Fri. Nov 22nd, 2024

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ராணுவனத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வரும் நிலையில், ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் குண்டுவீச்சில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாணவரின் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர்மோடி ஆறுதல் தெரிவித்தார்.

உக்ரைன் தலைநகர் கீவில் நிலைமை கடுமையாக மோசமடைந்து வரும் நிலையில், அந்நகரில் இருந்து இந்தியர்கள் உடனடியாக இன்றே (செவ்வாய்க்கிழமை) வெளியேற வேண்டும் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

எந்த வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி உடனே வெளியேற வேண்டும். உக்ரைன் எல்லைகளையொட்டியுள்ள எந்தவொரு நாட்டிற்கும் பயணிக்க வேண்டும் என அவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு ரயில் பயணங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவித்திருந்த உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள நகரங்களில் இருந்து விரைவாக வெளியேறுங்கள் என இந்திய மாணவர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, உக்ரைனில் இன்னும் 2,223 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் மாநில வாரியாக எத்தனை தமிழக மாணவர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை முழுமையாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

உக்ரைனில் அதிகபட்சமாக கார்கிவ் மாநிலத்தில் 728 மாணவர்களும், தலைநகர் கீவில் 352 மாணவர்களும் சிக்கித் தவிப்பதாக அரசு தெரிவித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த ரஷ்ய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்துள்ளதை ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

குண்டு வீச்சில் இன்று காலை உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் தந்தையிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

இதனிடையே, உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட குழுவின் கலந்தாய்வு கூட்டம், பிரதர் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்படும் நான்காவது உயர்மட்டக்குழு கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு டெல்லியில் உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு நேரில் ஆஜராகுமாறு மத்திய அரசின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனையடுத்து, இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.