Tue. Apr 30th, 2024

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கே.கே.பாட்டீல் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான கட்டணத்தில் உயர்தர சிகிச்சையை வழங்கவுள்ளது.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சிறப்பான சிகிச்சையை இந்த மருத்துவமனை வழங்குவதை உறுதிசெய்யும்.
மக்களை அதிகமாக பாதிக்கும் நோய்களுக்கு சிறப்பான மருத்துவச் சேவை கிடைப்பதில் எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது. சிகிச்சை வழங்குவதில் சமூக நீதியையும் பின்பற்ற வேண்டும்.
உயர்தரமான சிகிச்சைகள் ஏழைகளுக்கும் எளிதாக கிடைக்கும்போதுதான், மருத்துவத்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
மத்திய அரசின் சிறப்பு காப்பீடு திட்டங்களின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பல கோடி ரூபாய் அளவுக்கான மருத்துவ வசதிகளைப் பெற்று வருகின்றனர்.
வரும் பத்தாண்டுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியா சாதனை படைக்கும் நிலை உருவாகும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி துவங்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. அனைத்துத் தரப்பினருக்கும் எளிதாக மருத்துவக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யப்படும்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உயர்தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கடமையாக இருக்கிறது.
குஜராத் மாநில மக்கள் சுற்றுலாத் துறையிலும், நீர் சேகரிப்பு திட்டதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு உள்ளூர் அளவிலான பொருளாதாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.