Fri. Nov 22nd, 2024

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 சுற்றுக்கு மேல் மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதும், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதனைதொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் நான்கு பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்த குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்கவில்லை.

இதனைத்தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி தங்கள் போராட்டததை தீவிரப்படுத்துவதாக அறிவித்த, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிஷன் மோர்ச்சா, பிப். 18 ஆம் தேதி நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் பரவலாக நண்பகல் 12 மணி முதல் விவசாயிகள் ரயில் போராடடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, அந்தந்த மாநில போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இன்று மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் சார்பில் ஏறகெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, பீகார், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.