Sat. Nov 23rd, 2024

சிறப்புக் கட்டுரை… பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து

நகர அரசுகள்(கி.மு.3500-3050): நகர உருவாக்கம் தான் நாகரிகத்தின் தொடக்கம் என்ற முறையில் எகிப்திலும் கி.மு. 3500 அல்லது அதற்கு முன்பே சிறு சிறு நகரங்கள் உருவாகி இருந்தன. அதன் காரணமாக எகிப்தில் கி.மு. 3050க்கு முந்தைய காலத்தில் நோம் (Nome) எனப்படும் நகர அரசுகளுக்கான பிரிவுகள் இருந்தன. அதற்கு என தலைவர் அல்லது அரசர்(Great overLord) இருந்தார். அவர்கள் மிக நீண்டகாலமாக பரம்பரையான (Hereditary) முறையில் ஆண்டுவந்தனர். ஒவ்வொரு நோமும் ஒரு தலைநகரத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நோமுக்கும் ஒரு கடவுள் அல்லது தெய்வம் இருந்தது.இதனை அடிப்படையாகக் கொண்டுதான் கி.மு. 3050க்குப் பிந்தைய பேரரசுக் காலத்திலும் எகிப்தானது நோம் என்ற பிரதேசப் பிரிவுகளைக் கொண்டிருந்தது.

கீழ் எகிப்தில் 20 நோம்களும் மேல் எகிப்தில் 22 நோம்களும் இருந்தன. ஆனால் 3050க்கு முன் இருந்த நகர அரசுகள் குறித்த தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த நகர அரசுகளுக்கிடையே நிறையப் போர்கள் நடந்தன. இறுதியாக கி.மு. 3050 வாக்கில் நார்மர்(Narmer) அல்லது மெனிசு(Menes) என்பவரால் எகிப்து ஒரே அரசாக ஆக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த நோம்கள் ஒவ்வொன்றும் நோமார்ச்(nomarch) எனப்படும் ஆளுநர்களைக் கொண்டு ஆளப்பட்டது. இந்த நோம்கள் குறித்தும் நோமார்ச்கள் குறித்தும் கி.மு. 2670ஆம் ஆண்டு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இவை கி.மு. 3050க்கு முன்பிருந்த தனி அரசுகளைப் பற்றியதாகும்(Predynastic kingdoms) என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆகவே இவை முன்பு நகரஅரசுகளாக இருந்துள்ளன. உரோம் கி.மு. 30இல் எகிப்தை ஆளும் காலம்வரை இந்தப் பிரிவுகள் இருந்துள்ளன. கி.மு. 2450 ஆண்டு வாக்கில் இருந்த ஐந்தாவது அரச வம்சத்தைச் சேர்ந்தவர் எகிப்தில் அதிகாரப் பகிர்வைக் கொண்டுவந்தார். அதன் மூலம் இந்த நோமார்ச்கள் அதிக அதிகாரம் கொண்டவர்களாக ஆனார்கள். அதன் காரணமாக இருண்ட காலம் எனப்படும் முதல் இடைப்பட்ட காலத்தில்(கி.மு. 2181–2055) மத்திய ஆட்சியின் அதிகாரம் இல்லாமல் போய் இவை தனித்தனி அரசுகளாகப் பிரிந்து போயின. இதன்பின் கி.மு. 2050 வாக்கில், மத்திய அரசின் காலத்தில் (கி.மு. 2050-1710) இந்த நோம்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. நோம், நோமார்ச் ஆகியன கிரேக்கச் சொற்கள். சான்று: Encyclopedia of Ancient Egypt By Margaret Bunson Dt. 14.5.2014 page: 120, 153, 211, 244, 245, 280.

தொடக்ககால அரச வம்சம்(கி.மு. 3050-2675):கி.மு. 3050இல் எகிப்து ஒன்றிணைக்கப்பட்டு ஒரே அரசாக ஆக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் தேசிய அரசாகும். இக்காலத்தில் முதல் இரண்டு அரசவம்சங்கள் கி.மு. 3050-2675 வரை ஆண்டன. கி.மு. 3050 வாக்கில் எகிப்தில் எழுதும் முறை(Hieroglyphic script) பயன்படுத்தப்பட்டது. இந்தத் தொடக்ககால அரசவம்சத்தில் தலைமை கடவுளுக்கு கோயில் கட்டப்பட்டது. பல தெய்வங்கள் வணங்கப்பட்டன. இக்காலத்தில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது உறுதியாக்கப்பட்டது.

பண்டைய அரச வம்சம் (கி.மு. 2675-2190): இக்காலகட்டத்தில் மெம்பிசு(Memphis) நாட்டின் தலைநகராக இருந்தது. மூன்றாவது முதல் ஆறாவது அரச வம்சங்கள் வரை இக்காலத்தை ஆண்டன. இமோடெப் (Imhotep) என்பவர் எகிப்தில் கி.மு. 2667-2600 காலத்தில் வாழ்ந்தவர். இவர் 100 நோய்களுக்கும் 48 காயங்களுக்குமான மருத்துவத் தீர்வை வழங்கியுள்ளார். இவர் ஒரு கவிஞர். கட்டிடக்கலைஞர், கணிதவியலாளர், வானவியல் அறிஞர் எனப் பல துறைகளில் வல்லுநராக இருந்தவர். இவர்மூலம்தான் முதல் பிரமிடு கி.மு. 2650ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் அரசன் கடவுளாக ஆக்கப்பட்டான். இக்காலத்தில்தான் நோம்களை சுதந்திரமாக ஆண்டு வந்தவர்கள் வரி வசூலிக்கும் ஆளுநர்களாக ஆக்கப்பட்டனர்.

மத்திய அரசு வலிமையானதாக ஆனது. அதன் மூலம் பிரமிடுகளைக் கட்டுவதற்கான செல்வ ஆதாரங்களை திரட்டுவதற்கு மத்தியில் அதிகாரங்களைக் குவித்தனர். இக்காலம் பிரமிடுகளின் காலம் எனச் சொல்லும் வகையில் அதிக பிரமிடுகள் இக்காலத்தில் கட்டப்பட்டன. இதன் இறுதிக்காலத்தில் நைல் நதியின் நீர் வரத்து குறைந்து போய் நாட்டில் வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடின. அதனால் மத்திய ஆட்சி வலுவிழந்து போய், முதல் இடைப்பட்ட காலத்தில்(கி.மு. 2190–2060) மீண்டும் நோம்கள் தனி அரசுகளாக ஆகின. இடைப்பட்ட காலம் 7ஆவது முதல் பத்தாவது வரையான அரச வம்சங்களைக் கொண்டதாக இருந்தன. இவை பலவீனமான அரசுகளாக இருந்தன.

மத்திய அரசகாலம்(கி.மு. 2060-1795): இக்காலகட்டத்தின்(Middle Kingdom) துவக்கத்தில் கி.மு. 2050இல் மீண்டும் நோம்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இக்காலத்தில் 11ஆவது அரச வம்சம் முதல் 14ஆவது அரச வம்சம் வரை ஆண்டன. 12ஆவது அரச வம்ச காலத்தில் எகிப்தின் வலிமையும் செல்வமும் அதிகரித்தது. இறுதிக்காலத்தில் கி.மு. 1670இல் எகிப்தில் குடியேறிய கைகோசுகள்(Hyksos) ஆட்சியைக் கைப்பற்றி 100 வருடம் ஆண்டனர். அதன் காரணமாக இரண்டாவது இடைக்காலம்(கி.மு. 1795-1550) ஏற்பட்டது. இக்காலத்தில் 15 முதல் 17 வரையான அரச வம்சங்கள் ஆண்டன. 17ஆவது அரச வம்சம் மீண்டும் எகிப்தின் ஆட்சியை நிலைநிறுத்தியது.

சான்றுகள்:1. The World Book Encyclopedia, USA, 1988, vol-6, page: 140-142. 2.Ancient Cities By Charles Gates 2nd edition, page: 78-117.3.Ancient History of Encyclopedia by Joshua T.Mark, 2.9.2009.