உத்தரப்பிரதேசத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் மற்றும் பலியான ஊடகவியலாளர்கள் குடும்பத்திற்கு சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் முதல்வர்கள் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண உதவி தொகைகளை அறிவித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று இரண்டு மாநில முதல்வர்களும் தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று, குழுவாக சென்றுக் கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றினார். இந்த கொடூர நிகழ்வில் 4 விவசாயிகள் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும், இந்த நிகழ்வை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.க்கு வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உள்ளூர் போலீசார் தடுத்து நிறுத்தி, தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி, லக்னோவுக்கு செல்வதாக அறிவித்தார். ஆனால், அவரின் வருகைக்கு உ.பி. பாஜக அரசு அனுமதி மறுத்துவிட்டது.
இதனையடுத்து, பஞ்சாப் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களின் காங்கிரஸ் முதல்வர்களுடன் ராகுல்காந்தி, லக்னோவில் உள்ள விமான நிலையத்திற்கு சற்றுமுன் வந்துள்ளார். ராகுல்காந்தி உள்ளிட்ட மூவரையும், லக்கீம்பூர் செல்ல உ.பி. போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், விமான நிலையத்திலேயே ராகுல்காந்தியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்கள், உயிரிழந்த விவசாயிகள் மற்றும் ஊடகவியலாளர் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பக்கம் இரண்டு மாநில காங்கிரஸ் அரசுகள் நிற்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
லக்கீம்பூருக்கு ராகுல்காந்தி பயணம்
ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், பகல் 2.30 மணியளவில், அனைத்து அரசியல்கட்சியினரும் லக்கீம்பூர் செல்ல உ.பி. மாநில அரசு அனுமதியளித்தது. 5 பேருக்கு மிகாமல் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்களுடன் ராகுல்காந்தி, லக்கீம்பூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், கூட்டத்திற்குள் கார் பாய்ந்த போது நிகழ்ந்த கொடூரங்கள் குறித்தும் விவசாயிகளிடம் நேரில் கேட்டறியவுள்ளதாக, உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் தகவல் தெரிவித்தனர்.