Mon. Apr 29th, 2024

ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டி தருணம் வந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்,, அமித்ஷாவின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் காட்டம்

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தி:

ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்று காட்டமாக எச்சரித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சித்தராமையா ஆவேசம்

இதேபோல, கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரையில்,

இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல; இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் ஆதாரம் ஆகும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்பது கடும் கண்டனத்திற்குரியது. பன்முகத்தன்மையே இந்தியாவை ஒரே நாடாக வைத்திருக்கிறது; பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பொருள் மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பது தான்!

இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் ஆகும். அதை ஏற்றுத் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு!

இந்தியாவின் மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்பதால் தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம்!

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்!

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸும் தெரிவித்துள்ளார்.