உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி முதல்முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்ககிறது.
5 மாநில சட்டபேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
துவக்கம் முதலே உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி…
உத்தரப்பிரசேதத்தில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆளும்கட்சியான பாஜக 264 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. முற்பகல் 11 மணியளவு நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அந்த மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 123 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டும் கூட, அம்மாநிலத்தில் காங்கிரஸ் பரிதாபமான தோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக 89 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், பெரும்பான்மை இடங்களுக்கு கூடுதலாக அக்கட்சி பெற்றுள்ளதால், ஆளும் காங்கிரஸை வீழ்த்தி முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் கட்சியும் 14 இடங்களிலும் அகாலி தளம் 10 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
கோவாவில் பாஜக ஆட்சி
கோவாவில் உள்ள மொத்த தொகுதியான 40 இடங்களில் பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 3 வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. அந்த கட்சி 3 இடங்களிலும் ஆம் ஆத்மி 1 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. கோவாவில் ஆட்சி அமைப்பதற்கு 20 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற நிலையில், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுகளுடன் கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் பிரகாசமாக இருக்கிறது.
மணிப்பூரிலும் பாஜக ஆட்சி
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 27 இடங்களில் பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்தை பிடித்துள்ள காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 24 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தனிப்பெரும்பான்மை கட்சியாக பாஜக உள்ள நிலையில், மணிப்பூரிலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
உத்தரகாண்டில் ஆட்சி அமைக்கிறது பாஜக
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 42 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.