பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு
மத்தியில் ஆட்சி அமைத்த இந்த 9 ஆண்டுகளில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பிரபலங்கள்
ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழிசை, பார்பனரான இல.கணேசன், கொங்கு கவுண்டரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மூவரில் இல.கசேணன் சீனியர் என்று கூறுப்படும் நிலையில், ஏறக்குறைய அவரது காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸிலும் பாரதிய ஜனதாவிலும் உறுப்பினராக தேசிய அரசியலை முன்னெடுத்தவர் ஹெச்.ராஜா.
40 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் வாழ்க்கையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக கூட ஹெச்.ராஜாவை, டெல்லி மேலிடத் தலைவர்கள் நியமனம் செய்யவில்லை.
அதை விட துயரமாக, ஹெச்.ராஜாவை விட பாரதிய ஜனதாவில் இளையவர்களான தமிழிசை சவுந்தராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆளுநராக நியமித்து இருவரின் உழைப்பை அங்கீகரித்திருக்கிறது பாஜக மேலிடம். ஆனால், தமிழ்நாட்டில் ஹெச் ராஜாவை முக்கியமான ஆளுமையாக கருதி, எந்தவொரு முக்கியமான பதவிகளையும் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பதுதான் ஹெச்.ராஜாவுக்கு என்று இருக்கும் ஒரு சில ஆதரவாளர்களின் சோகக் குரலாக இருக்கிறது.
ஹெச். ராஜாவை டெல்லி பாஜக மேலிடம் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவது ஏன் ?
விரிவாக பார்ப்போம் நண்பர்களே…
ஹரிஹரன் ராஜா சர்மா என்று அழைக்கப்படும் ஹெச். ராஜா, 1989 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கிறார். அதற்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ்ஸில் நீண்ட கால ஊழியராக இருந்திருக்கிறார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதாவில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல பதவிகளை வகித்திருக்கிறார்.
பாரதிய ஜனதாவில் பிரபலமான தலைவராக உருவெடுத்த ஹெச்.ராஜா, 1999 ல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்.
ஆளும்கட்சியான திமுக தலைமையிலான வலுவான கூட்டணி வேட்பாளராக சிவகங்கையில் களம் கண்டார் ஹெச்.ராஜா.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 26 இடங்களிலும், பாரதிய ஜனதா நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற போதும், ஹெச்.ராஜா தோல்வியடைந்தார்.
2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக தயவால், ஹெச் ராஜா, எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
2006 ல் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, படுதோல்வியை சந்தித்தார்.
2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார் ஹெச். ராஜா.
2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து இருக்கிறார் ஹெச்.ராஜா.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பை மட்டுமல்ல,
மரியாதைக்குரிய வாக்குகளை கூட ஹெச் ராஜாவால் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பெற முடியவில்லை என்பதுதான் ஹெச்.ராஜாவின் அரசியல் பயணத்தில் அவமானகரமான அம்சம் என்கிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்காளர்கள் மட்டுமல்ல, பாஜக மேலிடத் தலைவர்கள் பிரதமர் மோடி, தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சரும் அகில இந்திய பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவருமான ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என செல்வாக்கு மிகுந்த தலைவர்கள், தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜாவை ஆதரித்து பிரதமர் மோடி முதல் அகில இந்திய பாஜக தலைவர்கள் ஒருவர் கூட பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்பது அன்றைய தேதியிலேயே மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெல்லி பாஜக தலைவர்களைப் பொறுத்தவரை ஹெச். ராஜா, ஒரு டம்மி பீஸ். அவர் எம்பியாகி டெல்லிக்கு வருவது முக்கியமல்ல என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில்தான் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் பிரசார பயணத்திட்டம் வெளிப்படுத்தியிருந்தது.
அகில இந்திய பாஜக தலைவர்களாக இருப்பவர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமான தலைவர்களாக இருப்பவர்களும் ஹெச். ராஜாவுக்கு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை.
30 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதாவுக்காக நரம்பு புடைக்க கத்திக் கொண்டும் கதறிக் கொண்டும் இருக்கும் ஹெச். ராஜாவை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் அமர்த்துவதற்கு கூட பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பியதே இல்லை என்பது தான் யதார்த்தம் என்கிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜாவை வெறுத்து வருவதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டில் பொதுமக்களின் நன்மதிப்பை பெறுவதற்குப் பதிலாக அதிகமான வெறுப்பை சம்பாதித்து வைத்திருப்பதுதான் என்கிறார்கள்.
இந்து மதத்தை தூக்கி நிறுத்துகிறேன் என்று கூறிக் கொள்ளும் ஹெச். ராஜா, சிறுபான்மை
சமுதாயமான கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதையே அன்றாட அரசியல் பாணியாக கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு டெல்லி வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய், திரைப்படங்களில் பேசும் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கூறிக் கொண்டு அவரை கிறிஸ்துவர் என்று அடையாளப்படுத்தி அவதூறு பரப்புவதை இளைஞர்கள் கூட்டம் சுத்தமாக ரசிப்பதே இல்லை.
2014 முதல் 2022 ம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் அவதூறு பேச்சு பேசியதற்காக ஹெச். ராஜா மீது எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் கைது முயற்சியும் நடைபெற்றிருக்கிறது.
போலீஸாரின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீதிமன்றம் மூலம் முன்ஜாமீனும் பெற்றிருக்கிறார் ஹெச். ராஜா.
அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் ஹெச். ராஜாவின் மத துவேஷச பேச்சுகளால் மதக்கலவரம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்று நீதிமன்றமே பயந்து போனதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.
நீதிமன்றத்தையும், நீதிபதிகள் குறித்தும் ஹெச்.ராஜா மிரட்டல் விடுத்தது எல்லாம், தமிழ்நாடு பாரதிய ஜனதா அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை.
2018 ஆம் ஆண்டில் ஹெச். ராஜாவின் அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளால் கவலைப்பட்ட நீதிமன்றம், ஹெச். ராஜாவின் மனநிலையை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் என்று சென்னை காவல்துறைக்கு அறிவுரை கூறிய அவலத்தையும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி எதிர்கொண்டது.
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு ஹெச். ராஜா, அரசியல் பண்பாட்டை இழந்து மிரட்டல் போக்கை கையாண்டு வருகிறார்.
அரசியல் கட்சியினரை ஆபாசமாக பேசுவது,
பாரதிய ஜனதாவுக்கு எதிராக கேள்வி கேட்கும் செய்தியாளர்களை தேச துரோகி என்று அர்ச்சனை செய்து, சிறையில் அடைத்தால் தான் திருந்துவீர்கள் என்று கோபத்தை வெளிப்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளால் ஹெச். ராஜாவின் பெயர், இந்தியா முழுவதுமே நாறிப் போயிருக்கிறது.
ஹெச்.ராஜாவை கண்டால் துஷ்டனை கண்டால் தூர விலகி போவது போலதான் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள், பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் விலகி போய் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள்
தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை அறிந்து கொள்வதற்காக பாஜக மூத்த நிர்வாகிகள், பிரபல யூ டியூப் ஆளுமைகள் ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸ் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்து மணிக்கணக்கில் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த பட்டியலில் ஹெச். ராஜாவுக்கு எந்தவொரு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்பதில் இருந்தே, பிரதமர் மோடியாகட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாகட்டும் ஹெச். ராஜாவை எக்ஸ்டரா லக்கேஜ் போலதான் கேவலமாக பார்க்கிறார்கள் என்று மனம் நொந்து கூறுகிறார்கள் தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள்.
பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு இந்த 9 ஆண்டுகளில் மூன்று தமிழர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் தனித்த திறமைகளும், பாஜக மீதான விசுவாசமும், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டு மக்களின் பேரண்பை பெற்றவர்களாகவும் இருப்பதுதான். தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசியலை கடந்து நாகரிகமான மனிதர்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பவர்கள்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்த்தாலும் மூவருக்கும் தமிழ்நாட்டு மக்களிடம் மிகுந்த மரியாதை இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால், ஹெச். ராஜா, கண்ணியமிக்கவர், ஒழுக்கசீலர், நேர்மையானவர் என்று ஹெச். ராஜாவை பாரதிய ஜனதா நிர்வாகிகளே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை என்பது ஹெச். ராஜாவை பொறுத்தவரை குப்பைதான்.
ஹெச் ராஜாவின் அரசியல் செயல்பாடுகளால் தமிழ்நாடு பாரதிய ஜனதா இம்மியளவு கூட வளர்ந்துவிட வில்லை. அதைவிட கொடுமையானது என்றால், ஹெச்.ராஜாவின் அவதூறான, அநாகரிகமான, மதவெறுப்பு பேச்சுகளால் தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் செல்வாக்கு சரிந்து கொண்டுதான் இருக்கிறது.
பொது வாழ்வில் மனித பண்போடு நடந்து கொள்ளும் குணம் பிறவிலேயே இல்லாத ஹெச். ராஜாவுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இனிவரும் காலங்களில் எந்தவொரு முக்கியத்துவமும் கிடைக்கப்போவதில்லை.
ஆளுநர் பதவி தேடி வரும் என்று ஹெச். ராஜா காணும் கனவு, பகல் கனவாகதான் இருக்கும்.
அரசியல் வாழ்வில் அஸ்தமனத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார் ஹெச். ராஜா என்பதுதான் இன்றைய தேதியில் யதார்த்தமான ஒன்று.
நன்றி நண்பர்களே மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்பில் மீண்டும் சந்திக்கலாம்…