Sat. Nov 23rd, 2024

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தேனாம்பேட்டையில் சைக்கிள் ரோந்தின்போது, இருசக்கர வாகனம் மோதி தோள்பட்டை எலும்பு முறிவடைந்து சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, புதிய சைக்கிள் பரிசளித்தார்.

தலைமைக் காவலர் M.செந்தில்குமார், (வ/44,)தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். தலைமைக் காவலர் செந்தில்குமார் தினந்தோறும் சைக்கிளிலிலேயே ரோந்து பணி மேற்கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் செந்தில்குமார், நேற்று முன்தினம் (12.10.2021) மதியம் சுமார் 12.30 மணியளவில், பணியின்போது, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, அண்ணா அறிவாலயத்திலிருந்து, காவல் நிலையம் நோக்கி சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம், தலைமைக் காவலரின் சைக்கிள் மீது மோதியதில், இருவரும் நிலை குலைந்து கீழே விழுந்து காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்ததில், தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு இடது தோள்பட்டை அருகில் Collar Bone முறிவடைந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பசுல்லா என்பவருக்கு உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. எலும்பு முறிவுக்கான சிகிச்சை பெற்ற தலைமைக் காவலர் செந்தில்குமார் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். மேலும், மேற்படி விபத்து சம்பவம் குறித்து, தலைமைக் காவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவில், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.., நேற்று (13.10.2021), மாலை ஆலந்தூர், M.K.N. சாயிலுள்ள காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு வசித்து வரும் தலைமைக் காவலர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து, காயம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

பின்னர் மருத்துவ பரிசோதனைகள், ஊடுகதிர் படங்களை (X-ray) பார்வையிட்டு, மருத்துவ ஆலோசனைப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தினார். மேலும், மேற்படி தலைமைக் காவலர் பெரும்பாலும் சைக்கிளில் ரோந்து செல்வது தெரியவந்ததால், காவல் ஆணையாளர் அவர்கள் விபத்தின்போது சேதமடைந்த சைக்கிளுக்கு பதிலாக புதிய சைக்கிளை தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு பரிசாக வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

பின்னர் ஆலந்தூர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.