலை புகைப்படத்துடன் அவருடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ஆவேசப்படும் கல்வியாளர்கள், நாட்டு நலப்பணித் திட்டத்தில் கார்த்திகேயன் நிபுணத்துவம் பெற்றவரா? அந்த துறையில் சிறப்பாக பணியாற்றி மத்திய அரசின் சிறப்பு பரிசுகளைப் பெற்று தற்போதும் பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒருவர் கூடவா., பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து, பல மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று, தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசுகளை பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமையை தேடி தந்த முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள் பற்றிய புரிதலோ.. இல்லை தேடி கண்டுபிடித்து அவர்களை மரியாதைக்குரியவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற சிந்தனையோ கல்வித்துறை அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது எவ்வளவு அதிர்ச்சிகரமான ஒன்று.

தங்கள் கண் முன்னால், அதுவும் திமுக ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் திடீர் பிரபலங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து வந்து அரசு ஆசிரியர்களுக்கு, அலுவலர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூற வைப்பது என்பது எந்த அளவுக்கு தரம் தாழ்ந்த செயலாகும்.

பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இன்றைக்கு அனைத்து துறைகளிலும் திமுக அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்களை சான்றோர்களாக அங்கீகரித்து அடையாளப்படுத்தும் மனநோய் அரசு அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருப்பதுதான் மிகுந்த வேதனையை தரக்கூடியாக ஒன்றாக மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆசிரியர் பணியில் சிறந்த சேவையை வழங்கி மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுகளை பெற்ற சான்றோர்கள்.

பிரபல கல்வியாளர்கள், ஆன்றோர்களின் மனவேதனைக்கு ஏற்பதான் ஊடகவியலாளர் ஐயன் கார்த்திகேயனின் கருத்தாக்கமும் அமைந்திருக்கிறது என்பதை, டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து வரும் தகவல்களும் உறுதி செய்யும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகரில் ராணுவ வீரர் பிரபு என்பவரை, பொது குடிநீர் தொட்டியில் துணி துவைத்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது இரண்டு மகன்களும் காட்டுமிராண்டிதனமாக தாக்கியதில், ராணுவ வீரர் பிரபு மரணமடைந்திருக்கிறார்.
அரசியல் பின்புலம் தந்த தைரியத்தில், சின்னசாமி கும்பல் அரங்கேற்றிய கொடூர தாக்குதலில் பிரபுவின் மற்றொரு சகோதரரும் ராணுவ வீரரான பிரபாகரன், அவர்களது தந்தை மாதையன் ஆகியோரும் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

சாதாரண ஒரு விவகாரத்தில், திமுக கவுன்சிலரும் அவரது மகன்களும் கொடூரமான தாக்குதலை நடத்தியிருப்பது, பிரபல, மூத்த ஊடகவியலாளரான ஐயன் கார்த்திகேயன் பார்வையில், நெருங்கிய உறவினர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலாக தெரிகிறது என்றால், அவரின் சமுதாய பணிக்கு பள்ளிக்கல்வித்துறை நிகழ்வில் மட்டுமல்ல, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அரிய கருத்துகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்பே கொடுக்கலாம்.

அப்படியொரு அற்புதநாளை எதிர்நோக்கி காத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகம்…