Fri. Nov 22nd, 2024

இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் (Geographical Survey of India) தலைமை இயக்குனராக (Director General) தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் S. ராஜு இன்று (01.04.2022) பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்தியப் புவியில் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குனராக 2018 முதல் பணியாற்றிவரும் இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பசுவந்தனை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியலில் முதுகலைப் பட்டமும், லக்னோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், 1988-இல் இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றி வருகிறார்.

முனைவர் S. ராஜு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில், துணைத் தலைமை இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் (2015-2018), திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம் மற்றும் சாத்தனூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதைப்படிவ மரப் பூங்காக்களை தனது பிரத்தியேக கவனத்தில் எடுத்துக் கொண்டு சீரமைத்து மேம்படுத்தினார்.

தமிழ்நாட்டின் சென்னை மாநிலப் பிரிவின் புதிய அலுவலக மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை நிர்மாணித்ததில் முக்கியப் பங்காற்றியாவர் முனைவர் ராஜு. தலைமை இயக்குனராக பதவியேற்றுக் கொண்ட முனைவர் ராஜுக்கு இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் அலுவலர்கள், பணியாளர்கள் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.