Mon. Apr 29th, 2024

சிறப்புக் கட்டுரை

பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து

பாரசீகப்(Persian) பேரரசு(கி.மு. 550-220):

இப்பேரரசு சைரசு பேரரசனால் (Cyrus the Great) கி.மு. 550 இல் தொடங்கப்பட்டு 220 ஆண்டுகளுக்குப்பின் கிரேக்க வீரன் அலெக்சாண்டரின் படையெடுப்பால் கி.மு. 330 இல் முடிவுக்கு வந்தது. இந்த பாரசீகர்கள் கி.மு. 1000 வாக்கில் ஈரானின் வடமேற்கு பகுதிகளிலும், பின்னர் கி.மு. 850 வாக்கில் ஈரானின் மேற்குப் பீடபூமிப்பகுதியிலும் நாடோடிகளாக இருந்த ஆரிய இனக்குழுக்கள். இவர்கள் தொடக்கத்தில் அன்சான்( Anshan ) என்ற நகரத்தை ஆள்பவர்களாக இருந்தார்கள். இந்நகரத்தை டெய்சுபசு(Teispes), சைரசு-1(Cyrus-I) ஆகியோருக்குப் பின் கி.மு. 580 வாக்கில் காம்பிசசு-1(Cambyses-I) என்பவர் ஆண்டார். அவரது மகன் தான் பாரசீகப்பேரரசை உருவாக்கிய சைரசு-II(Cyrus-II) ஆவார்.

இவரது காலம் கி.மு. 559-530. இவர் மெசபடோமியா முழுவதையும், மத்திய ஆசியாவையும் கைப்பற்றி பெரும் பேரரசை உருவாக்கினார். அதன் பின் அவரது மகன் காம்பிசசு-II(Cambyses-II) என்பவர் ஆண்டார். இவரது காலம் கி.மு.530-522 ஆகும். இவர் எகிப்தைக் கைப்பற்றினார். இவருக்குப்பின் டேரியசு-1(கி.மு. 521–486) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் கிரேக்க நகர அரசுகளைக் கைப்பற்ற கி.மு. 492இல் போர் தொடுத்தார். இவர் தொடக்கத்தில் ஒரு சில கிரேக்க நகர அரசுகளையும், மாசிடோனியாவையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். ஆனால் கி.மு. 490இல் மாரத்தான் போரில் அவரது படையை கிரேக்க நகர அரசுகள் தோற்கடித்தன. அவருக்குப்பின் அவரது மகன் எரக்செசு-1(Xerxes-I) என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவரது காலம் கி.மு.486–465 ஆகும்.

கிரேக்க நகர அரசுகளை வெற்றிகொள்ள பெரும்படையோடு சென்ற அவர் தொடக்கத்தில் சில வெற்றிகளைப் பெற்று ஏதென்சு நகரை கைப்பற்றி அழித்த போதும் இறுதியில் கிரேக்க நகர அரசுகள் கடற்படைப் போரிலும் நிலப்போரிலும் பெரு வெற்றி பெற்று பாரசீகப்படையை கிரேக்கப்பகுதியில் இருந்து வெளியேற்றின. இவருக்குப்பின் இவரது மூன்றாவது மகன் ஆர்ட்டெரக்செசு-1( Artaxerxes-I) என்பவர் ஆட்சியேற்று கி.மு. 465-424 வரை ஆண்டார். இவர் கி.மு. 450இல் கிரேக்க நகர அரசுகளோடு நடத்திய போரில் இருவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதன்பின் பாரசீகர்கள் கிரேக்க நகர அரசுகளோடு போரிடுவதை நிறுத்திக்கொண்டனர்.

வரலாற்றில், கிரேக்க நகர அரசுகள் பாரசீகத்தின் மீது பெற்ற வெற்றியை, பழந்தமிழக அரசுகள்(கி.மு.295-288) மௌரியப் பேரரசின் மீது பெற்ற வெற்றியோடு ஒப்பிடலாம். ஆர்ட்டெரக்செசு-1 க்குப்பின் வந்தவர்களில் ஆர்ட்டெரக்செசு-II(Artaxerxes II ) என்பவர் கி.மு. 404-359 வரை மிக நீண்ட காலம் ஆண்டார். அதன்பின் ஆர்ட்டெரக்செசு-III(Artaxerxes-III) என்பவர் கி.மு. 359-338 வரை ஆட்சி செய்தார். இரு தடவை எகிப்தின்மேல் இவர் படையெடுத்தார். அதன் ஆட்சியாளாராகவும்(first Pharaoh of the 31st dynasty) ஆனார். இவரும் இதன்பின் ஆட்சி ஏற்றவரும் விசம் வைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

இறுதியாக டேரியசு-III(Darius-III) என்பவர் கி.மு. 334இல் ஆட்சியேற்றார். அதே காலகட்டத்தில் அலெக்சாண்டர் பாரசீகத்தின் மேல் படையெடுத்துப் பல இடங்களில் அதன் படைகளைத் தோற்கடித்தார். இறுதியாக கி.மு. 330இல் பாரசீகம் அலெக்சாண்டரின் ஆட்சியின் கீழ் வந்தது. பாரசீகப் பேரரசில் இந்தியாவின் மேற்குப்பகுதியும், எகிப்தும், மத்திய ஆசியாவும், மத்திய கிழக்கு நாடுகள் பலவும் இருந்தன. இதன் காலத்தில் சௌராசுடிரம்(Zoroastrianism) என்ற மதம் பாரசீகத்தில் உருவாகி மக்களால் பின்பற்றப்பட்டது. இவர்கள் பாரசீகம்(Persian) என்ற இந்தோ-ஐரோப்பிய மொழியை பேசினர். இவர்களது பாரசீக மொழி பழைய பாரசீகம் எனப்படுகிறது. இந்த பழைய பாரசீக மொழி கியூனிபார்ம் எழுத்து முறையால் எழுதப்பட்டது. அதிலிருந்து உருவான புதிய பாரசீக மொழிதான் இன்றைய ஈரான் நாட்டின் மொழியாக உள்ளது. ஆனால் அது அரபு எழுத்தில் எழுதப்படுகிறது.

சான்று: 1. The World Book Encyclopedia, USA, 1988, vol-15, page: 297-301. 2. Ancient History Of Encyclopedia-Achaemenid Empire by Peter Davidson dt 11.2.2011. 3.Ancient Iran – Britannica.com written by Roman Chrishman, T.Cuyler Young, Adrian David Hugh Bovar, Mark J. Dresden. 4. விக்கிபீடியா இணையதளங்கள்.

பார்த்தியன் பேரரசு(Parthian)🙁 ஈ)

பார்த்திய பேரரசு(கி.மு.247-கி.பி.224):

இதன் சிறந்த அரசனான. Mithridates-I (கி.மு.171–138), கி.மு. 330 முதல் பாரசீகத்தை ஆண்டுவந்த கிரேக்க அரசை முழுமையாக தோற்கடித்து பார்த்திய அரசை பெரும்பேரரசாக நிறுவினான். பார்த்திய அரசர்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் உரோம் படைகளைத் தோற்கடித்து அதன் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தினர்.இப்பேரரசு பண்டைய ஈரானின் மிக முக்கிய அரசியல் பண்பாட்டு சக்தியாக விளங்கி, அதன் மரபுகளை பாதுகாப்பதாக இருந்தது. இப்பேரரசு சீனாவின் பட்டுச்சாலைக்கும்(Silk-Road) மத்தியதரைக்கடல் நாடுகளுக்கும் இடையே இருந்ததால் வணிக அளவில் பெரும்பயனடைந்தது. இப்பேரரசில் இந்தோ ஆரிய மொழியான பார்த்தியன் மொழி அரசு மொழியாக இருந்தது.

கி.பி. 224இல் இப்பேரரசு வீழ்த்தப்பட்டு அவ்விடத்தில் சசானிய பேரரசு(Sassanid Empire) உருவாகியது.சான்று: 1. The World Book Encyclopedia, USA, 1988, vol-15, page: 185. 2.Parthia, Ancient Region of Iran – Britannica.com written by Editors of Brittanica Encyclopedia.சசானிய பேரரசு(Sassanid Empire):சசானியப் பேரரசின் காலம் கி.பி. 224-651. இதனைப் புதிய பாரசீகப் பேரரசு (Neo-Persian Empire) எனவும் கூறுவர். இதன்பின் ஈரான் முசுலீம் பேரரசின் ஒரு பகுதியாக ஆகி இறுதியில் ஒரு முசுலீம் நாடாக ஆகியது. இப்பேரரசு ஈரான் நாகரிகத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக இருந்தது. அன்றைய உலக அளவிளான ஒரு பெரும் பேரரசாக இது இருந்தது. இதன் பண்பாடு இந்தியா, சீனா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் பெரும் செல்வாக்கு வகித்தது. இப்பேரரசு மத்திய கிழக்கு முதல் இன்றைய பாக்கிசுதான் வரையிலும் வடக்கே மத்திய ஆசியா வரையிலும், துருக்கி, எகிப்து போன்றவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இப்பேரரசு உரோம், கிழக்கு பைசாண்டிய பேரரசுகளுக்கு மாறுபட்ட, ஒருவகையில் அதற்கு எதிரான பேரரசாகவும் இருந்தது. இதன் பண்பாடு, கலை, இலக்கியம், இசை போன்றன முசுலீம் உலகிற்குக் கொண்டுபோகப்பட்டன. இடைக்காலத்தில் முசுலீம் பண்பாடு வரும்வரை இப்பண்பாடு பல விடயங்களைப் பேணிப் பாதுகாத்து வந்தது. இவர்களின் அரசு மொழி பாரசீகம்.சான்று: 1.Ancient Iran – Sasaniyan period – Britannica.com2.Ancient History of Encyclopedia – By Alonso Constenla Cervantes dt 17.5.2013.மெசபடோமிய நாகரிகங்கள்:முதலில் அங்கு சுமேரிய நாகரிகம் உருவானது. அது நகர அரசுகளைக் கொண்டதாக இருந்தது. அதன் காலம் கி.மு. 5000-1750. அதன் பிற்காலத்தில் அக்காடியன் பேரரசு(கி.மு.2350-2050) உருவானது. பின் மூன்றாவது ஊர் அரசு ஆண்டது., அதன்பின் பாபிலோனிய நாகரிகம். அதன் காலம் 1750-550. பாபிலோனிய அரசு கி.மு. 1750-1595 வரையும் பின் கி.மு. 626-550 வரையும் இருந்தது.

இடையே(கி.மு. 1595-1400) துருக்கிய கிட்டைட்டி அரசு பாபிலோனியப் பகுதியை ஆண்டது. அதன்பின் மெசபடோமியாவின் மிட்டாணி அரசு சிறிது காலம் ஆண்டது. பின் ஈரானிய அசிரிய அரசு ஆண்டது. அசிரிய நாகரிக காலம் கி.மு. 1200-612. அதன்பின் பாபிலோனிய அரசு(கி.மு.626-550). பின் ஈரானின் பாரசீக நாகரிகம். அதன்காலம் கி.மு. 550-330. பின் அலெக்சாண்டரும் அவரது கிரேக்க தளபதியும் ஆண்டனர். காலம் கி.மு.330-247. அதன்பின் ஈரானின் பார்த்தினிய பேரரசு. அதன் காலம் கி.மு.247- கி.பி.224. பின் வருவது ஈரானின் சசானிய பேரரசு. அதன் காலம் கி.பி. 224-651. கி.பி.651க்குப் பின் இப்பகுதியில் முசுலீம் அரசுகள் உருவாகின.

ஆகவே மெசபடோமியாப் பகுதியை பல அரசுகள் ஆண்டன. அங்கு சுமேரிய நகர அரசுகள் காலத்தில் சுமேரிய மொழியும், பின் அக்காடியப் பேரரசு காலத்தில் அக்காடியன் மொழியும், பாபிலோனியர் காலத்தில் பாபிலோனிய மொழியும் அரசு மொழிகளாக இருந்தன. மிட்டணி அரசு ஆண்டபோது உறியன் மொழி பேசப்பட்டது. இது தனி மொழிக்குடும்பமாகும். இதன் பின் அசிரிய மொழியும், பார்த்திய மொழியும் அரசு மொழிகளாக இருந்தன. இறுதியாக பாரசீக மொழி அரசு மொழியாக ஆனது. ஆகவே இப்பகுதியில் பல மொழிகள் பேசப்பட்டன///