Sat. Nov 23rd, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஆயிரக்கணக்கானோர் அந்தமான் தீவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மீனவர்கள் 8 பேரை இந்தோனேசியா கடற்படை சிறைபிடித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து தொழில் ஈடுபடுவது பாரம்பரியமாக வழக்கத்தில் உள்ளது. இதேபோல, கன்னியாகுமரி மீனவர்கள் கொச்சி, கேரள துறைமுகங்களையும், மகாராஷ்டிரா உள்ளிட்ட துறைமுகங்களையும் மையமாக கொண்டு மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானர் அந்தமான் தீவில் தங்கி மீன் பிடித் தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் வழக்கப்படி, அந்தமான் கடற்பகுதியையொட்டிய ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்தோனேசியா கடற்படை வீரர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 8 மீனவர்களை சிறைப் பிடித்ததுடன், அவர்கள் பயணம் செய்த விசைப்படகையும் பறிமுதல் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக இந்தோனேசியாவில் உதவிக்கு யாருமின்றி சிரமப்பட்டு வரும் 8 தமிழக மீனவர்களும், அந்தமானில் உள்ள சக மீனவர்களுக்கும் கன்னியாகுமரியில் உள்ள மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் வாட்ஸ் அப் மூலம் உதவி வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் 8 பேரை இந்தோனேசியா கடற்படை சிறைப்பிடித்துள்ளதை உறுதி செய்துள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், அந்தமானில் தங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள், இதுபோன்ற சிறைப்பிடிப்பு, படகு பறிமுதல் போன்ற நடவடிக்கைகளால் பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும், பிற நாடுகளின் நடவடிக்கைகளில் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், இந்தோனேசியாவில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக சிறைப்பட்டிருக்கும் 8 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யபட்ட விசைப்படகை எவ்வித சேதாரம் இன்றியும் இந்தோனேசியா அரசு திரும்பி ஒப்படைக்கும் வகையில், , மத்திய அரசுக்கு தமிழக அரசு கடுமையான அழுத்தம் தர வேண்டும் என அந்தமான் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One thought on “தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இந்தோனேசியா…உடனடியாக மீட்க கோரிக்கை…”

Comments are closed.