பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி வரும் 16 ஆம் தேதி, புதிய அரசை அமைக்கிறது. அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கிறார்.
அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவோர் குறித்து, அக்கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் பகவந்த் மான் இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு டெல்லி முதல்வராகவும் பதவி வகிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை பகவந்த் மான் அழைப்பு விடுத்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், ஆம் ஆத்மி ஆட்சியை பிடிப்பது உறுதியானவுடன் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், புதிய அரசு பதவியேற்பு விழா, பஞ்சாப் மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெறாது என்றும், சுதந்திர போராட்ட தியாகி பகத் சிங்கின் சொந்த ஊரில்தான் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன.
ஆம் ஆத்மி அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் குறித்த பட்டியலை நாளை அல்லது அதற்கு மறுநாள் ஆளுநரை சந்தித்து பகவந்த் சிங் வழங்குவார் என்றும் அதற்கு முன்பாக முறைப்படி, பஞ்சாப் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, தங்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவராக பகவந்த் சிங்கை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம், நாளை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை வாரி வழங்கிய பஞ்சாப் மாநில மக்களுக்கு, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து நன்றி தெரிவிக்கும் பணியில் பகவந்த் சிங் தீவிரம் காட்டி வருகிறார். இருவரும் இணைந்து வரும் 13 ஆம் தேதி அமிர்தசரஸில் பேரணியில் பங்கேற்று பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளனர்.
ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று ஆளுநரை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளதாக பஞ்சாப் மாநில செய்தி நிறுவம் தகவல் தெரிவித்துள்ளது. பகவந்த் சிங், நாளை (மார்ச் 12) ஆளுநரை சந்தித்து ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளார்.