பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கை:
*இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லையென்றால், விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?
*ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணிக்கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா?
*ஆதரவாக பேசவில்லையென்பதற்காக இளையராஜாவை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு…
இதேபோல, இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு டாக்டர் அம்பேத்கர் கனவு கண்டதைப் போலவே, பிரதமர் மோடியும் கனவு காண்கிறார் என்ற பொருள்பட தான் கூறிய கருத்துக்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இதன் பிறகும் கூட இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்கள் நின்ற பாடில்லை. இந்நிலையில்தான், அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் அவரை எதிர்ப்போருக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.